விடாமு​யற்சி சினிமா விமர்சனம் : விடாமுயற்சி வாழ்க்கை பாதையில் புதிய விடியலை நோக்கி செல்லும் த்ரில்லிங், மர்மம் கலந்த காதல் பயணம் | ரேட்டிங்: 3.5/5

0
2142

விடாமு​யற்சி சினிமா விமர்சனம் : விடாமுயற்சி வாழ்க்கை பாதையில் புதிய விடியலை நோக்கி செல்லும் த்ரில்லிங், மர்மம் கலந்த காதல் பயணம் | ரேட்டிங்: 3.5/5

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கும் விடாமுயற்சி படத்தை எழுதி இயக்கியுள்ளார் மகிழ் திருமேனி.

இதில் அஜித் குமார் – அர்ஜுன், த்ரிஷா கிருஷ்ணன் – கயல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன் – ரக்ஷித், ரெஜினா கசாண்ட்ரா – தீபிகா, ஆரவ் – மைக்கேல், ரவி ராகவேந்திரா – டாக்டர் மனோகர் சந்திரசேகர், ரம்யா சுப்ரமணியன் – அனு, நிகில் சஜித் – நிகில், சஞ்சய் கணேஷ் சரவணன் – பிஜு ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து​ள்ளனர்.

தொழில்நுட்ப குழு :-லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை – ஜி கே எம் தமிழ் குமரன், இசை – அனிருத், ஓளிப்பதிவாளர் – ஓம் பிரகாஷ், எடிட்டர் – என் பி ஸ்ரீகாந்த், தயாரிப்பு வடிவமைப்பாளர் – மிலன், ஸ்டண்ட் மாஸ்டர் – சுப்ரீம் சுந்தர், ஆடை வடிவமைப்பாளர் – அனு வர்தன், விஎஃப்எக்ஸ் – ஹரிஹரசுதன், ஆடியோகிராபி – டி உதய்குமார், நிர்வாகத் தயாரிப்பாளர் – சுப்ரமணியன் நாராயணன், பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா, தயாரிப்பு நிர்வாகி – ஜே கிரிநாதன் மற்றும் கே ஜெயசீலன், ஸ்டில்ஸ் – ஜி ஆனந்த் குமார், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.

அர்ஜுன் (அஜித்) மற்றும் கயல் (த்ரிஷா) ஒருவருக்கொருவர் பார்த்தவுடன் நட்பாக பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டு பன்னிரெண்டு காலம் கடந்து அஜர்பைஜான் நாட்டில் வாழ்கின்றனர். இதற்கு முன் கயல் கர்ப்பமாகி சந்தர்ப்பவசத்தால் கருக்கலைந்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழலிலும் ஒற்றுமையாக வாழ்ந்தாலும் நாளடைவில் இவர்களுக்குள் இருக்கும் அன்னோன்யம் மறைந்து காதல் திருமணம் கசக்க ஆரம்பிக்கிறது. இதன் விளைவாக கயல் வேறொருவரை காதலிப்பதாக உண்மையை உடைத்து விவாகரத்துக்காக தாக்கல் செய்ய விரும்பும் போது அர்ஜுனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், கயலின் பிடிவாதத்தால் அவளின் பெற்றோரிடம் விட காரில் கடைசி பயணமாக அழைத்துச் செல்கிறார். தம்பதிகளின் பாலைவன சாலை பயணத்தில் திடீரென  எங்கிருந்தோ ஒரு ஹம்மர் கார் குறுக்கே பாய நொடிப்பொழுதில் உயிர் தப்புகின்றனர். அதே சமயம் அந்த காரில் இருக்கும் மைக்கேல் (ஆரவ்) மற்றும் நண்பர்கள் அர்ஜுனை வம்புக்கு இழுக்க, அதனை கண்டு கொள்ளாமல் பயணத்தை தொடர ஒரு பெட்ரோல் பங்கில் காரை நிறுத்துகிறார். அங்கேயும் வரும் ஆரவ் குழு இவர்களிடம் தகராறு செய்து விட்டு செல்கின்றனர். அந்த சமயத்தில் கயலுக்கு கண்டெய்னர் லாரி ஒட்டி வரும் ரக்ஷித் (அர்ஜுன்) தீபிகா (ரெஜெனா கசாண்ட்ரா) ஆகிய இருவரின் நட்பு அங்கே கிடைக்க அவர்களிடம் சகஜமாக பேசிவிட்டு அர்ஜுனுடன் காரில் செல்கிறார். சிறிது நேரத்தில் அர்ஜுன் கார் பழுதாக, தொலைதொடர்பு வசதியில்லாத அந்த இடத்தில் தவிக்கும் இவர்களுக்கு உதவ வருகின்றனர் ரக்ஷித்-தீபிகா ஜோடி. அவர்கள் பக்கத்து கிராமத்தில் இருக்கும் உணவகத்தில் உதவி கிடைக்கும் என்றும் அங்கே மாற்று காருக்கும் பழுதை சரி செய்வதற்கும் ஏற்பாடு செய்யலாம் என்று அர்ஜுனை சமரசம் செய்து கயலை அழைத்துச் செல்கின்றனர். சில மணி நேரங்கள் கடந்தும் யாரும் வராததால், அர்ஜுன் காரில் பழுதை சரி செய்ய முயற்சிக்க அதிர்ஷ்டவசமாக கார் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. விரைவாக காரை எடுத்துக் கொண்டு ரக்ஷித் சொன்ன இடமான  உணவகத்திற்கு வரும் அர்ஜுன் அங்கே விசாரிக்க சென்ற இடம் தெரியாத ரக்ஷித் ஜோடியையும், மனைவியையும் கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கிறார். எந்த ஒரு தடயமும், தகவலும் கிடைக்க பெறாமல் தவிக்கும் அர்ஜுன் மனைவியை கண்டுபிடித்தாரா? ரக்ஷித் மற்றும் தீபிகா யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்ன காரணம்? என்பதே தடதடக்கும் மர்ம க்ளைமேக்ஸ்.

இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் சாதாரண மனிதராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவரின் காதல், திருமணம், மனமுறிவு, விவாகரத்து அதற்காக தொடங்கும் பயணத்தில் எதிர்படும் சிக்கல்களை, மோதல்களை, தப்பிக்க முயற்சிக்கும் வழிகள், ஏமாற்றப்படும் போதும், அவமானப்படுத்தப்படும் போதும் அதை எதிர்கொள்ளும் விதத்திலும் தனித்து நின்று ஹீரோவாக காட்டப்படாமல் சூழ்நிலைகளையும் பயன்படுத்தி எப்படி தப்பிப்பது என்பதை யோசிக்கும்; திறனுடன் சிக்கித் தவிக்கும் மனிதனின் குணாதிசயங்களையும் திறம்பட கையாண்டுள்ளார். அதே சமயம் எதிரிகளின் சூட்சமங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு எதிராக செயல்படும் இடத்தில் வேட்டைகாரனாக இறுதியில் பலத்தை காண்பித்திருப்பது தான் படத்தின் ஹைலைட்ஸ். சாலைப்பயணத்தில் ஏற்படும் சிரமங்களையும்,  மனைவியை காணாமல் தவிக்கும் இடங்களிலும், இறுதி வரை தன்னம்பிக்கையை விடாமல் காதலின் உன்னதத்தை மனைவிக்கு புரிய வைக்கும் இடத்தில் கை தட்டல் பெறுகிறார்.

த்ரிஷா காதல் மனைவி கயலாக வந்து இடையே காணாமல் போகிறார். அவரைப் பற்றிய கதைக்களத்தில் காதல் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளார். நல்ல கணவர் அமைந்த போதிலும் எதற்காக மனம் மாறினார், அதற்கான காரணம் என்பது தெளிவாக காட்டப்படவில்லை.இறுதியில் தவறை உணர்ந்து மனம் மாறுவது கொஞ்சம் ஆறுதல்.

ரக்ஷித்தாக ஆக்ஷன் கிங் அர்ஜுன், தீபிகாவாக ரெஜினா கசாண்ட்ரா இருவரும் சைக்கோ கில்லர்களாக கூட்டு களவாணிகளாக சரியான தேர்வு மிரட்டியுள்ளனர்.

ஆரவ் மைக்கேலாக வில்லத்தனத்திலும், சண்டை காட்சிகளிலும் அதிரடி காட்டியுள்ளார்.ரவி ராகவேந்திரா – டாக்டர் மனோகர் சந்திரசேகர், ரம்யா சுப்ரமணியன் – அனு, நிகில் சஜித் – நிகில், சஞ்சய் கணேஷ் சரவணன் – பிஜு என்று அனைவரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

படத்திற்கு ஆதரவாக பெரிதாக தெரிவது தொழில்நுட்ப கலைஞர்களின் பணியாகும். அனிருத்தின் ‘பத்திகிச்சு’ டிராக் அதிரடி காட்சிகளில் ஒரு அருமையான பின்னணியாக களமிறங்கி காட்சிகளை மேம்படுத்துகிறது. இசைகளின் சங்கமத்தில் சிறப்பாக பணி புரிந்துள்ளார்.

ஓம் பிரகாஷ் தனது ஒளிப்பதிவால் ஸ்டண்ட் காட்சிகளுடன் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார். குறிப்பாக பாலைவன கார் பயணம், ஒரு ஹம்மருக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகள், அஜர்பைஜானின் வெறிச்சோடிய சாலைகள், மதுகூடங்கள், வங்கி, பாழடைந்த கட்டிடங்கள், தூசி படிந்த வண்டிகள், கண்டெய்னர் லாரிகள்,சிறைச்சாலைகள், பதற வைக்கும் ஆய்வுக்கூடங்கள் என்று படத்தின் வெளிநாட்டு காட்சிளுக்கு மெருகூட்டியுள்ளார்.

காருக்குள் ஒரு அதிரடி காட்சி, வீட்டினுள் நடக்கும் வில்அம்பு சண்டை, பாகு சாலையில் நடக்கும் துரத்தல் சண்டைக்காட்சிகள், ஆரவ்வின் கழுத்தில் டேப்பை சுற்றி காரில் வைத்து வட்டமடித்து புழுதி பறக்க எடுத்த காட்சிகள், அர்ஜுன், ஆரவ், அஜித்தின் சண்டைக்காட்சிகள் என்று சுப்ரீம் சுந்தர் அதகளம் பண்ணியுள்ளார்.

எடிட்டர் என் பி ஸ்ரீPகாந்த் மெதுவாக செல்லும் கதைகளத்திற்கு ஆங்கங்கே திருப்பங்களை கொடுத்து சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளார்.

விடாமுயர்ச்சி என்பது அசாதாரண சூழ்நிலைகளில் வைக்கப்படும் ஒரு சாதாரண மனிதனின் கதை. 1997 கர்ட் ரஸ்ஸல்-நடித்த பிரேக்டவுன் என்ற ஆங்கில படத்தின் ரீமேக். இதில் காதல், மோதல், பிரிதலில் எடுக்கும் தவறான முடிவு எத்தகைய ஆபத்தில் முடிந்து இறுதியில் யபுரிதலில் சேர்கிறது என்பதை மிகச் தெளிவாக அழுத்தமாக அஜித்தை வைத்து புதிய கோணத்தில் முயற்சி செய்து திருப்பங்களை த்ரில்லிங்காக பல கிளைக்கதைகளுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி.

மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் விடாமுயற்சி வாழ்க்கை பாதையில் புதிய விடியலை நோக்கி செல்லும் த்ரில்லிங், மர்மம் கலந்த காதல் பயணம்.