விருந்து விமர்சனம் : விருந்து எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான படையல் | ரேட்டிங்: 3/5

0
363

விருந்து விமர்சனம் : விருந்து எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான படையல் | ரேட்டிங்: 3/5

நெய்யார் பிலிம்ஸ் சார்பில் பாதுஷா மற்றும் கிரீஷ் நெய்யர் தயாரித்து டி.நாராயணன் ஃபிலிம்ஸ் வெளியீட்டில் வந்துள்ள விருந்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தாமர கண்ணன்.

இதில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யர்,  ஹரிஷ்பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- எழுத்தாளர்: தினேஷ் பள்ளத், இசை: ரதீஷ் வேகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ்  பாடல் வரிகள்: ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன், ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன், பிரதீப் நாயர், எடிட்டர்: வி.டி.ஸ்ரீPஜித், கலை- சஹாஸ் பாலா, மக்கள் தொடர்பு –  சரண்.

பெரிய தொழிலதிபரான ஜான்(முகேஷ்) நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறார். தன் தொழில் நஷ்டமடையாமல​; காப்பாற்ற மனைவியின் முன்னாள் காதலன் நிதி ஆலோசகர் தேவனை (அர்ஜுன்) சந்திக்கிறார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்.  அவர் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார் என்று உள்@ர்வாசிகள் நம்புகிறார்கள். போலீஸ் தரப்பில் இது கொலையாக கருதப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதன் பின் தேவனும் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகிறார். ஜானின் இறப்பு மனைவி எலிசபெத் மற்றும் மகள் பெர்லிக்கு( நிக்கி கல்ராணி) பெரிய அதிர்ச்சியை தருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக கம்யூனிச கொள்கை கொண்ட  நண்பர் பாலன் இருக்கிறார். இதனிடையே ஜானின் மனைவி எலிசபெத்தும் ஒரு கார் விபத்தில் கொல்லப்படுகிறார். எலிசபெத் விபத்தில் இறப்பதற்கு முன், சாலையில் காப்பாற்ற வரும் ஆட்டோ டிரைவரான ஹேமந்த்திடம் (கிரிஷ் நெய்யர்) பாலன் என்பரை சந்தித்து செவல் ஹில்ஸ் தான் கொலைக்கான காரணம் என்று தெரிவிக்க சொல்கிறார். ஆனால் ஹேமந்;த்  தன் தங்கையின் திருமணத்திற்கு தடங்கல் வரக்கூடாது என்று அந்த விஷயத்தை போலீசிடம் தெரிவிக்காமல் விட்டு விடுகிறார். அதன் பின் தன் நண்பனின் ஆலோசனைப்படி பாலனை சந்தித்து எலிசபெத் தெரிவித்த விஷயத்தை சொல்கிறார். அதற்குள் வீட்டிலிருக்கும் பெர்லியை கொல்ல மர்ம நபர்கள் வர,  அவர்களை விரட்டி அடித்து விட்டு ஹேமந்துடன் பெர்லியை பத்திரமாக மலைப்பகுதியில் பாதுகாப்பாக பாலன் தங்க வைக்கிறார். இந்நிலையில் அங்கும் ஆபத்து வர பெர்லியும், ஹேமந்தும் தப்பிக்கும் நேரத்தில் தேவன் வந்து காப்பாற்றி தன் வீட்டினுள் அடைக்கலம் கொடுக்கிறார். அங்கு தங்கும் பெர்லி தேவனை கொல்ல முற்படுகிறார். ஏன் பெர்லி தேவனை கொல்ல நினைக்கிறார்? ஜான், எலிசபெத் கொலைக்கு யார் காரணம்? தேவனால் பெர்லியை காப்பாற்ற முடிந்ததா? செவன் ஹில்ஸ் எங்கு உள்ளது? அங்கு யார் இருக்கிறார்கள்? எதற்காக இவர்களை துரத்தி கொல்ல நினைக்கின்றனர் என்பதே விருந்து படத்தின் எதிர்பாராத க்ளைமேக்ஸ்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா  முதல் காட்சியிலேயே தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகளுடன் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார். பின்னர் காணாமல் போகும் இவர் பெர்லியை தக்க சமயத்தில் வந்து காப்பாற்றுபவராக, தன்னுடைய நோக்கத்தை புரிய வைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து  துரத்தும் மர்ம கும்பலைத் தேடி பயணிக்கும் காட்சிகள், படத்தின் இறுதிக் காட்சியில் சாத்தான், நரபலி ஆகியவற்றிற்கு எதிராக விழிப்புணர்வுடன் பேசி தன் கடமையை செய்து முடிக்கிறார்.

பணக்காரப் பெண் பெர்லியாக நிக்கி கல்ராணி பெற்றோரின் சாவில் மர்மத்தை கண்டுபிடிக்க முயல்வதும், அதற்காக எடுக்கும் முயற்சிகள், தேடல்கள், துரத்தல்களுடன், இறுதியில் வரும் திருப்பத்திற்கு முக்கிய புள்ளியாக அமைந்து படத்தில் சிறப்பாக செய்துள்ளார்.

தந்தை புற்றுநோயால் இறந்துவிட வாரம் ஒருமுறை புற்று நோய் பாதித்த நோயாளிகளுக்கு இலவச பயணத்தை ஏற்பாடு செய்யும் நல்ல இளைஞராக, பிறருக்கு உதவும் நல்ல குணமுடையவர் விபத்து ஒன்றில் சாட்சியாக மாற, அதற்காக சம்பந்தபட்ட குடும்பத்தை காப்பாற்ற இக்கட்டில் மாட்டிக் கொள்வதும், படத்தின் கிளைமாக்ஸ் வரை தன்னுடைய இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் ஆட்டோடிரைவர் ஹேமந்த்தாக தயாரிப்பாளர் கிரீஷ் நெய்யர் நடித்துள்ளார். முதலில் வரும் இவரைப்பற்றிய விரிவான குடும்பக்கதை படத்தில் தேவையில்லாத ஒன்றாகவே இருக்கிறது.

சாத்தான் தாத்தாவாக சில காட்சிகள் என்றாலும் மிரட்டும் ரோலில் ஹரிஷ்பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் ஆகியோர் படத்திற்கு பலம்.

ரதீஷ் வேகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் ஆகியோரின் இசை படத்தின் பரபரப்பான காட்சிகளை மெருகூட்டுகிறது.

ஆக்ரோஷ ஆக்ஷன் காட்சிகள், மலைப்பிரதேச துரத்தல் காட்சிகள், ஊட்டி பங்களா, பழைய சாத்தான் மாளிகை, பூஜைகள் என்று பிரமிப்பை ஏற்படுத்தும் காட்சிக் கோணங்களின் ஒளிப்பதிவை ரவிச்சந்திரன், பிரதீப் நாயர் ஆகிய இருவரும் கொடுத்துள்ளனர்.

எடிட்டர்: வி.டி.ஸ்ரீPஜித் மாறுபட்ட திரைக்கதைக்கு வேறு கோணத்தில் திருப்பங்களை தந்து க்ளைமேக்ஸில் நினைத்தது ஒன்று நடந்தது வேறாக தொகுத்து காட்சிப்படுத்திருக்கிறார்.

கடவுள் எங்கு ஆட்சி செய்ய வேண்டுமோ அங்கெல்லாம் சாத்தான் சேரும்போது ஏற்படும் சீரழிவுதான் படத்தின் மையக்கரு. சாத்தான் சேவை மற்றும் அதன் வரலாறு மற்றும் பின்னணியைப் பற்றிச் சொல்லி, 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரண்டாவது விருந்தில் பலியிடப்படும் பெண் மூன்றாம் நாளில் எழுந்து உலகை கைப்பற்றுவதாக நம்பப்படுவதற்கான உதாரணங்கள் அடிக்கடி செய்தி ஊடகங்களில் வெளிவருவதும், சமீப காலமாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடந்த ஒரு சில சாத்தானின் செயல்கள்தான் இந்த விருந்தின் த்ரில்லிங் திரைக்கதையாக கொடுத்துள்ளார் இயக்குனர் தாமர கண்ணன். விருந்தில்  ஹீப்ரு மொழியில் புரியாத சில டயலாக்குகள், அதற்கான மொழிபெயர்ப்பும் வருவதோடு ஒளியைத் தேடி நடக்காமல் இருளையும் இருளின் சக்திகளையும் தேடுபவர்களுக்கு விருந்து ஒரு சிறந்த பதில். முதலில் கொலையை பற்றி வேறு கோணத்தில் பயணிக்கும் தளம் படத்தின் க்ளைமாக்ஸ் பயணத்தைப் பற்றிய எந்தக் குறிப்பையும் தரவில்லை என்று திரும்ப யோசித்தால், ஆரம்பத்திலிருந்தே இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான தினேஷ் பள்ளத் சில குறிப்புகள் அளித்து வருவதை உணரலாம்.

நெய்யார் பிலிம்ஸ் சார்பில் பாதுஷா மற்றும் கிரீஷ் நெய்யர் தயாரித்து டி.நாராயணன் ஃபிலிம்ஸ் வெளியீட்டில் வந்துள்ள விருந்து எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான படையல்.