வெள்ளிமலை விமர்சனம்: வெள்ளிமலை சித்தர்களை தேடும் ஆன்மீக பயணம் | ரேட்டிங்: 2.5/5

0
410

வெள்ளிமலை விமர்சனம்: வெள்ளிமலை சித்தர்களை தேடும் ஆன்மீக பயணம் | ரேட்டிங்: 2.5/5

சூப்பர்ப் கிரியேஷன்ஸ் சார்பில் ராஜகோபால் இளங்கோவன் தயாரித்து வெள்ளிமலை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஓம் விஜய்.
இதில் சூப்பர் குட் சுப்ரமணியன், வீர சுபாஷ், அஞ்சு கிருஷ்ணா, கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ் பாண்டியன், கவிராஜ், பழனிச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -மணிபெருமாள், எடிட்டர்- சதீஷ் சூர்யா , இசை -என்.ஆர். ரகுநந்தன்,  கலை இயக்குனர் – மாயபாண்டியன், பாடல்கள் – கார்த்திக், கருமத்தூர் மணிமாறன், லைன் பிரொடியூசர்-விக்னேஷ், ஒலி-ராம்ஜி, ஸ்டில்ஸ்-மனோகரன், பிஆர்ஒ-சுரேஷ்சந்திர, ரேகா டிஒன்.

1989ல் தொடங்கும் கதைக்களம்.கீழ்வெள்ளிமலை கிராமத்தில் சித்த வைத்தியர் அகத்தீசன் (சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணியன்) அவரது மகள் மனோன்மணியுடன் (அஞ்சு கிருஷ்ணா) வசித்து வருகிறார். பல வருடங்களுககு முன்பு சிறு வயதில் சித்த வைத்தியம் செய்த ஒருத்தர் இறந்து விட, அந்த கிராமமே சித்த வைத்தியர் குடும்பத்தை தள்ளி வைத்து வைத்தியம் பார்க்க வருவதில்லை. மூலிகைகளை நகரத்தில் விற்று வரும் மகளுடன் சேர்ந்து தன்னிடம் வருபவர்களுக்கு மட்டும் சித்த வைத்தியம் பார்த்து கொண்டு காலத்தை கழிக்கும் அகத்தீசன், என்றாவது ஒரு நாள் ஊர் மக்கள் திருந்தி தன்னிடம் சித்த வைத்தியம் பார்க்க வருவார்கள் என்று நம்புகிறார். சித்த வைத்தியரை கேலி கிண்டல் செய்து வருவதை வாடிக்கையாகி விட அதனால் மனமுடைந்தாலும், அந்த ஊரை விட்டு போகாமல் வாழ்ந்து வருகிறார் அகத்தீசன். நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் ஒருவனிடம் வினோதமான அரிப்பு நோயை பரப்பி விட, கிராமமே அந்த நோயால் அவதிப்படுகிறது. தீவிரமாக நோய் பரவினாலும், யாரும் சித்த வைத்தியர் அகத்தீசனிடம் செல்லாமல் இருக்கின்றனர். நோயை பரப்பிய நகரத்து இளைஞன் அகத்தீசனிடம் தைரியமாக வைத்தியம் பார்க்க வர, சிகிச்சை ஆரம்பமாகிறது. சில நாட்கள் மூலிகை வைத்தியம் செய்தும் குணமாகாமல் இருப்பதை அறிந்து அகத்தீசன் கவலையடைந்து, சித்தர்களை வேண்டுகிறார். திடீரென்று மறுநாள் அந்த இளைஞன் குணமடைய, கிராமமே திரண்டு வந்து அகத்தீசனிடம் வைத்தியம் செய்யுமாறு வேண்டுகின்றனர். அகத்தீசனோ இதற்கான மருந்து மேல்வெள்ளிமலை இருக்கிறது என்றும், அங்கே போய் மூலிகைளை எடுத்து வர வேண்டும் என்று கூற, கிராம மக்கள் சிலபேருடனும்,மகளுடனும் மேல்வெள்ளிமலைக்கு செல்கிறார். அங்கே சென்றவுடன் மூலிகை எல்லாம் கிடையாது, தன் அண்ணன் போகனை கண்டு பிடித்தால் தான் மூலிகை கிடைக்கும் என்று தெரிவிக்க, அதிர்ச்சியாகின்றனர் கிராமத்து மக்கள். அகத்தீசனின் அண்ணன் யார்? யாரும் அறியாமல் மலையில் வசிக்க காரணம் என்ன? அவரை தேடி கண்டுபிடித்தார்களா? நோயை குணப்படுத்தினார்களா? இறுதியில் அகத்தீசனின் சித்த வைத்திய சிகிச்சையை கிராமத்து மக்கள் நம்பினார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

அகத்தீசன் மற்றும் போகர் ஆகிய இரட்டை வேடங்களை ஏற்று நடித்திருக்கும் குணச்சித்திர நடிகர் சூப்பர் குட் சூப்ரணியன் படத்தின் கதை நாயகன். தன்னை புறக்கணிக்கும் மக்களால் மனஉளைச்சல் ஏற்பட்டாலும், நம்பிக்கை மனிதனாக படம் முழுவதும் வலம் வருகிறார். வைத்தியம் செய்த இளைஞன் குணமடைந்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அதன் சிகிச்சை முறை அறியாமல் நம்பிய மக்களை ஏமாற்ற நினைக்காத நல்ல மனிதராக அகத்தீசன் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார். இறுதியில் அவரால் கிராம மக்களுக்கு கிடைக்கும் சித்த வைத்திய சிகிச்சைக்கு காரணகர்த்தாவாக விளங்கி தன் கதாபாத்திரத்தின் தன்மையை வலுவாக தாங்கி பிடித்து திருப்புமுனை ஏற்படுத்துகிறார்.

கிராமத்து பெண்ணாகவும், மகளாகவும் மனோன்மணியாக அஞ்சு கிருஷ்ணா நடை, உடை, பாவனை, உச்சரிப்பு அனைத்திலும் இயல்பான நடிப்பு. மனோன்மணியின் காதலனாக வனராஜாவாக வீர சுபாஷ், மொரட்டாளாக கிரிராஜ், புயல்ராசுவாக விஜயகுமார், காட்டுத்தீயாக சார்லஸ் பாண்டியன், கரும்பாரையாக கவிராஜ், பயில்வானாக பழனிச்சாமி  ஆகியோர் தேர்ந்த நடிப்பால் கிராமத்து மக்களாக வாழ்ந்துள்ளனர்.

கீழ்வெள்ளிமலை, மேல்வெள்ளிமலையின் கிராமத்து ஏழிலையும், மண் மணம் மாறாமல், இயற்கை சூழலுடன் கடினமான ஒளிப்பதிவால் காட்சிக்கோணங்களை கொடுத்திருக்கும் மணிபெருமாள் உழைப்பிற்கு பாராட்டுக்கள்.

என்.ஆர். ரகுநந்தன் இசையில் திண்டுக்கல் ஐ லியோனி பாடிய பாடல், இறுதியில் வரும் காதல் பாடல் இரண்டும் அருமையாக உள்ளது மற்றும் பின்னணி இசையையும் அற்புதமாக தந்திருக்கிறார்.

எடிட்டர்- சதீஷ் சூர்யா மற்றும் கலை இயக்குனர் – மாயபாண்டியன் ஆகியோரின் பங்களிப்பு கச்சிதம்.

பல தலைமுறைகளாக சித்த வைத்தியத்தை நம்பாமல் கேலி பேசும் கிராமத்து மக்களை கொடிய நோய் பரவ ஆங்கில மருத்தவத்தால் சாதிக்க முடியாததை சித்த வைத்தியத்தால் நிரூபித்து காட்டி இயற்கை வைத்தியத்தின் மகத்துவத்தை சொல்லும் சமூக அக்கறையுடன் வந்திருக்கும் பொழுதுபோக்கு படம் வெள்ளிமலை. சமீபத்தில் உலக மக்களை வாட்டி வதைத்த கொரானாவை மையமாக வைத்து அரிப்பு நோயாக காட்டி  சித்தர்களின் வழியில் கடைப்பிடிக்கப்படும் சிகிச்சை முறையை பிரதானமாக கொடுத்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஒம் விஜய். படத்தில் சிலர் தவிர புதுமுக நடிகர்களின் தேர்வு, அவர்களின் நேர்த்தியான நடிப்பு, இறுதிக் காட்சியில் வரும் திருப்பம் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. இயக்குனர் ஒம் விஜய் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் அழுத்தமான பதிவாக வந்திருக்கும்.

சூப்பர்ப் கிரியேஷன்ஸ் சார்பில் ராஜகோபால் இளங்கோவன் தயாரித்திருக்கும்  வெள்ளிமலை சித்தர்களை தேடும் ஆன்மீக பயணம்.