விஜயானந்த் விமர்சனம் : விஜயானந்த் அசாதாரண லட்சிய மனிதனின் விடாமுயற்சி கண்ட அசுர வளர்ச்சியால் விரிவடைந்த சாலை போக்குவரத்து பயணம் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு முன்னுதாரணம் | ரேட்டிங்: 3.5/5
விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஷ்வர் தயாரித்திருக்கும் விஜயானந்த் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷிகா சர்மா.பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் நிஹால் ராஜ்புத், ஸ்ரீஅனந்த் நாக், பிரகாஷ் பெலவாடி, வி ரவிச்சந்திரன், அனிஷ் குருவில்லா, வினயா பிரசாத், சிரி பிரஹலாத், பாரத் போபண்ணா, நிஹால், ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைன் ஷெட்டி, அர்ச்சனா கோட்டிகே ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசையமைப்பாளர்: கோபி சுந்தர் சி, ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி,எடிட்டர்: ஹேமந்த் குமார் டி, பாடல்கள்-விஜய் பிரகாஷ், கீர்த்தினா வைத்தியநாதன், சண்டை- ரவி வர்மா, நடனம் -இம்ரான் சர்தாரியா, ஒப்பனை-பிரகாஷ் கோகக், உடை-ரிஷிகா சர்மா, மக்கள் தொடர்பு : யுவராஜ்
மும்பையிலிருந்து கடக் செல்லும் ரயிலில் இருந்து விஜய் சங்கேஷ்வர் இறங்குவதில் இருந்து கதை தொடங்குகிறது. விஜய் சங்கேஷ்வர் தனது தந்தையின் பழைய மாடல் பிரிண்டிங் பிரஸ்ஸை விரைவுபடுத்த புதிய செமி ஆட்டோமேட்டிக் பிரிண்டிங் மெஷினை கொண்டு வருகிறார். அப்பா பத்து நாளில் செய்வதை மகன் ஒரே நாளில் செய்து முடிக்க தொழில் விரிவடைகிறது. விஜய் சங்கேஷ்வருக்கு வியாபாரத்தில் எதிலும் வேகம் தேவை என்பதால் அவர் அச்சகத்தை விட்டு வெளியேறி அனுபவமே இல்லாத போக்குவரத்து துறையில் நுழைகிறார். முதலில் ஒரு லாரியை வாங்க தன் தந்தையிடம் கேட்க நினைக்க, அவரோ இதில் விருப்பம்; இல்லாமல் ஒதுங்கி கொள்கிறார். அதனால் விஜய் சங்கேஷ்வர் கடன் கொடுக்கும் ரவிச்சந்திரனின் நம்பிக்கை பெற்று முதலில் ஒரு லாரியை வாங்க, பின்னர் அது நான்கு லாரிகளாக பெருகிறது. தன் வியாபார நுணுக்கத்தை பயன்படுத்தி லாரிகளுக்கு மஞ்சள் கலரில் வர்ணம் பூசி விஆர்எல் லாகிஸ்டிக்ஸ் என்ற போக்குவரத்து கம்பெனியை தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார். இந்த யூக்தி மற்ற கம்பெனிகளுக்கு முன்னுதாரணமாக விளங்க, வியாபார உலகிலும், வங்கிகளிலும் விஜய் சங்கேஷ்வரின் பெயர் கொடிகட்டி பறக்கிறது. நாணயத்திலும், நம்பிக்கைக்கும் உரியவராக விளங்கி அவருடைய கம்பெனி பல ஆயிரம் டிரக்குகளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி தடம் பதிக்கிறார். இந்த செயல்பாட்டில் அவர் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார் மற்றும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அவரது பயணத்தில், அரசியலில் ஈடுபட, முக்கிய நாளேட்டில் தவறாக சித்திரக்கப்படுகிறார்.இதனால் ஆவேசத்துடன் ஒரு செய்தித்தாள் தொடங்குகிறார்.அதற்கும் சிக்கல் வர அதனை விட்டு விட்டாலும் பின்னர் விடாப்பிடியாக ஐந்து வருடங்களுக்கு பிறகு புதியதாக விஜய வாணி என்ற நாளிழை தொடங்கி அதிலும் பெற்றி பெறுகிறார். அதன் பின் வாழ்க்கையில் எப்படி படிப்படியாக சாதித்து முன்னேறினார்? அதற்கு அவருடைய மகன் ஆனந்த் சங்கேஸ்வரின் முக்கிய பங்கு என்ன? என்பதுதான் படத்தின் கதை.
அச்சு இயந்திரத்தை கவனித்துக்கொள்வது முதல் ஒற்றை டிரக்கில் தனது தொழிலை தொடங்குவது வரை வெற்றிகரமான டிரக்குகளை நிறுவுவது வரை விஜய்யின் பயணத்தை சுற்றியே கதை நகர்கிறது. விஜயானந்தாக நிஹால் ராஜ்புத்தின் மேக்ஓவர் நன்றாக உள்ளது. அவர் கொடுக்கப்பட்ட முக்கிய கதாபாத்திரத்தில் உண்மையில் வாழ்ந்து அவரது நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான வி ஆர் எல் பிரைவேட் லிமிடெட் உரிமையாளராக அச்சு அசலாக நிஹால், படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சந்திரம்மா (வினயா பிரசாத்) அவரது தாயார், லலிதா (சிரி பிரஹல்லாத்) அவரது மனைவி மற்றும் மகன் ஆனந்த் சங்கேஷ்வர் (பரத் போபண்ணா) ஆகியோர் அடங்குவர். மூத்த நடிகரான அனந்த் நாக் அப்பா வேடத்தில் கச்சிதமாகப் பொருந்தி திரைப்படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. செய்தித்தாள் தலைவராக பிரகாஷ் பெலவாடி சிறப்பாக நடித்துள்ளார். நடிகர் ரவிச்சந்திரன் குறைந்த திரை நேரத்தில் தோன்றினாலும் விஜய் சங்கேஷ்வரின் முதல் வெற்றிக்கு வழி வகுக்கும் முக்கியமான ரோல்.
இந்தப் படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக உள்ளதற்கு காரணம் அனில் கபீரின் கலை இயக்கம், உங்களை காலத்துக்கு பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. கோபி சுந்தரின் இசை பொருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னணி இசை இரண்டாம் பாதியில் இரண்டு முக்கியமான காட்சிகளை உயர்த்துகிறது.கீர்த்தன் பூஜாரி தனது ஒளியமைப்பு மற்றும் பிரேம்கள் மூலம் மாயாஜாலத்தை திரையில் கொண்டு வந்துள்ளார்.
ஹேமந்த் குமார் டி-யின் எடிட்டிங் வேலை படத்தின் கால அளவை வரம்பிற்குள் வைத்திருக்கும் வகையில் படத்தின் பதினைந்து நிமிடங்களை எளிதாக ட்ரிம் செய்யலாம்.
மகன் ஆனந்த் சங்கேஷ்வர் தன் தந்தையின் உழைப்பையும், சந்தித்த இன்னல்களையும், கட்டிய சாம்ராஜ்ஜியத்தையும் பற்றி சொல்வது போல் கதை ஆரம்பமாகிறது. கடனில் லாரியை வாங்கிய பிறகு, விஜய் சங்கேஷ்வர் சந்தித்த சவால்கள், தடைகள் மற்றும் உடல் மற்றும் மன உளைச்சல்களை எதிர்கொண்டு தனது லாரி தொழிலை வளர்க்க விஜய் சங்கேஷ்வரின் போராட்டமும் உழைப்பும் பற்றிய கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. ஒரு தொழிலைக் கட்டியெழுப்புவதில் விஜய் சங்கேஷ்வர் எதிர்கொள்ளும் தோல்விகளை வெற்றி படிகட்டுகளாக மாற்றும் வித்தை இளைய தலைமுறையினருக்கு ஒரு உத்வேகம். இதனை முதல் பாதியில் விறுவிறுப்பாக சொல்லியிருந்தாலும், இரண்டாம் பாதியில் கதையின் போக்கு மெதுவாக செல்கிறது. விஜயானந்த் கன்னடத்தின் வெற்றிகரமான தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாற்று நாடகம். கன்னட நாட்டில் நன்றாக அறியப்பட்ட விஜய் சங்கேஷ்வரரை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்து வைத்த பெருமை இயக்குனர் ரிஷிகா சர்மாவிற்கே சேரும். இப்படத்தில் இன்னும் அறிந்திராத அல்லது அறிந்த பல சம்பவங்களை சொல்லியிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.இயக்குனர் ரிஷிகா சார்மாவின் கடின உழைப்பிற்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஷ்வர் தயாரித்திருக்கும் விஜயானந்த் அசாதாரண லட்சிய மனிதனின் விடாமுயற்சி கண்ட அசுர வளர்ச்சியால் விரிவடைந்த சாலை போக்குவரத்து பயணம் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு முன்னுதாரணம்.