விமானம் சினிமா விமர்சனம் : விமானம் தாமதத்தால் அனுபவிக்க முடியாத பயணம் | ரேட்டிங்: 2/5
கிரண் கொரபதி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் விமானம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவ பிரசாத் யானாலா.
இதில் சமுத்திரக்கனி – வீரையா, மாஸ்டர் துருவன் – ராஜு, மீரா ஜாஸ்மின் – ஸ்வேதா, அனசுயா பரத்வாஜ் – சுமதி, தன்ராஜ் – டேனியல், ராகுல் ராமகிருஷ்ணா – குட்டி, நான் கடவுள் ராஜேந்திரன் – ராஜேந்திரன் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:இயக்குனர்: இசை: சரண் அர்ஜுன், ஒளிப்பதிவு இயக்குனர்: விவேக் கலேபு, எடிட்டர்: மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்,வசனங்கள்: பிரபாகர், கலை இயக்குனர்: ஜே. கே. மூர்த்தி, பாடலாசிரியர்: சிநேகன், இணை தயாரிப்பாளர்: வீணா கொரபதி, நிர்வாக தயாரிப்பாளர்: ஹனுமந்த் ராவ் போயபதி, மக்கள் தொடர்பு : யுவராஜ்
வீரய்யா ஊனமுற்றவர் என்றாலும் தன்னம்பிக்கையுடன் கழிப்பறை வளாகம் ஒன்றை நிர்வாகித்து தன் மகன் ராஜுவை பள்ளியில் படிக்க வைக்கிறார். சிறு வயது முதலே ராஜுவிற்கு விமானத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு அதில் பயணிக்க வேண்டும் என்ற தீராத ஆசையுடன் வளர்கிறான். ஆட்டோ டிரைவர் தன்ராஜ் (டேனியல்), அவரது மகன் ஐன்ஸ்டீன், செருப்புத் தொழிலாளி குட்டி (ராகுல் ராமகிருஷ்ணா) மற்றும் பாலியல் தொழிலாளியாக சுமதி (அனசுயா பரத்வாஜ்) ஆகியோருடன் ஒரே காலனியில் வசிக்கிறார் வீரய்யா. ராஜு நன்றாக படித்து பைலட் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக பள்ளியில் மயங்கி விழுகிறான். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராஜுவிற்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களே உயிரோடு இருப்பான் என்று டாக்டர் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சியாகி துடிதுடித்துப் போகிறார் வீரய்யா. தன் மகனை காப்பாற்ற முடியாவிட்டாலும் அவன் இறப்பதற்குள் விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார் வீரய்யா. விமான பயணத்திற்கு பத்தாயிரம் ரூபாய் தேவைப்பட பல இடங்களில் அலைந்து திரிந்து பணத்தை புரட்ட போராடுகிறார். இறுதியில் வீரய்யா தன் மகனின் ஆசையை நிறைவேற்றினாரா? மகன் ராஜு விமானத்தில் பயணித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் சோகமான முடிவு.
அப்பா வீரய்யாவாக சமுத்திரகனி தன் இயல்பான நடிப்பால் ஊனமுற்ற கதாபாத்திரத்தை திறம்பட மெருகேற்றி, படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அச்சு அசலாக பாசக்கார தந்தையாக வாழ்ந்திருக்கிறார்.
மகன் ராஜுவாக மாஸ்டர் துருவன், அவனுடைய நண்பர் ஐன்ஸ்டீனாக நடித்திருக்கும் குழந்தைகள் நிறைவாக செய்துள்ளனர்.
பாலியல் தொழிலாளியாக அனுசுயா செருப்புத் தொழிலாளியாக ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரது காட்சிகள் குழந்தைகள் படத்திற்கு தேவையில்லாதவை.ஆட்டோ டிரைவராக தன்ராஜ்; நடிப்பு திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் சிறப்பு தோற்றத்தில் விமான பணிப்பெண்ணாக முக்கியப் பங்கு வகிக்கிறார்.
கவிஞர் சிநேகனின் பாடல் வரிகளில் சரண் அர்ஜுன் இசை, விவேக் கலேபுவின் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய காட்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது.
மார்த்தாண்டன் கே வெங்கடேஷ் எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மகனின் கடைசி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் ஏழைத்தந்தையின் பாசப்போராட்டத்தை தன்னால் முடிந்தவரை சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் சிவ பிரசாத் யானலா.
மொத்தத்தில் கிரண் கொரபதி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் விமானம் தாமதத்தால் அனுபவிக்க முடியாத பயணம்.