ஆதார் விமர்சனம்: ஆதார் ரியலிசம் கலந்த சூழ்நிலை கைதி காவலர்கள் என்பதை அம்பலப்படுத்தும் சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.25/5

0
405

ஆதார் விமர்சனம்: ஆதார் ரியலிசம் கலந்த சூழ்நிலை கைதி காவலர்கள் என்பதை அம்பலப்படுத்தும் சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.25/5

வெண்ணிலா கிரியேஷன்ஸ் ஆதார் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம்நாத் பழனிகுமார். இதில்கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான், திலீபன், பாகுபாலி பிரபாகர், ரமா, ஆனந்த பாபு, ஷோபி, P.L.தேனப்பன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி, எடிட்டர் – ஆர் ராமர், கலை – சீனு, ஒலி – ஏ.எஸ்.லட்சுமி நாராயணன், பாடல்கள் – யுரேகா, சண்டை – சூப்பர் சுப்பராயன், மக்கள் தொடர்பு -யுவராஜ்.

கட்டிட தொழிலாளியான கருணாஸ் நிறைமாத கர்ப்பிணி  மனைவி ரித்விகாவிற்கு பிரசவ வலி ஏற்பட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார். குழந்தை பிறந்தவுடன் மனைவி ரித்விகா காணாமல் போகிறார். அவருக்கு உதவியாக இருந்த இனியாவும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பச்சிளம் குழந்தையை எடுத்துக் கொண்டு கருணாஸ் போலீஸ் நிலையத்தில் மனைவி காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். இதனிடையே  நீதிபதியின் மகள்  சோதனை ஒட்டத்திற்காக விலையுயர்ந்த காரை ஒட்டி வரும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கார் விபத்தில் சிக்குகிறது.  இதை மறைக்க பார்க்கும் கார் கம்பெனி என்று இன்னொரு புகாரும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கருணாஸ் புகாரை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒரு கட்டத்தில் ரித்விகா கள்ளக்காதலனுடன் ஒடி விட்டார் என்று சொல்ல நம்ப மறுக்கிறார் கருணாஸ்.  இந்த இரண்டு விசாரணைகளையும் எப்படி போலீஸ் கையாள்கிறது? என்ன தான் நடந்தது? கருணாசின் மனைவி ரித்விகா கிடைத்து களங்கமற்றவர் என்று நிரூபனமானதா? என்பதே கதையின் முடிவு.

கட்டிடத் தொழிலாளியாக வரும் கருணாஸுக்கு இது முக்கியமான படம். கிழிந்த பனியனும் அழுக்கு லுங்கியுமான அவருடைய பரிதாப தோற்றம் வழக்கமான வறுமை தொழிலாளியை, அப்படியே காட்டுகிறது.

மனைவியை காணாமல் கதறும்போதும், குழந்தையை கையில் வைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் தத்தளிக்கும்போதும், அதிகாரத்தின் மிரட்டலில் ஏதும்செய்ய இயலாதவராகப் பரிதவித்து நிற்கும்போதும் அனுதாபத்தில் மூழ்க செய்து ஒரு படி உயர்ந்திருக்கிறார் நடிப்பில்.

கர்ப்பிணியான ரித்விகா அதிக வேலை இல்லை என்றாலும் அவர் தான் கதையின் முக்கிய கதாபாத்திரம்.

திருட்டுத் தொழில் செய்து ஒரு ஆட்டோ டிரைவராக இனியா முதலில் கருணாஸுடன் மோதலில் ஈடுபட்டு, பிறகு பரிதாபத்தால் உதவும் இனியா பாத்திரம் முதல் பாதி சஸ்பென்ஸுக்கு கை கொடுக்கிறது. திருட்டுத் தொழில் செய்தாலும் அவருக்குள் இருக்கும் ஈரத்தை காட்டும் நேர்மையில் அவர் கேரக்டர் நிமிர்ந்து நிற்கிறது.

ரித்விகா, இனியா ஆகியோர் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி ஸ்கோர் செய்துள்ளனர்.

மிரட்டலான அதிகார தோரணையில் உதவி காவல் ஆணையர் உமா ரியாஸ், முரட்டு சுபாவம் கொண்ட கொடூரமான ஆய்வாளராக பாகுபலி பிரபாகர், மெதுவான நடை, அமைதியான பேச்சு என நல்ல போலீஸ் ஏட்டாக கதையின் திருப்பு முனையாக அருண் பாண்டியன், பணிவான மேஸ்திரியாக பி.எல்.தேனப்பன், குடிகார ஆட்டோ ஓட்டுநராக திலீபன் ஆகியோர் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.

யுரேகா பாடல் வரிகளில் ஸ்ரீகாந்த் தேவாவின் தாலாட்டு பாடல் மனதை வருடிச் செல்கிறது. பின்னணி இசை ok.

மகேஷ் முத்துசாமியின் காட்சிக் கோணங்கள் இரவை மையமாக வைத்திருப்பதற்கு ஏற்றவாறு சிறப்பாக காட்சி படுத்தியுள்ளார்.

எடிட்டர்- ஆர் ராமர், கலை- சீனு ஆகியோர் கச்சிதம்.

போலீஸ் நிலையத்தில் இரண்டு வெவ்வேறு புகார்களை விசாரிக்கும் கதைக்களமாக வைத்து ஆதார் படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்கிருக்கிறார். ஏழை, பணக்காரர் என்று பாகுபாடோடு கதைக்களத்தை கொண்டு வந்து அதில் பணமும் அதிகாரமும் எந்த விதத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை விவரித்து, இதில் சாமன்ய மனிதன் மாட்டிக் கொண்டால் எப்படி கருவியாக பயன்படுத்தி தப்பிக்க முயற்சிப்பார்கள் என்பதை ரியலிசம் கலந்த கதை. திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும் காவலர்கள் உட்பட அனைவரும் எப்படி சூழ்நிலைகளின் கைதிகளாக இருக்கிறார்கள் என்பதை கதைக்குள் கதையாக சஸ்பென்ஸ் கலந்து க்ரைம் திரில்லராக கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார்.

மொத்தத்தில்  வெண்ணிலா கிரியேஷன்ஸ் ஆதார் ரியலிசம் கலந்த சூழ்நிலை கைதி காவலர்கள் என்பதை அம்பலப்படுத்தும் சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் த்ரில்லர்.