டாணாக்காரன் விமர்சனம்: அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக போர் கொடி தூக்கி சாதிக்கும் அசகாய சூரன் இந்த காவல்காரன் | RATING : 3.5 Star

0
281

டாணாக்காரன் விமர்சனம்: அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக போர் கொடி தூக்கி சாதிக்கும் அசகாய சூரன் இந்த காவல்காரன் | RATING : 3.5 Star

பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் தமிழ்.இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர், மதுசூதனராவ், பாவேல், போஸ்வெங்கட்,லிவிங்ஸ்டன், பிரகதீஸ்வரன், கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், ஒளிப்பதிவு-மாதேஷ் மாணிக்கம், எடிட்டர்-பிலோமின் ராஜ், கலை-திருமுருகன் எஸ்.ராகவன், சண்டை-ஸ்டன்னர் சாம், நடனம்-ஷெரிஃப், தயாரிப்பு நிர்வாகி-சசிகுமார், ராஜாராம், பிஆர்ஒ-ஜான்சன்.

1998ம் ஆண்டு பொழிலாறு தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளியில் சேருகிறார் எம்.ஏ.கிரிமினாலஜி படித்த அறிவு(விக்ரம்பிரபு).அவருடன் சேர்ந்து 350 பேர் புதிதாக சேர அதில் சிலர் 1982ல் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்கு அழைக்கப்படாமல் இருக்க, நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஜெயித்து வருவதற்குள் நாற்பது வயதிற்கு மேல் ஆகிவிட மனத் தளராமல்  இந்த இளங்குழுவுடன் பயிற்சியில் சேருகின்றனர். இந்த பயிற்சியை கொடுப்பதற்கு ஈஸ்வரமூர்த்தி(லால்) செல்லக்கண்ணு(எம்.எஸ்.பாஸ்கர்) ஆகியோர் இருக்க, அவர்களுக்கு மேலதிகாரிகளாக முத்துபாண்டி(மதுசூதனராவ்), மதி(போஸ் வெங்கட்) உயர்அதிகாரிகளாக இருக்கின்றனர். ஈஸ்வரமூர்த்தியும், முத்துபாண்டி அந்த பயிற்சிப் பள்ளியில் முக்கிய நபர்களாக இருவரும் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று எழுதாத சட்டத்தை வைத்து அராஜகம் செய்கின்றனர். இவர்களை எதிர்த்து அங்கு யாரும் கேள்வி கேட்கமுடியாத சூழ்நிலை நிலவுகிறது.  இவர்களை அனுசரித்து செல்பவர்கள் வெற்றி பெற்று பெரிய பதவிகளை அடைந்து இவர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கின்றனர். இதனால் இவர்களின் அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது.

இதனிடையே பயிற்சி காவலர்கள் அனைவரும் பல்வேறு ஸ்குவாட்களாக பிரிக்கப்பட, ஈஸ்வரமூர்த்தியின் கீழ் அறிவு மற்றும் வயதானவர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தக் குழுவில் உள்ள வயதானவர்களை பயிற்சி மையத்திலிருந்து விரட்ட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஈஸ்வரமூர்த்தி செயல்படுகிறார். முதலில் கழிவறை பிரச்னை ஏற்பட, அதற்காக குரல் கொடுக்கும் அறிவும் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட, அதன் பின் சிறு தவறுகளும் பெரிதாகப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளையும் சிரமங்களோடு எதிர்கொள்கின்றனர். அத்தனை தண்டனைகளையும், கொடுமைகளையும் சகித்து கொண்டு ஜெயித்து ஈஸ்வமூர்த்திக்கும், முத்துபாண்டிக்கும் பெரிய தலைவலி கொடுக்கிறார் அறிவு. இருந்தாலும் சித்தப்பா என்ற வயதான காவலர் தாக்கு பிடிக்க முடியாமல் இறந்து போக, இதனால் கொதிப்படையும் அறிவும் மற்ற காவலர்களும் அவமானங்களை தாங்கிக் கொண்டு பயிற்சி மையத்தில் நடக்கும் போட்டிக்கு தயாராகின்றனர். இந்த போட்டியில் ஈஸ்வரமூர்த்தியின் கீழ் ஒரு ஸ்குவாடும், செல்லக்கண்ணுவின் கிழ் அறிவும், வயதான நண்பர்கள் ஸ்குவாடும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.எதற்காக அறிவு காவலர் பதவிக்கு ஆசைப்படுகிறார்? அறிவு விடாமுயற்சியோடு ஈஸ்வரமூர்த்தியை தோற்கடித்து ஜெயித்தாரா? அதன் பின் நடந்தது என்ன? என்பதே படத்தின் முடிவு.

காவலர் அறிவுவாக விக்ரம் பிரபு கம்பீர நடை, உடை, பாவனை என்று டாணாக்காரன் கெட்டப்பில் சிறிதும் மாறாமல் சிரத்தையுடன் நடித்துள்ளார். தந்தையின் ஆசையை நிறைவேற்ற அத்தனை அநீதிகளையும் சகித்து கொள்ளும் கதாபாத்திரம், தட்டிக் கேட்டால் அனுபவிக்கும் தண்டனை, எதிர்த்தால் பயிற்சி எடுக்க முடியாமல் அவதிப்படுவது என்று உணர்ச்சிகளை அடக்கி பின்னர் தன் சாதுர்யத்தால் வெற்றி காண்பது, மற்றவர்களை வழி நடத்திச்செல்வது என்று நெஞ்சை நிமிர்த்தி சாதித்து சொல்லியிருக்கிறார். கடின உழைப்பு, பயிற்சி என்று படம் முழுவதும் தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தி கை தட்டல் பெறுகிறார்.

காவல் அதிகாரி ஈஸ்வரியாக அஞ்சலி நாயர் முரட்டுகளத்தில் ஜில்லென்று வந்து விட்டு போகிறார். தந்தையாக லிவிங்ஸ்டன் சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிறப்பு.
பயிற்சியின் போது முத்துப்பாண்டியை அடித்ததன் மூலம் இன்ஸ்பெக்டர் கனவு நனவாகாமல் போக காவல் ஏட்டாகவே பதவி உயர்வு கிடைக்காமல் இருந்து வரும் செல்லக்கண்ணுவாக எம்.எஸ்.பாஸ்கர், இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பயிற்சியாளராக, நடைமுறையில் இருக்கும் அதிகாரித்தை மாற்ற முடியாமல் தவிக்கும் தவிப்பு, உள்ளக்குமறல் என்று  இறுதிக் காட்சியில் தன் ஸ்குவாட்டை ஜெயிக்க வைத்து பெருமிதத்துடன் நிற்பது அசத்தல். தன் எண்ணத்தை மாற்ற நினைக்கும் முத்துப்பாண்டிக்கு தன் செயல் மூலம் பாடம் கற்பித்து, பதவி முக்கியமில்லை எதிர்கால இளைஞர்கள் வாழ்க்கை தான் முக்கியம் என்பதை தெளிவுபடுத்துவதில் முதிர்ச்சியுடன் நடித்துள்ளார்.

லால் என்ற பெயரை விட ஈஸ்வரமூர்த்தி, மதுசூதனன் என்ற பெயரை விட முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தின் பெயரை அழுத்தமாக பதிய செய்து வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கும் இருவரும் படத்தின் முக்கியமான தூண்கள் படத்திற்கு பக்கபலமாக இருந்து திறம்பட நடித்துள்ளனர்.

காதர் பாஷாவாக நண்பராக பாவேல், உயர் அதிகாரி மதியாக போஸ்வெங்கட் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் நெத்தியடி, சித்தப்பாக வரும் பிரகதீஸ்வரன் யதார்த்தமான நடிப்பில் மனதில் பதிகிறார் இவர்களுடன் முருகனாக கார்த்திக் உருவ கேலிக்கு பயப்படாமல், தன் பலத்தை அறிந்து மற்றவர்களுக்கு புரிய வைப்பதிலும், இறுதியில் தன் பலவீனத்தை  உதறித்தள்ளி விடாப்பிடியாக ஜெயிக்க வைப்பதிலும் கவனத்தை ஈர்க்கிறார். மற்றும் பல காவல் துறை உயர் அதிகாரிகளாக நடித்திருப்பவர்களுக்கும் பாராட்டுக்கள்.

ஜிப்ரான இசை பரேட் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது என்றால், மாதேஷ் மாணிக்கம் காட்சிக் கோணங்களுக்கு உயிர் நாடியாக இருந்து ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களை சலிப்பு ஏற்படாத வண்ணம் காட்டி ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதித்து படத்தின் வெற்றிக்கு மணிமகுடமாக விளங்குகிறார்.

எடிட்டர்-பிலோமின் ராஜ், கலை-திருமுருகன் எஸ்.ராகவன், சண்டை-ஸ்டன்னர் சாம் இவர்கள் மூவரும் படத்திற்கு பக்க பலமாக இருந்து மிகைப்படுத்தாத வண்ணம் மிரள வைத்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -தமிழ். காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டி, இத்தகைய இன்னல்களை சகித்துக்கொண்டு வெளியேறும் காவலர்கள் எப்படி நல்ல காவலர்களாக உருவாக முடியும் என்ற கேள்விக்கணையோடு திரைக்கதையமைத்திருக்கும் இயக்குனர் தமிழுக்கு பாராட்டுக்கள். பிரிட்டிஷ் காலத்தில் காவலர்களுக்காக ஏற்படுத்திய காவத்துபயிற்சியின் துவக்கத்தையும், அதை இன்றளவும் நடைமுறைப்படுத்தும் இன்றைய காலகட்டத்தையும் படம் துவங்கும் முன் தெளிவாக புரிய வைத்து படத்தை ஆரம்பிப்பதால், கதைக்களம் விறுவிறுப்பாக செல்வதற்கு பெரு உதவி செய்கிறது. இதை தைரியத்தோடு சொல்வதற்கு அதில் பயிற்சி பெற்ற காவலாராக இயக்குனர் தமிழ் இருந்ததால் தான் இது சாத்தியமானது என்பதை இந்த படத்தின் காட்சிகளுக்கும், சம்பவங்களுமே சாட்சி. இதற்காக வேலூரில் ஒரு பள்ளியின் மைதானத்தை தேர்ந்தெடுத்து அதில் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு நிஜ காவலர் பயிற்சிப்பள்ளியை உருவாக்கி, தத்ரூபமாக காட்சிகளை அமைத்து அசத்தியுள்ளார் இயக்குனர் தமிழ். நெத்தியடி வசனங்கள், கதாபாத்திர தேர்வு, அதிர வைக்கும் நடிப்பு, தேர்ந்தெடுத்த வித்தியாசமான களம், அதை நடைமுறை படுத்தி எடுத்திருக்கும் பாங்கு என்று பார்த்து பார்த்து நல்ல படைப்பை செதிக்கியுள்ளார் இயக்குனர் தமிழ். உண்மை, நேர்மை, பயிற்சி, முயற்சி இருந்தால் அதிகாரத்தை பிடிக்கலாம், அதை வைத்து நடைமுறை சட்டத்தை மாற்றலாம் என்று உத்வேகம் கொடுத்து துவண்டு இருக்கும் இளைஞர்களை தட்டி எழுப்பி  நல்வழிப்படுத்த ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.கடின பயிற்சி முடிந்து திரும்பும் காவலர்கள் நல்லவர்களாக இருப்பதும், கெட்டவர்களாக மாறுவதும் அவரவர் கையில் தான் உள்ளது என்பதை தெளிவும் படுத்தியுள்ளார்.வாழ்த்துக்கள். இவரின் அயராத முயற்சிக்கும், உழைப்பிற்கும் கிடைத்த சிறந்த அங்கீகாரம் இந்தப்படம் நிச்சயம் பல விருதுகளை வெல்லும், இயக்குனர் தமிழுக்கு புகழ் சேர்க்கும். வெல்டன்.

மொத்தத்தில் பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் வித்தியாசமான காவலர் பயிற்சி பள்ளி கதைக்களத்தில் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக போர் கொடி தூக்கி சாதிக்கும் அசகாய சூரன் இந்த காவல்காரன்.