லாரா சினிமா விமர்சனம் : லாரா வித்தியாசமான விறுவிறுப்பான சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் சப்ஜெக்ட் அசர வைக்கும் | ரேட்டிங்: 3.5/5
எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்திருக்கும் லாரா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மணிமூர்த்தி.
இதில் கார்த்திகேசன், அசோக்குமார், அனுஸ்ரேயா ராஜன், மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி, பாலா, எஸ்.கே. பாபு, திலீப்குமார், இ.எஸ்.பிரதீப ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: ஆர்.ஜே.ரவீன், இசை: ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம்: முருகன், எடிட்டிங் வலர்ப்பாண்டி, பிஆர்ஒ சக்தி சரவணன்.
காரைக்கால் கடற்கரையோரம் ஒதுங்கும் முகம், உடல் சிதைந்த பெண்ணின் சடலத்தை பார்த்து மீனவர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். இந்த பகுதியில் நிரவி காவல் நிலைத்திலிருந்து நேர்மை, சாதுர்யம் நிறைந்த இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் சம்பவ இடத்திற்கு விரைகிறார். அந்த உடல் பாகங்கள் சிதைந்த சடலத்தில் அணிந்திருந்த ஆரஞ்சு கலர் சுடிதார் மட்டுமே சாட்சியாக இருக்க, இதற்கான விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது கவுன்சிலர் தாஸ் (எஸ்.கே.பாபு) கீழ் வேலை செய்யும் டெம்போ டிரைவர் லாரன்ஸ் (பாலா) தனது மனைவி ஸ்டெல்லா (வெண்மதி) பணத்தை எடுத்து கொண்டு ஒடி விட்ட வழக்கின் நிலை எந்த நிலையில் உள்ளது என்று காவல் நிலைத்தில் கேட்டுச்செல்கிறார். அந்த காணாமல் போன பெண் தான் மர்மமாக இறந்தவரோ என்ற பார்வையில் விசாரணை துவங்க, இறுதியில் அந்த பெண் தன் மனைவி இல்லை என்று டிரைவர் லாரன்ஸ் உடலை பார்த்து விட்டு திட்டவட்டமாக மறுக்கிறார். அதனால் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காமிராவை ஆராயும் போது ஆரஞ்சு நிற உடையணிந்த விலை மாதுவாக இருக்கும் ஒரு பெண்ணை இரு இளைஞர்கள் சத்யா (திலீப் குமார்) மற்றும் தினேஷ் (பிரதீப்) துரத்துவது போல் இருக்க, அதிலிருக்கும் ஒரு இளைஞரை பிடித்து விசாரிக்கின்றனர். தாங்கள் விலைமாதுவை துரத்தியது உண்மை என்றும், ஆனால் அந்தப்பெண் தப்பித்து சென்று விட்டதாகவும், தன்னுடைய நண்பன் சிங்கப்பூருக்கு சென்று விட்டதாக கூறுகிறான். விசாரணையின் போது விலைமாது பெண் உயிரோடு இருப்பது தெரிய வர அதுவும் தோல்வியில் முடிகிறது. ஏற்கனவே இன்ஸ்பெக்டர் கார்த்திகேசனுடன் பகையில் இருக்கும் அந்த தொகுதியின் கவுன்சிலர் தாஸ் (எஸ்.கே.பாபு) தன் டிரைவர் பாலா மேல் வீண் கொலை பழி சுமத்துவதாக அந்த தொகுதி எம்.எல்.ஏ. ஃபரூக் யாசின் (மாத்யூ வர்கீஸ்) மற்றும் உயர் அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறார். எப்படியாவது இந்த வழக்கில் உள்ள குழப்பத்தை அவிழ்க்கும் பணியில் ஆய்வாளர் கார்த்திகேசன் செயல்படும் போது, எம்.எல்.ஏ.வின் மகன் மஹரூஃப் (அசோக் குமார்) மூலம் லாரா (அனுஸ்ரேயா ராஜன்) பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகிறது. யார் அந்த லாரா? கரை ஒதுங்கிய சடலம் அவரா? யார் இந்த கொலையை செய்தது? அதற்கு பின்பலமாக யார் செயல்பட்டார்கள்? இன்ஸ்பெக்டர் கார்த்திகேசனால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடிந்ததா? டிரைவர் பாலாவின் மனைவியை கண்டுபிடித்தார்களா? அனைத்து பெண்களுமே ஒரு மாதிரியான உடை அணிந்ததன் மர்மம் என்ன? என்ற கேள்விக்குறியுடன் படத்தின் பரபரப்பான க்ளைமேக்ஸ்.
காவல் ஆய்வாளராக தயாரிப்பாளர் கார்த்திகேயன் முக்கிய வேடத்தில் படம் முழுவதும் தன்னுடைய நடிப்பாலும், நடை, உடை, பாவனையிலும் புதுமுகம் போல் இல்லாமல் இயல்பான நடிப்பால் கவர்ந்துள்ளார்.டீயை சுவைத்தபடியே தெளிவான சிந்தனை, எடுக்கும் முடிவு, அதற்காக எடுக்கும் முயற்சி, விசாரிக்கும் தோரணை என்று வித்தியாசமான குணாதியங்களுடன் தன் கதாபாத்திரத்தின் கம்பீரத்தை தாங்கி பிடித்துள்ளார்.
இடைவேளைக்கு பிறகு சில காட்சிகள் வரும் எம்.எல்.ஏ.வின் மகன் மஹரூஃப் கதாபாத்திரத்தில்; அசோக் குமார் அனுபவ நடிப்பு கை கொடுத்துள்ளது.லாராவாக அனுஷ்ரேயா ராஜன், எம்.எல்.ஏ. ஃபரூக் யாசினாக மாத்யூ வர்கீஸ், சிங்கப்பூர் நண்பர்கள் சத்யா (திலீப் குமார்) மற்றும் தினேஷ் (பிரதீப்), ஸ்டெல்லாவாக வெண்மதி, ஜெயாவாக வர்ஷினி வெங்கட், ஓட்டுனர் லாரன்ஸாக பாலா, கவுன்சிலர் தாஸாக எஸ்.கே.பாபு மற்றும் பலர் க்ரைம் படத்திற்கான திருப்பங்களில் கை கோர்த்து நேர்த்தியாக செய்துள்ளனர்.
ஆர் ஜே ரவீன் ஒளிப்பதிவு, எடிட்டிங் வலர்ப்பாண்டி, ரகு ஸ்ரவண் குமார் இசை மற்றும் பின்னணி ஸ்கோர், கலை இயக்குனர் முருகன், எடிட்டிங் வலர்ப்பாண்டி என்று அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் ஒட்டு மொத்த கூட்டு முயற்சி படத்தின் விறுவிறுப்பை தக்க வைக்க உதவி செய்துள்ளனர்.
கடற்கரை ஓரம் ஒதுங்கும் ஒரு பெண்ணின் சிதைந்த சடலம், அந்த குற்றவாளியை தேடும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் விசாரணை வளையத்திற்குள் ஹவாலா பணம் மோசடி, கணவனின் பாலியல் வன்கொடுமைகள், விலை மாதுக்கள் குடும்பத்தின் அவல நிலை, ஆண்களிடம் அனுபவிக்கும் கொடுமைகள், ஆதரவற்றோர் இல்லத்தை தவறாக பயன்படுத்தும் தீவிரவாதிகள், அதனால் இல்லத்திலிருந்து துரத்தப்படும் மக்கள் அவர்களின் பரிதாப குரல்கள், ஒதுக்கப்படும் மக்களை காப்பாற்ற போராட தடம் மாறும் செயல்களில் ஈடுபட்டு உண்மை காதலை தொலைத்து விடும் அனாதைப்பெண்ணின் வாழ்க்கை என்று பலதரப்பட்ட சம்பவங்களுடன் மூன்று பெண்கள், ஒரே நிறத்தினாலான உடையால் ஏற்படும் தடுமாற்றத்தை திரைக்கதையமைத்து படத்தின் காட்சிகளை பரபரவென்று தோய்வு ஏற்படாதபடி கொடுத்து இறுதியில் ஒரு ட்விஸ்ட் வைத்து இரண்டாம் பாதியில் தொடர்வதாக முற்றுப்புள்ளி வைத்து முடித்திருக்கும் இயக்குனர் மணிமூர்த்தி அசத்தலாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.
மொத்தத்தில் எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்திருக்கும் லாரா வித்தியாசமான விறுவிறுப்பான சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் சப்ஜெக்ட் அசர வைக்கும்.