‘வா வரலாம் வா’ சினிமா விமர்சனம் : ‘வா வரலாம் வா’ அனைவரும் ரசிக்கக்கூடிய கமர்ஷியல் மசாலா
எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் “வா வரலாம் வா” படத்தை எஸ் பி ஆர் மற்றும் எல்.ஜி.ரவிசந்தர் ஆகிய இருவர் இயக்கியுள்ளனர்.
இதில் பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்.புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, தீபா, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: தேவா, ஒளிப்பதிவு: கார்த்திக் ராஜா,பி ஆர் ஒ : வெங்கட்
சிறு வயதிலேயே அனாதைகளான பாலாஜி முருகதாஸ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி பசி கொடுமையால் கொலை செய்து சிறை சென்று பல வருடங்கள் கழித்து வெளியே வருகின்றனர். சிறைக் கைதிகள் என்பதால் நேர்மையாக வாழவும், வேலை கிடைக்காமலும், பசியாலும் அவதிப்படுகின்றனர். வசதியாக வாழ ஆசைப்பட்டு திருட ஆரம்பிக்கும் இவர்களுக்கு கொள்ளையனான மைம் கோபி அறிமுகம் கிடைக்கிறது. இவர்களை வால்வோ பஸ்ஸை திருட சொல்லி அதை விற்று பணம் பார்க்கலாம் என்று மைம்கோபி பாலாஜியையும், ரெடின் கிங்ஸ்லியையும் அனுப்புகிறார். இருவரும் ஒரு பஸ்ஸை கடத்த முயல அந்த பஸ்ஸில் 40 குழந்தைகள், சிங்கம் புலி, ஆயா தீபா, மஹானா மற்றும் காயத்ரி என்று அனைவரையும் சேர்த்து கடத்தி பணம் பறிக்க தனியாக திட்டம் போடுகின்றனர். இவர்களை கடத்தி ஒரு காட்டு பங்களாவில் அடைத்து வைக்கின்றனர். அதன் பின் தான் குழந்தைகள் அனைவரும் அனாதைகள், மஹானா மற்றும் காயத்ரி மலேசியாவிலிருந்து வந்த பணக்கார சகோதரிகள் என்பதை அறிகின்றனர். தாங்கள் போட்ட பணம் பறிக்கும் திட்டத்தை கைவிட்டு மஹானாவை பாலாஜியும், காயத்ரியை ரெடின் கிங்ஸ்லியும் காதலிக்க தொடங்குகின்றனர். இதனிடையே மைம் கோபி பஸ்ஸை கடத்திய பாலாஜிiயும், ரெடின் கிங்ஸ்லியையும் தொடர்பு கொண்டு பேசும் போது இரு பணக்கார பெண்கள் இருப்பதை அறிகிறார். அதனால் அந்த பெண்களை கடத்தி பணம் பறிக்க மைம்கோபி திட்டம் போடுகிறார். இறுதியில் பாலாஜி மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் காதல்கள் கை கூடியதா? குழந்தைகளை விடுவித்தார்களா? மைம் கோபி மஹானாவையும் காயத்ரியையும் கடத்த போட்ட திட்டம் வெற்றி பெற்றதா? கடத்தியவர்களை போலீஸ் கைது செய்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பாலாஜி முருகதாஸ் கமர்ஷியல் ஹீரோவாக காதல், நடனம், ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் கலந்து முதல் படத்திலேயே அத்தனையும் சிறப்பாக செய்துள்ளார். பிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் நடிப்பு பெரிய திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது.
மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்.புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, தீபா, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, மீசை ராஜேந்திரன், குழந்தைகள் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தேனிசைத்தென்றல் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியும், கேட்கும்படியும் தன் டிரேட் மார்க் ஸ்டைலில் அதிரடியாக கொடுத்துள்ளார்.
கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
படத்தின் கதைக்களம் நன்றாக உள்ளது, வசனமும் திரைக்கதையும்; வழக்கமான கதைக்கு ஒரு தனித்துவமான திருப்பத்தை சேர்க்கிறது. இருந்தாலும் இன்னும் திட்டமிட்ட விவரிப்புடன் கதைக்களத்தை கொண்டு சென்றிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும். எஸ் பி ஆர் மற்றும் எல்.ஜி.ரவிசந்தர் ஆகிய இரு இயக்குனர்களின் முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.
எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் ‘வா வரலாம் வா’ அனைவரும் ரசிக்கக்கூடிய கமர்ஷியல் மசாலா.