துணிவு விமர்சனம் : துணிவு தெறிக்கவிடும் புல்லட்டுக்கள் நடுவே நடக்கும் அதிரடி ஆக்ஷன் மாஸ் களத்தில் வீரம், விவேகம், விழிப்புணர்வுடன் பரபரக்கும் வங்கிக்கொள்ளை | ரேட்டிங்: 3.5/5

0
1244

துணிவு விமர்சனம் : துணிவு தெறிக்கவிடும் புல்லட்டுக்கள் நடுவே நடக்கும் அதிரடி ஆக்ஷன் மாஸ் களத்தில் வீரம், விவேகம், விழிப்புணர்வுடன் பரபரக்கும் வங்கிக்கொள்ளை | ரேட்டிங்: 3.5/5

பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் துணிவு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எச்.வினோத்
இதில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா, பகவதி பெருமாள், மமதி சாரி, சிபி, ஜி.எம்.சுந்தர், சிராக் ஜானி, பிரேம் குமார், மகாநதி சங்கர், நயனா சாய், அமீர், அஜய், ஜி.பி.முத்து, மோகன சுந்தரம், ரிதுராஜ் சிங், சிஜோய் வர்கீஸ், பிர்லா போஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :ஓளிப்பதிவு : நிரவ் ஷா, இசை: ஜிப்ரான்,எடிட்டர்: விஜய் வேலுகுட்டி,ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர், நடன இயக்குனர்: கல்யாண்,கலை இயக்குனர்: மிலன், பிஆர்ஒ- சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்.

யூவர்ஸ் வங்கியை கொள்ளையடிக்க கும்பல் தலைவன் ராதா (வீரா) ஒரு காவல் அதிகாரியின் உதவியுடன் திட்டமிடுகிறான். சென்னையின் பிரதான பகுதியில் இயங்கும் அந்த பிரபல தனியார் வங்கியில் கொள்ளையடிக்க நினைக்கும் 1500 கோடியுடன்; சட்டவிரோதமாக மறைத்து சேமித்து வைக்கப்பட்டுள்ள 500 கோடி தான் அவர்கள் இலக்கு. இந்த திட்டத்துடன் உள்ளே நுழையும் அந்த கும்பல், வங்கிக்குள் உள்ள பொதுமக்கள், ஊழியர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது, ஏற்கனவே வங்கியை கொள்ளையடிக்க டேர் டெவில் குழுவின் தலைவன் அஜித்குமார் உள்ளே இருப்பது தெரிய வருகிறது. பணத்தை பிரித்துக் கொள்வதில் ஒப்பந்தம் செய்யப்பட்டு கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் அஜித் கொண்டு வருகிறார்.  அஜித்தின் திட்டத்தை நிறைவேற்ற அவருடைய கூட்டாளி கண்மணி (மஞ்சு வாரியர்) அவருக்கு வெளியில் வேனில் இருந்து கொண்டு கண்காணிப்பு வீடியோக்களை கையாண்டு உதவுகிறார். திடுக்கிட்டுப்போகும் காவல் துறை தயாளன் (சமுத்திரக்கனி) தலைமையில் அஜித்துடன் சமரச முயற்சி மேற்கொண்டு வருகிற நேரத்தில் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கிறது. வங்கிக் கொள்ளையை திட்டமிடும் அஜித் எதற்காக இதை செய்தார்? உண்மையில் காரணம் என்ன? கொள்ளையர்களிடமும், காவல்துறையினரிடமிருந்தும் தப்பித்தாரா? 500 கோடி பணத்தை கொள்ளையடிக்க மட்டும் தான் வங்கிற்கு வந்தாரா? இதை விட பெரிய தொகை இருப்பதை கண்டுபிடித்து வந்தாரா? பின்னணி என்ன? என்பதே விறுவிறுக்கும் க்ளைமேக்ஸ்.

டேர் டெவில் அஜித்குமார் தோன்றும் முதல் காட்சியே அட்டகாசப்படுத்திவிட்டார். சால்ட் லுக், மூன் வாக், சிங்கம் போல் கர்ஜிக்கும் அழகு, நேர்த்தியாக கொள்ளையர்களை கையாளும் விதம், வங்கியின் உரிமையாளர்களை நேரிடையாக பேச்சு வார்த்தைகக்கு அழைத்து துளைக்கும் கேள்விகள், படம் முழுவதும் நான்ஸ்டாப் ஆக்ஷனும், துப்பாக்கியும் தான் அஜித்தின் கூடுதல் பலமாக படம் முழுவதும் பயணம் செய்திருக்கிறது. அஜித் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படி தன்னுடைய இயல்பான, ஸ்டைலான பக்குவான நடிப்பால் படத்தை தன் தோளில் தாங்கி பிடித்துள்ளார் என்றால் மிகையாகாது. பாராட்டுக்கள்.

மஞ்சு வாரியர் கண்மணியாக அஜித்திற்கு ஆரம்பம் முதல் இறுதி வரை உதவும் பெண்மணியாக முக்கியமான கதாபாத்திரம், படத்தில் அதிரடி ஆக்ஷன், துப்பாக்கி ஏந்தி அனைத்து காட்சிகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார்.

போலீஸ் கமிஷனராக சமுத்திரக்கனி. கான்ஸ்டபிளாக மகாநதி சங்கர், பேங்க் மேனேஜராக ஜிஎம் சுந்தர், பேங்க் சேர்மனாக ஜான் கொகேன்,  வீரா, தொலைக்காட்சி உயரதிகாரியாக மமதி சாரி, சிபி,  சிராக் ஜானி, பிரேம் குமார், நயனா சாய், அமீர், அஜய், ஜி.பி.முத்து,  ரிதுராஜ் சிங், சிஜோய் வர்கீஸ், பிர்லா போஸ்  ஆகியோர் பங்களிப்பு ஒருபுறம் இருக்க மற்றோரு புறம் டிவி நிருபராக மோகனசுந்தரம், இன்ஸ்பெக்டராக பகவதி பெருமாள் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் சுவாரஸ்யம், நகைச்சுவை கலந்து சிறப்பாக பண்ணியுள்ளனர்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் அதிரடி சண்டை பகுதிகளை ரசிகர்கள் ரசிக்கும் பாணியுடன் படம்பிடித்திருக்கிறது கூடுதல் சிறப்பு. பரபரக்கும் திரைக்கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவை தனக்குரிய ஸ்டைலில் நேர்த்தியாக கொடுத்து காட்சிக்கோணங்களில் அசத்தியுள்ளார்.வங்கி, கட்டிடங்கள், காமெண்டோ குழுக்கள், குண்டு வெடித்து சிதறும் கார்கள், சண்டைக் காட்சிகள், இறுதியில் கடற்படை காட்சிகள் கண்களுக்கு விருந்து.

ஜிப்ரான் ஆக்ஷன் படத்திற்கேற்றவாறு பொருத்தமாகவும், வித்தியாசமாகவும் இசையமைத்திருக்கிறார். அதனால் கதை கடத்தும் உணர்வுக்கும் பின்னணி இசைக்கும் பொருத்தமாக இருந்து விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

சண்டைக்காட்சிகள் தான் படத்தின் உயிர் நாடி. அதனை திறம்பட கையாண்டு மிரட்டியிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்.

எடிட்டர்: விஜய் வேலுகுட்டி, கலை இயக்குனர்: மிலன் இவர்களின் பங்களிப்பு தனித்துவமிக்க இப்படத்தின் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பான டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில் பங்குச்சந்தை நிலவரத்தையும், பரிவர்த்தனையின் போது ஹேக்கர்ஸ் மூலம் பணம் கையாடல் நடைபெறுவதை காட்டும் முதல் காட்சி முதல் இறுதிக்காட்சியில் இன்டர்நேஷனல் கடல் எல்லையில் கேங்ஸ்டர்கள் தப்பிக்கும் காட்சிகளை வரை எச் வினோத்தின் கதை சுவாரஸ்யமானது, விறுவிறுப்பானது. மேலும் எப்போதாவது வரும் ஃப்ளாஷ்பேக்குகள் முன்னணி கதாபாத்திரங்களைப் பற்றி கொஞ்சம் விவரித்து சென்று விட்டாலும் பொதுவாக மக்களுக்கு புரிய வேண்டிய விஷயத்தை மட்டும் கையிலெடுத்து அதனை விரிவாக கொடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் எச்.வினோத். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்வது, கிரெடிட் கார்ட் உபயோகிப்பதால் ஏற்படும் நஷ்டம், வங்கிகளுக்கு கிடைக்கும் லாபம், வங்கிகளில் தரும் எந்த ஒரு விண்ணப்பத்திலும் படித்துப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போடுவது, மினிமம் பேலன்ஸ் காணாமல் போவது, மியூச்சுவல் ஃபண்டில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்ய வாடிக்கையாளர்களை ஏமாற்ற வங்கி ஊழியர்கள் தங்கள் நற்சான்றிதழ்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், வங்கி முதலாளிகள் கிடைக்கும் பணத்தை முதலீடு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி கபளீகரம் செய்கிறார்கள் என்பதை சில காட்சிகளில் விவரித்தாலும் நச்சென்று உரைக்கும் விதத்தில் காட்சிகளை அமைத்து சாதக பாதகங்களை விவரித்துள்ளதற்காக இயக்குனர் எச்.வினோத்திற்கு பாராட்டுக்கள். முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதி விழிப்புணர்வு.

ஒரு வங்கியில் ஒரு நபரின் தாக்குதலைப் பற்றியது போல் தோன்றினாலும் உண்மையில் அரசியல்வாதிகள், நிதி நிறுவனங்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் உட்பட மக்களின் நலனை உறுதிப்படுத்தும் பணியில் உள்ளவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மக்களே என்பதை விவரிக்கிறார். டார்க் டெவில் ஒரு வில்லன் என்றால், அந்த ஊழல் அதிகாரிகளையும், ஏமாற்றுபவர்களையும் என்ன என்று அழைப்பது என்ற கேள்விக்குறியுடன் படத்தை முடித்துள்ளார்.இன்டர்நேஷனல் நெட்வொர்க் கலந்த வங்கி கொள்ளையில் நடக்கும் பின்னணி கதைக்களத்தை விறுவிறுப்பு, எதிர்பார்ப்பு கலந்து இரண்டாம் பாகத்திற்கான அறிகுறியுடன் படத்தை முடித்துள்ளார் இயக்குனர் எச்.வினோத்.

மொத்தத்தில் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் துணிவு தெறிக்கவிடும் புல்லட்டுக்கள் நடுவே நடக்கும் அதிரடி ஆக்ஷன் மாஸ் களத்தில் வீரம், விவேகம், விழிப்புணர்வுடன் பரபரக்கும் வங்கிக்கொள்ளை.