லவ் விமர்சனம்: லவ் திருமணத்தில் சிக்கல் ஏற்படுத்தும் சண்டை கட்டுப்பாட்டை இழந்து உணர்ச்சிகள் ஏற்படுத்தும் விபரீத முடிவு | ரேட்டிங்: 2.5/5

0
438

லவ் விமர்சனம்: லவ் திருமணத்தில் சிக்கல் ஏற்படுத்தும் சண்டை கட்டுப்பாட்டை இழந்து உணர்ச்சிகள் ஏற்படுத்தும் விபரீத முடிவு | ரேட்டிங்: 2.5/5

ஆர் பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியிருக்கும் படம் லவ்.

இதில் பரத், வாணி போஜன்,ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் அனே போப், சுவயம் சித்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-பாடலாசிரியர் – ராஜா, இசையமைப்பாளர் – ரோனி ரஃபேல், எடிட்டர் -அஜய் மனோஜ்,ஒளிப்பதிவாளர் – பிஜி முத்தையா, பிஆர்ஒ-சதீஷ் ஏய்ம்.

பணக்கார பெண்ணான வாணிபோஜன் சொந்த தொழில் செய்து வெற்றி பெற போராடிக்கொண்டிருக்கும் பரத்தை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார். ஒரு வருடம் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வரும் வரை காத்திருக்கச் சொல்கிறார் பரத். ஆனால் பரத்தால் சொன்னபடி தொழிலில் முன்னேற முடியாமல் கஷ்டப்படுகிறார், இதனிடையே இரண்டு மாத கர்ப்பத்தை தெரிவிக்க வீட்டிற்கு வரும் வாணிபோஜன் அங்கே பரத் குடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து கோபம் கொள்கிறார். வாய் சண்டை கைகலப்பில் முடிய பரத் வாணி போஜனை தள்ளி விட தலையில் அடிபட்டு இறக்கிறார். இதனால் அதிர்ச்சியில் உறையும் பரத் பாத்ரூமில் மனைவியின் உடலை மறைத்து வைக்கிறார். அப்பொழுது பரத்தின் நண்பர் விவேக் பிரசன்னா அங்கே வந்து தன் மனைவியும் அவருடைய நண்பரும் சேர்ந்த தன்னை ஏமாற்றுவதாகவும் அவர்களை பழி வாங்க வேண்டும் என்று புலம்பி தள்ளுகிறார். அவரை சமாதானப்படுத்தும் பரத், மனைவியுடன் சமரசமாக பேசுமாறு அறிவுரை கூறுகிறார். இதனிடையே பரத்தின் இன்னொரு நண்பன் டேனியல் கள்ளக்காதலியுடன் வருகிறார். இவர்களை வீட்டிலிருந்து விரட்ட நினைக்கும் பரத்திற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறந்த மனைவி வாணி போஜன் உயிரோடு வீட்டிற்கு உள்ளே வருகிறார். உண்மையில் நடந்தது என்ன ? பரத் தன் கற்பனையில் நடந்த சம்பவங்களா? இறந்தது யார் பரத்தா? வாணிபோஜனா? என்பதே க்ளைமேக்ஸ்.

மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கும் கணவனாகவும்,மனைவிக்கு துரோகம் செய்யும் சிக்கல் நிறைந்த வாழ்க்கை வாழும் பரத், தன் மனசாட்சியை கற்பனையாக உருவகம் செய்து தான் செய்யும் காரியத்திற்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கும் குழம்பிய மனநிலையை பயம், கோபம், இயலாமை கலந்து இயல்பாக பதிவு செய்துள்ளார் பரத்.

கணவனின் தொழில் சம்பந்தமாக உறுதுணையாக இருந்தாலும். கணவனின் நம்பிக்கை துரோகத்தை பொறுக்காத மனைவியாக வாணி போஜன் எடுக்கும் முடிவு திருமணத்தில் இக்கட்டான சூழ்நிலையில் தகராறு ஏற்பட எதிர்பாராத விபரீதம் நடக்கும் போது அதை சமாளிக்க முடியாமல் திணறும் மனைவியாக நேர்த்தியாக தன் நடிப்பால் சிறப்பாக செய்துள்ளார்.

மற்றும் ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் அனே போப், சுவயம் சித்தா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வந்து போகின்றனர்.

இசையமைப்பாளர் – ரோனி ரஃபேல், எடிட்டர் -அஜய் மனோஜ்,ஒளிப்பதிவாளர் – பிஜி முத்தையா ஒரே அபார்ட்மெண்டில் நடக்கும் கதைக்களத்தை இயன்றவரை சுவாரஸ்யத்துடன் கொடுக்க முயற்சித்துள்ளனர்.

ஷைன் டாம் சாக்கோ, ரஜிஷா விஜயன், சுதி கோப்பா மற்றும் ஜானி ஆண்டனி ஆகியோர் நடிப்பில் காலித் ரஹ்மான் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு ஒடிடியில் வெளியான மலையாளத் திரைப்படம் லவ். இதை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் ஆர்.பி.பாலா.திருமணத்தில் விஷயங்கள் சிக்கலனால் தம்பதிகள் மகிழ்ச்சியான தீர்வுடன் வெளிப்படுவார்களா அல்லது திருமண தகராறில் சிக்கினால் திருமணமான ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் குறைந்தபட்சம் ஒரு சந்தர்ப்பம் இருக்கும், அவர்கள் அனைத்தையும் சுமூகமாக முடிக்க நினைப்பார்கள் அல்லது வேறு விதமாக முடிவு எடுப்பார்கள். இது ஒரு வினாடிக்கு அவர்கள் எடுக்கும் முடிவு எத்தகைய சிக்கலை ஏற்படுத்தி வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை ஆர் பி பாலா ஒரு புதிரான த்ரில்லராக கொடுத்திருக்கிறார். இது திருமணத்தில் வெறுப்பாக மாறக்கூடிய காதலைப் பற்றியும், ஒரு ஜோடி அவர்கள் அனுபவிக்கும் நம்பிக்கைப் பிரச்சினைகளிலிருந்து எவ்வாறு வெளியேற முயற்சிக்கிறது என்பதைப் பற்றியும் பேசுகிறது. தன் வாழ்க்கையை நண்பனின் வாழ்க்கையாக உருவகம் செய்து பிரச்சனைகளை தீர்க்க எடுக்கும் முயற்சியை ஒரு அபார்ட்மெண்ட்டுக்கள் நடப்பதாக க்ளைமேக்சில் கதையின் போக்கு மாறுவதை அப்படியே இயக்கியுள்ளார் ஆர்.பி.பாலா.

மொத்தத்தில் ஆர் பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியிருக்கும் படம் லவ் திருமணத்தில் சிக்கல் ஏற்படுத்தும் சண்டை கட்டுப்பாட்டை இழந்து உணர்ச்சிகள் ஏற்படுத்தும் விபரீத முடிவு.