விரூபாக்ஷா திரைவிமர்சனம்: விரூபாக்ஷா ஒரு விசித்திரமான கவனத்தை ஈர்க்கக்கூடிய மிஸ்ட்ரி த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘விரூபாக்ஷா’. இந்த திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு சுகுமார் திரைக்கதை அமைத்துள்ளார். தமிழ் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். மக்கள் தொடர்பு – யுவராஜ்.
இந்த திகில் படத்தின் ஆரம்பம் 1979 இல் ருத்ரவனம் என்ற ஒரு சிறிய கிராமத்தில் ஒரு ஜோடி சூனியம் செய்து ஒரு பெண் குழந்தையை பலியிடுகின்றனர். கிராம மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொல்வதைத் தடுப்பதற்காக அவர்களை எரித்துக் கொள்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட பெண் “புஷ்கரம்” காலக்கட்டத்தில் கிராமம் அழிந்துவிடும் என்று சாபமிடுகிறாள். கிராமவாசிகள் தம்பதியரின் மகனை கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு அனாதை இல்லத்தில் வாழ அனுமதித்து அங்கிருந்து வெளியேற்றுகின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1991-ல் கிராமம் சாபத்தின் விளைவுகளைக் காணத் தொடங்குகிறது. சூர்யா (சாய் தரம் தேஜ்) மற்றும் அவரது தாயார் காடுகளின் நடுவே அமைந்துள்ள அவர்களின் மூதாதையர் கிராமமான ருத்ரவனத்திற்குத் திரும்புகிறார்கள். ஏனெனில் தாயார் தனது நிலத்தை கிராமத்திற்கு ஒரு நல்ல காரியத்திற்காக தானமாக வழங்க விரும்புகிறார். அவர்கள் கிராம தெய்வமான மோடமாம்பாவின் திருவிழாவிற்கு செல்கிறார்கள், அப்போதுதான் சூர்யா, சர்பஞ்ச் ஹரிச்சந்திர பிரசாத்தின் (ராஜீவ் கனகலா) மகள் நந்தினியை (சம்யுக்தா) சந்தித்தவுடன் காதலிக்க தொடங்குகிறான் ஆனால் விரைவில் அவன் ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட அப்போதுதான் விஷயங்கள் மோசமாகின்றன. அப்போது கிராமம் திருவிழாவிற்கு தயாராகிறது. கிராமத்தின் தலைவர் ஹரிச்சந்திர பிரசாத் (ராஜீவ் கனகலா) மற்றும் மற்ற கிராமத்தினர் அதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இருக்கின்றனர். திருவிழா தொடங்கும் போதே, கிராமவாசிகளில் ஒருவர் கருவறையில் உள்ள அம்மனின் காலில் விழுந்து இறந்து விடுகிறார். இது ஒரு கெட்ட சகுனமாக பார்க்கப்பட்டு, கிராமத்தை சுத்தப்படுத்த கிராம மக்கள் எட்டு நாட்களுக்கு ருத்ரவனத்தை விட்டு வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. அதன்பின் சில மரணங்கள் பின்தொடர இறுதியாக நந்தினி பாதிக்கப்படுகிறார். சூர்யா என்ன நடக்கிறது என்று விசாரிக்க முடிவு செய்கிறார். கிராமத்தில் சூனியம் செய்வது யார்? நந்தினியை சூர்யாவால் காப்பாற்ற முடிந்ததா? நந்தினி யார், அவள் சாபத்துடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறது? கிராமத்தில் உள்ளவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.