கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம் : கழுவேத்தி மூர்க்கன் சாதி அரசியலை பழி வாங்கும் மிரட்டலும், ஆக்ரோஷமும், ஆக்ஷனும் கலந்த கட்டுக்கடங்காத கொம்பேறி மூக்கன் | ரேட்டிங்: 4/5

0
921

கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம் : கழுவேத்தி மூர்க்கன் சாதி அரசியலை பழி வாங்கும் மிரட்டலும், ஆக்ரோஷமும், ஆக்ஷனும் கலந்த கட்டுக்கடங்காத கொம்பேறி மூக்கன் | ரேட்டிங்: 4/5

‘ஒலிம்பியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து எஸ்.ஒய்.கௌதமராஜ் இயக்கியிருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன்

இதில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோகித்சவா, ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன், ஜக்குபாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை- டி.இமான் , ஒளிப்பதிவு – ஹீதர், படத்தொகுப்பு- நாகூரான் ராமச்சந்திரன், கலை-மகேந்திரன் பாண்டியன், பாடல்கள்-யுகபாரதி, சண்டை-கே.கணேஷ்குமார், இணை தயாரிப்பு- சஞ்சய் சண்முகம், பிரபு சண்முகம், மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ்.

இராமநாதபுரத்தில் தெற்குப்பட்டி கிராமத்தில் மேலத்தெரு மூர்க்கனும் (அருள்நிதி), கீழத்தெரு பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) சிறு வயதில் ஏற்பட்ட திடீர் நட்பால் உயிர் நண்பர்களாக வளர்ந்த பிறகும் இணை பிரியாமல் இருக்கிறார்கள். அதிலும் அதிரடி மூர்க்கதனம் நிறைந்தவன் மூர்க்கன் தன் நண்பனுக்கு உரிய பாதுகாவலனாக  இருக்கிறான். நன்றாக படித்து பட்டதாரியாக பூமிநாதன் கீழத்தெரு மக்களுக்கு பல விதங்களிலும் உதவிகள் செய்து முன்னேற பாடுபடுகிறான். அவனுக்கு கீழத்தெரு மக்களிடம் நல்ல செல்வாக்கு இருப்பதால் பூமிநாதனிடம் பழகுவதை மூர்க்கனின் அப்பா யார் கண்ணனுக்கு பிடிக்க வில்லை என்றாலும் வேறு வழியின்றி சகித்துக் கொள்கிறார். அதே சமயம் யார் கண்ணனின் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி மாவட்டச் செயலாளராக புதிதாக பதவி ஏற்கும் முனியராஜ் (ராஜசிம்மன்) தன்; சாதி கட்சியின் பலத்தை காட்ட கிராமம் முழுவதும் போஸ்டர் ஒட்ட நினைக்க, அதை கீழத்தெருவில் ஒட்ட பூமிநாதன் எதிர்க்கிறார். கூட்டம் நடைபெறும் சமயத்தில் போஸ்டர்கள் கிழந்து கிடப்பதை பார்த்து மேலிட உத்தரவின் பேரில் மாவட்டச் செயலாளர் பதவி முனியராஜிடமிருந்து பறிக்கப்படுகிறது. பதவி போனதால் ஆத்திரமடையும் முனியராஜால் பூமிநாதனை எதுவும் செய்ய முடியாதபடி மூர்க்கன் பார்த்துக் கொள்கிறார். இவர்களை பிரிக்க முனியராஜ் திட்டம் போடுகிறார். ஒரு சிறு சண்டையில் பூமிநாதன் கொல்லப்படுகிறார். இதற்கு மூர்க்கன் தான் காரணம் என்று திசைதிருப்ப வேறுவழியின்றி மூர்க்கன் தலைமறைவாகிறான். மூர்க்கன் தன் நண்பனை கொன்றவர்களை வழி வாங்கினானா? தன் மேல் விழுந்த கொலை பழிக்கு காராணமானவர்களை என்ன செய்தான்? இதற்கெல்லாம் காரணம் யார்? ஜாதி அரசியல் நடத்தும் முனியராஜ் என்ன ஆனார்? என்பதே படத்தின் பதற வைக்கும் க்ளைமேக்ஸ்.

முரட்டு கிராமத்து இளைஞன் மூர்க்கனாக அருள்நிதி அச்சு அசல் உடல்மொழி, பேச்சு, நடை, உடை, பாவனை என்று ஆக்ரோஷம், கோபம், மூர்க்கத்தனம் நிறைந்த கதாபாத்திரம். நண்பன் பூமிநாதனுக்காக தன் சாதி மக்களையே எதிர்க்கும் துணிச்சல், நண்பனின் முன்னேற்றத்தின் உறுதுணையாக இருக்கும் பாதுகாவலன். ஆறடியில் மிரட்டும் பார்வை, கம்பீரமான நடையிலும், சண்டைக் காட்சிகளிலும் அசத்தல் ரகம் என்றால் காதல் காட்சிகளில் ரசிக்கும்படியான மிரட்சி ரகத்தை ரசிக்கலாம். முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை ஒரே சீரான மிகையில்லா நடிப்பு, நட்புக்கு முதல் மரியாதை, தன் தந்தையின் செயலை பார்த்து அதிர்ந்து எடுக்கும் முடிவு, தன் தாயிடம் இறுதியில் பேசும் வசனம், வில்லனுக்கு கொடுக்கும் தண்டனை என்று அடக்க முடியாத கிராமத்து இளைஞனான வாழ்ந்திருக்கிறார். இவரின் உழைப்பை பாராட்டலாம் கொண்டாடலாம்.

கல்வி, உணவு, இருப்பிடம், மரியாதை, சமூக உயர்வு ஆகியவற்றை தன் சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்க புறப்படும் எழுச்சிமிகு புரட்சிகர வசனம் பேசும் கிராமத்து இளைஞன் பூமிநாதனாக சந்தோஷ் பிரதாப் தன் நண்பனுக்கு முற்றிலும் மாறுபட்ட குணாதிசயம் கொண்டவர். எப்போழுதுமே ஒடுக்கப்பட்டவர்கள் தான் ஆக்ரோஷத்தையும், முரட்டுத்தனத்தையும் காட்டுவார்கள் ஆனால் இதில் பூமிநாதனாக அறவழி போரட்டத்திலும், அமைதியாக சிந்தித்து செயல்படும் திறன் நிறைந்தவராக நன்றாக படித்து மேம்பட்ட மனிதராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் அருமை. சாதி அரசியல் களத்தில் பழி வாங்கப்படும் பலிகாடாக இருந்தாலும் படத்தின் மையப்புள்ளியாக இருந்து தன்னுடைய அனுபவம் வாய்ந்த தேர்ந்த நடிப்பால் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சந்தோஷ் பிரதாப்.

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்தப் படத்திலும் மூர்க்கனின் காதலியாக வந்து அதட்டல், உருட்டல், மிரட்டலிலும், தெனாவெட்டு காட்டி காதல் காட்சிகளில் அதகளம் பண்ணுகிறார்.

அரசியல் கலந்த சாதி வெறி பிடித்த மாவட்ட செயலாளராக முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் ராஜசிம்மன், குடும்பத்தை விட பதவி, சாதி தான் முக்கியம் என்ற எண்ணம் கொண்ட மூர்க்கனின் அப்பாவாக யார் கண்ணன், உண்மை மாமாவாக முனிஷ்காந்த், சில காட்சிகள், சில வசனங்கள் மூலம் கை தட்டல் பெறும் மாவட்ட எஸ்பியாக சரத் லோகித்சவா, முரட்டு இன்ஸ்பெக்டராக பத்மன், சந்தோஷ் காதலியாக சாயாதேவி, ஜக்குபாண்டி மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் கதையின் தூண்களாக இருந்து படத்தை மெருகேற்றியுள்ளனர்.

இராமநாதபுரத்தின் இயற்கை சூழல், கிராமத்தில் நடக்கும் சாதி வேற்றுமை, போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்கள், கருவேல மரங்கள், அரசியல் கட்சிகளின் நிலைபாடுகள், இறுதி கழுமரத்தின் தண்டனை காட்சிகள் என்று பார்த்து பார்த்து தன்னுடைய காட்சிக் கோணங்களால் சிறந்த படைப்பை செதுக்கி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.

பவர் பேக்ட் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பையும், அதிரடியையும் ஒரு சேர கொடுத்து கணேஷ் குமார் மிரட்டியுள்ளார், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு முதல் பாதியை விட இரண்டாம் பாதி படபடப்பை கூட்டியுள்ளார். கலை-மகேந்திரன் பாண்டியன் சிறப்பாக செய்துள்ளார்.

யுகபாரதியின் பாடல் வரிகளில் டி இமானின் இசையும் கலந்து காதுகளுக்கு விருந்து கொடுத்துள்ளனர். பின்னணி இசை அதிரடி காட்சிகளுக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

உயிர் நண்பர்கள் வாழ்க்கையில் சாதி அரசியல் களமிறங்க அதனால் ஏற்படும் பிரச்சனை, கலவரம், பழி வாங்குதல் பற்றிய திரைக்கதையுடன் கொஞ்சம் காதல் கலந்து இயக்கியுள்ளார் இயக்குனர் கௌதமராஜ். முதல் பாதி மெதுவாக செல்ல இரண்டாம் பாதியில் தான் படத்தை தூக்கி பிடித்து நிறுத்தியுள்ளார் இயக்குனர் கௌதமராஜ். ஜாதி அரசியல்,ஜாதி பாகுபாடு, போஸ்டர் கிழிந்து அம்மேத்கர் சிலை தெரியும் காட்சிகள், பிணத்தை அம்பேத்கர் சிலை அருகே வைத்துவிட்டு ஒடும் காட்சிகள், போலீஸ் விசாரணை, போலீஸ் மேலதிகாரியின் பார்வையில் விசாரிக்கும் காட்சிகள், அக்காலகட்ட பிரசாந்த், கார்த்திக் ரசிகர் மன்ற போர்டுகள், கோயில் கழுமரத்தின் கதை, இறுதிக் காட்சியில் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் மற்றும் வில்லனுக்கு கொடுக்கும் தண்டனை, ஜாதி வெறி பிடித்த போலீஸ் டிரைவர் துணிந்து செய்யும் செயல் என்ற பதற வைத்து அதிர வைத்து கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் கௌதமராஜ்.

மொத்தத்தில் ‘ஒலிம்பியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கும் கழுவேத்தி மூர்க்கன் சாதி அரசியலை பழி வாங்கும் மிரட்டலும், ஆக்ரோஷமும், ஆக்ஷனும் கலந்த கட்டுக்கடங்காத கொம்பேறி மூக்கன்.