லால் சிங் சத்தா விமர்சனம்: ‘லால் சிங் சத்தா” அன்பே கொடுக்கும் உண்மையான பரிசு. இதை சினிமா மீது காதல் கொண்ட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அமர காவிய சித்திரம் | ரேட்டிங்: 3.5/5
அமீர்கான் ப்ரொடக்ஷன் – வயாகம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட்மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழில் வெளியிட படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அத்சவத் சந்தன்.
அமீர்கான் – லால் சிங் சாத்தா, கரீனா கபூர் கான் – ரூபா,நாக சைதன்யா – பலராஜு, மோனாசிங் – லால் சிங் சாத்தாவின் அம்மா, மானவ் விஜ் – முகமது பாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- கதாசிரியர்: அதுல் குல்கர்னி, ஒளிப்பதிவு: சத்யஜித் பாண்டே,படத்வதாகுப்பு: மேமந் சர்க்கார், இசை: ப்ரீதம், பின்னணி , இசை: தனுஜ் டிக்கு,தமிழ் பாடலாசிரியர் : முத்தமிழ், மக்கள் தொடர்பு : பி.வெங்கடேஷ்
லால் சிங் சத்தா சிறுவயதிலிருந்தே நடக்க முடியாதவர் மற்றும் புரிதல் இல்லாதவர். அவரது தாயார் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். பின்னர் லால் ரூபாவை அதாவது கரீனா கபூரை சந்திக்கிறார். சிறுவயதில் 10 ரூபாய்க்கு தாயை இழந்த ரூபா பின் லாலின் வீட்டில் தங்க வருகிறாள். இருவரும் ஒன்றாகப் படிக்க பள்ளிக்குச் செல்கிறார்கள். ரூபாவின் ஒவ்வொரு செயலும் லாலை மகிழ்விக்கிறது. ரூபாவும் அவரை ஊக்குவிக்கிறார், ஒரு சம்பவத்திற்குப் பிறகு லால் நடக்கக் கற்றுக்கொள்கிறார், அவர் ஓடவும் கற்றுக்கொள்கிறார், ஆனால் புரிதல் மட்டும் லால் சிங்கிற்கு குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் ரூபாவுக்கு பணக்காரர் ஆக வேண்டும். எந்த வழியிலாவது மாடலாக மாறி, மும்பையில் ஹீரோயினாக வேண்டும் என்பது அவளின் கனவு.இவர்களின் கனவு வெவ்வேறு திசையில் பயணிக்கிறது. இருவரும் பிரிகிறார்கள். லால் சிங் தன் தாயின் உதவியோடு ராணுவத்தில் சேர்ந்து, பல விஷயங்களைச் செய்கிறார்.லால் சிங் தன் வேலையை நேசித்து சிறப்பாக பயிற்சி பெறுகிறார்.ராணுவத்தில் சேர்ந்த பிறகு எப்படி ஜனாதிபதியிடம் பதக்கம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார்? ரூபாவுக்கும் லாலுக்கும் சந்திப்பு நடந்ததா? அதன் பின் நடந்தது என்ன? என்பதைப் பார்க்க, நீங்கள் கண்டிப்பாக லால் சிங் சத்தாவைப் பார்க்க வேண்டும்.
‘லால் சிங் சத்தா” படத்தைப் பார்க்கும்போது, தெளிந்த நீரோடைப் போல கதை ரயிலில் தொடங்கி பயணிக்கிறது. ஏனென்றால் இந்தப் படம் காதல் கதை. லால் சிங் சத்தா மற்றும் ரூபா டிசோசாவின் காதல் கதை. படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அமீர் கான் பதிந்துள்ளார். அமீரின் அற்புதமான நடிப்பே இந்தப் படத்தின் ஆன்மா. லால் சிங் சத்தாவாக மாறியதன் மூலம் அமீர் தன்னை மெருகேற்றி சிறப்பான பங்களிப்பை கொடுத்து காட்சிக்கு காட்சி தன் நடிப்பால் வசீகரித்துள்ளார்.
அமீர் ஜோடியாக கரீனா கபூர் இந்த படத்தின் மற்றொரு முக்கிய ஈர்ப்பு. அமீர்-கரீனாவின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. ரூபா கதாபாத்திரத்திற்கு கரீனா நியாயம் செய்துள்ளார்.
தாத்தாவைப் போலவே டைட்ஸ் மற்றும் வெஸ்ட் தயாரித்து வியாபாரம்; செய்ய விரும்பும் பலராஜு ராணுவத்தில் சேர்ந்து, படத்திற்கு வித்தியாசமான திருப்பத்தை கொடுக்கிறார். கார்கில் மலைகளில் போரில் காயமடைந்த பாகிஸ்தானியர் இந்தியாவில் தங்கி லாலின் செயல்களை பார்த்து அவரது இதயத்தில் மாற்றம் ஏற்படுகிறது. லால் சிங் சத்தா அவரை நம்பி அவரது நிறுவனத்தில் உயர் பதவியை கொடுக்கிறார், ஆனால் சில காலம் பணி புரிந்து விட்டு பாகிஸ்தானியர் தன் வீட்டிற்கு செல்ல விரும்புகிறார். குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் திறக்க விரும்புவதாகவும் பாகிஸ்தான் மக்களுக்கு உண்மையான இந்தியா எது என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டு விடை பெறுகிறார். பலராஜு கேரக்டரில் நாக சைதன்யாவும், பாகிஸ்தானியராக மானவ் விஜும் ‘லால் சிங் சத்தா” படத்தில் முத்திரை பதித்துள்ளனர். மேலும், லாலின் அம்மாவாக மோனா சிங்கும் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளார். இந்த கதாபாத்திரம்தான் சாதாரண லாலை சாதனை செய்யும் லால் சிங் சத்தாவாக மாற்றுகிறது. ஷாருக்கானின் கெஸ்ட் தோற்றம் மனதை வெல்கிறது.
‘லால் சிங் சத்தா’ படத்தின் தொழில்நுட்பக் குழுதான் அதன் உயிர். இந்தப் படத்தில் சத்யஜித் பாண்டே தனது கேமரா மூலம் ஒரு மேஜிக் செய்துள்ளார்.
எடிட்டர் ஹேமந்தி சர்க்கார் தனது கத்தரிக்கோலைக் கூர்மைப்படுத்தியிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் வேகம் அதிகரித்திருக்கும்.
அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் ப்ரீதம் இணைந்து படத்தின் இசையில் கடுமையாக உழைத்துள்ளனர்.
‘லால் சிங் சத்தா’ திரைப்படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘பாரஸ்ட் கம்ப்” படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டின் வரலாற்றின்படி படத்தை தழுவிய அதுல் குல்கர்னி, அற்புதமான உணர்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரஸ்ட் கம்ப் படத்தை சரியான ரீமேக் படம் போல உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அத்சவத் சந்தன்;. இந்திய நேட்டிவிட்டிக்கு ஏற்றவாறு பல மாற்றங்கள் திரைக்கதையில் செய்யப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டின் எட்டாம் தசாப்தத்தில் தொடங்கி இன்று வரை கதை வருகிறது. கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் வெற்றி, ஆபரேஷன் பு@ ஸ்டார், இந்திரா காந்தியின் படுகொலை, ராஜீவ் காந்தியின் இறுதி ஊர்வலம், பாபர் இடிப்பு, எல்.கே. அத்வானியின் ரத யாத்திரை, மும்பை குண்டுவெடிப்பு, அபு சலேம் மற்றும் மோனிகா பேடியின் காதல் கதை கலந்து சென்டிமெண்ட்டோடு கதைக்களத்தை அமைத்து மனதில் நீங்கா இடம் பிடிக்க வைத்து விடுகிறார் இயக்குனர் அத்சவத் சந்தன்.இதற்கு இடையில் வாரணாசி மலைத்தொடர்களில் ‘அப்கி பார் மோடி சர்க்கார்’ என்ற வாசகத்தையும் விடாமல் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பயணத்தின் பாராட்டுக்குரிய பொக்கிஷமாகும், இது ஒவ்வொரு நபரையும் வாழ்க்கையில் ஒரு முறை காதலிக்க வைக்கும் மற்றும் அழவும் வைக்கும்.
மொத்தத்தில் அமீர்கான் ப்ரொடக்ஷன் – வயாகம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘லால் சிங் சத்தா” அன்பே கொடுக்கும் உண்மையான பரிசு. இதை சினிமா மீது காதல் கொண்ட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அமர காவிய சித்திரம்.