வெப்பன் சினிமா விமர்சனம் : வெப்பன் அழிக்கக்கூடிய ஆற்றல் நிறைந்த ஆயுதம் காந்த சக்தியால் தடுமாறி தடம் மாறுகிறது | ரேட்டிங்: 2.5/5

0
827

வெப்பன் சினிமா விமர்சனம் : வெப்பன் அழிக்கக்கூடிய ஆற்றல் நிறைந்த ஆயுதம் காந்த சக்தியால் தடுமாறி தடம் மாறுகிறது | ரேட்டிங்: 2.5/5

மில்லியன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் வெப்பன் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குகன் சென்னியப்பன்.

இதில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, பிக்பாஸ் மாயா, மைம் கோபி, கன்னிகா, கஜராஜ், வேலு பிரபாகரன் ஆகியோர் நடித்தள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – பிரபு ராகவ் , எடிட்டிங் – கோபி கிருஷ்ணா, ஸ்டண்ட் – சுதேஷ், கலை-சுபேந்தர், ஒப்பனை-மோகன், மக்கள் தொடர்பு : டிஒன், அப்துல் நாசர்.

1942ல் நாட்டின் சுதந்திரத்திற்காக இந்திய படை வீரர்கள் பலம் பெற சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவருடைய நண்பர் ஜெர்மனி வீரர்கள் பயன்படுத்தும் சூப்பர் ஹீரொ சிரம் பற்றிய தகவல்களை அறிந்து அதை வாங்க ஹிட்லரை சந்திக்கிறார்கள். ஆனால் சுபாஷ் சந்திர போஸ் அதன் தீமைகளை உணர்ந்து அதை வாங்காமல் திரும்ப, அவருடன் வரும் நண்பர் அதை ஹிட்லருக்கு தெரியாமல் திருடி இந்தியாவிற்கு கொண்டு வந்து விடுகிறார். பல வருடங்கள் கழித்து திருட்டைக் கண்டுபிடித்து இந்தியா வரும் ஜெர்மன் வீரர்கள் நண்பரைத் தேடி வருகிறார்கள். நண்பர் சுட்டுக்கொல்லப்படுவதற்குள் அந்த மருந்தை தன் மகனுக்கு செலுத்திவிட்டு அனுப்பி விடுகிறார். அதன் பின் கதைக்களம் வேறு திசையில் பயணிக்கிறது. தேனியில் அடர்ந்த வனப்பகுதியில் நியூட்ரினோ தொழிற்சாலையில் திடீரென்று வெடித்து சிதறும் சம்பவம் நடக்க, அங்கே யூ ட்யூபர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அக்னி (வசந்த் ரவி) பலமாக அடிபட்டு கிடக்க அவரை விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். என்எஸ்ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப்படை அலுவலகத்தில் முகமூடி அணிந்த ஏஜெண்ட் எக்ஸ் என்ற அதிகாரி விசாரிக்க தொடங்குகிறார். அதற்கு அக்னி சூப்பர் ஹியூமன் இருப்பதை கேள்விப்பட்டு அதைப்பற்றி வீடியோ தயாரிக்க வந்த இடத்தில் அடிபட்டு விட்டதாக கூறுகிறார். அதே சமயம் அறிவியல் விஞ்ஞானி ஒம்கார் (வேலு பிரபாகரன்) என்பவரையும் விசாரிக்க அழைக்கப்படுகிறார். அவரின் கூற்றுப்படி தன்னை காப்பாற்றும்படியும், அதிகார வர்க்கமான டார்க் சொசைட்டி 9 என்ற அமைப்பின் உறுப்பினர் என்றும், அங்கிருக்கும் உறுப்பினர்களை சூப்பர் ஹியூமன் ஒவ்வொருவராக கொன்று வருவதாகவும், இதன் தலைவர் டிகே(ராஜீவ் மேனன்) அந்த சூப்பர் ஹியூமனை கண்டு பிடிக்க தன் ஆட்களை அனுப்பி இருப்பதாகவும் கூறுகிறார். இவர்கள் தேடும் சூப்பர் ஹியூமன் யார்? எங்கு இருக்கிறார்? சூப்பர் ஹியூமன் கொலைகளை ஏன் செய்கிறார்? நோக்கம் என்ன? எதற்காக மறைந்து வாழ்கிறார்? அக்னியை விசாரணையிலிருந்து விடுவித்தார்களா? அக்னி மறைக்கும் உண்மை என்ன? என்பதே திருப்பங்கள் நிறைந்த கதையின் முடிவு.

முக்கிய வேடம் என்றாலும் இடைவேளைக்குப் பின் தோன்றி தன்னுடைய அப+ர்வ ஆற்றலை மறைத்து, விலங்குகளிடத்தில் அன்பை செலுத்தி அமைதி வாழ்க்கை நடத்தி, ஆபத்தான தருணத்தில் தன் இருப்பை நிறைவாக செய்துள்ளார்  சத்யராஜ்.

வசந்த் ரவி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வீடியோ வெளியீடு, சூப்பர் ஹியூமன் பற்றிய ஆராய்ச்சி, விசாரணை, கோபம், மர்மம் என்று தன் இயல்பு தன்மையோடு அமைதி மற்றும் ஆக்ரோஷத்தோடு இன்னொரு பரிமாணத்திலும் வந்து போகிறார்.

ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, பிக்பாஸ் மாயா, மைம் கோபி, கன்னிகா, கஜராஜ், வேலு பிரபாகரன் மற்றும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் அனைவருமே சிறிது நேரமே வந்து போகின்றனர்.

நானான நானில்லை என்ற மென்மையான இயற்கை சூழலில் பாசம் கலந்த பாடலில் ஸ்கோர் செய்துள்ளார் ஜிப்ரான். பின்னணி இசை பரவாயில்லை.

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தன் காட்சிக்கோணங்களால் பிரம்மாண்டத்தையும், வரலாறு, அறிவியல் சார்ந்த விஷயங்களையும், விஞ்ஞான தொழில்நுட்பங்களையும், இயற்கை காட்சிகளையும், என்எஸ்ஜி அலுவலகம், சத்யராஜ் வசிக்கும் காட்டுப்பகுதி, விலங்குகள், மாயாஜால காட்சிகளையும் படத்திற்குகேற்ப தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்.

ஏகப்பட்ட கிளைக்கதைகள், விவரங்கள், சித்தரிப்புகள் என்று முடிந்த வரை புரியும்படி கொடுக்க முயற்சி செய்துள்ளார் எடிட்டர் கோபி கிருஷ்ணா, ஸ்டண்ட் – சுதேஷ், கலை-சுபேந்தர் ஆகியோரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.

சுற்றுச்சூழல், விஞ்ஞான பரிசோதனை மற்றும் அதிகாரத்தின் ஊழல் செல்வாக்கு ஆகியவற்றின் கருப்பொருள்களை வைத்து புனையப்பட்ட வரலாறு, அறிவியல் கலந்த கண்டுபிடிப்பில் சூப்பர் ஹியுமன் வெளிப்பாடு, அதி நவீன தொழில்நுட்பம் சரியாக கையாளாமல், முகமுடி மனிதனின் ஆக்ஷன் பிளாக் என்று ஹாலிவுட் படங்களான மார்வல் கதைகளைப்போல் எடுக்க முயற்சி செய்து பாதியளவில் தான் முன்னேறியிருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். சுவராஸ்யம் நிறைந்த சில காட்சிகள் இருந்தாலும் பலகீனமான திரைக்கதை, ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் படைப்பு, சம்பந்தமில்லாமல் காட்சிகள் முன்னுக்கு பின் முரணாக காட்சிப்படுத்தி, இறுதிக் காட்சியின் திருப்பத்தை கூட ரசிக்க முடியாமல் குழப்பத்தோடு இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்து முடித்துள்ளார் இயக்குனர் குகன் சென்னியப்பன்.

மில்லியன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் வெப்பன் அழிக்கக்கூடிய ஆற்றல் நிறைந்த ஆயுதம் காந்த சக்தியால் தடுமாறி தடம் மாறுகிறது.