லவ் மேரேஜ் சினிமா விமர்சனம்

0
586

லவ் மேரேஜ் சினிமா விமர்சனம் : லவ் மேரேஜ்  அனைவரின் மனதை கவர்ந்து கலகலப்பூட்டும் குடும்ப விழா | ரேட்டிங்: 3/5

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்சார்பில் டாக்டர்.சுவேதா ஸ்ரீ – ஸ்ரீநிதி சாகர் தயா‌ரித்திருக்கும் லவ்  மேரேஜ் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வெளியிட  எழுதி இயக்கியிருக்கிறார் சண்முக பிரியன்.

​இதில் விக்ரம் பிரபு இராமச்சந்திரன், சுஷ்மிதா பட் – அம்பிகா,மீனாட்சி தினேஷ் – ராதா, சத்யராஜ் – எம்.எல்.ஏ,ரமேஷ் திலக் – குரு, கஜராஜ் – ராமச்சந்திரன் அப்பா, அருள்தாஸ் – ராமச்சந்திரன் மாமா, முருகானந்தம் – அம்பிகாவின் தாய்மாமன்,கோடாங்கி வடிவேல் -கல்யாண தரகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவாளர் – மதன் கிறிஸ்டோபர்,படத்தொகுப்பாளர் – பரத் விக்ரமன்,இசை – ஷான் ரோல்டன், பாடலாசிரியர் – மோகன் ராஜன் – ஷான் ரோல்டன்,மக்கள் தொடர்பு – யுவராஜ்

2020ஆம் ஆண்டு கொரோனா தீவிரமாக பரவ தொடங்கிய போது கதைக்களம் ஆரம்பமாகிறது.  மதுரையில் வசிக்கும் 33 வயதான ராமச்சந்திரன் என்கிற ராம் (விக்ரம் பிரபு), திருமண வயதை தாண்டியதால் பெண் கிடைக்காமல் அவதிப்படுகிறார். அவரை யாரையும் திருமணம் செய்து கொள்ள முன் வராததால் கோபிசெட்டிபாளையத்தில் வேறு சாதியைச் சேர்ந்த வரன் வர குடும்பத்தினருடன் பெண் பார்க்க செல்லும் இடத்தில் நிச்சயதார்த்தம் முடிவு செய்ய அம்பிகா (சுஷ்மிதா பட்) என்னும் பெண்ணுடன் அவரது நிச்சயதார்த்தம்  முடிந்து விடுகிறது. ஊருக்கு கிளம்பும் நேரத்தில் பயணம் செய்த வண்டி  பழுதாகி விட அந்த நேரத்தில் லாக்டவுன் போடுவதால் ராமின் குடும்பத்தினர் அம்பிகாவின் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ராம் அம்பிகாவுடன் பேச முற்படும் போது சரியான சந்தர்ப்பம் அமையாமல் போகிறது. குடும்பத்தினர் லாக்டவுன் காலத்திலே திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். இதை கேள்விப்படும்  சுஷ்மிதா வீட்டை விட்டு ஓடி விடுகிறார். இதனால் ராமச்சந்திரன் குடும்பத்தினர் அம்பிகாவின் குடும்பத்தினரை இழிவாக பேசி அவமானப்படுத்த, இரு குடும்பத்தினருக்கும் சண்டை ஏற்படுகிறது. ராமச்சந்திரனின்
திருமணக் கனவு நிராசையாகிறது. லாக்கடவுனில் மாட்டிக் கொண்டு, ஊருக்கு செல்ல முடியாமல் ராம் குடும்பத்தினர் தவிக்கின்றனர்.  அங்கேயே தங்கியிருக்கும் ராமிற்கு வேறொரு பெண் கிடைத்ததா? இல்லையா? அதில் வரும் சிக்கல் என்ன? ஓடிபோன  அம்பிகா ஏன் திரும்பி வந்தார்? ராமிற்கு யாருடன் திருமணம் நடந்தது? என்பதே படத்தின் சுபமான முடிவு.

வயது ஏறும் போது தான் பெரும்பாலான ஆண்களின் பிரச்சினை தெரிய வரும், சுற்றத்தார் ஏளனத்திற்கு உள்ளாகும் போது என்ன மனநிலையில் இருப்பார்களோ அதை தன்னுடைய ராம் கதாபாத்திரத்தின் மூலம் உடல் மொழியிலும் வசனத்திலும் நன்றாக பிரதிபலித்திருக்கிறார் விக்ரம் பிரபு. முறிந்த கல்லூரி காதல், நிச்சயித்த பெண்ணிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு,  வித்தியாசமான தாழ்வு மனப்பான்மை, தடங்களால் மன உளைச்சல்,  தன்னுடைய ராசியை நினைத்து வருத்தப்படுவது, புதிய காதலை எண்ணி தடுமாறுவது என்று புதிய பரிணாமத்தில் மிளிர்க்கிறார் விக்ரம் பிரபு.

நிச்சயித்த பெண் அம்பிகாவாக சுஷ்மிதா பட்  முதல் காட்சியில் காட்டும் திருப்பத்திற்கு முக்கிய புள்ளியாக இருப்பது தான் இவரின் பங்களிப்பு.

அம்பிகாவின் தங்கை ராதாவாக மீனாட்சி தினேஷ், துடுக்கான பேச்சு, பக்கத்து வீட்டு பெண் போல் தோற்றம், இளகிய மனதுடன் நடிப்பால் வசீகரிக்கிறார்.

சத்யராஜ் சிறப்பு தோற்றம் தேவையில்லாத திணிப்பு.

ராமச்சந்திரன் மாமாவாக பேச்சால் மிரள வைக்கும் இம்சை அருள்தாஸ், அம்பிகாவின் தாய் மாமனாக வளவள முருகானந்தம், கஜராஜ், ரமேஷ் திலக், கோடாங்கி வடிவேல், உட்பட அனைத்து துணைக்கதாபாபாத்திரங்கள் படத்திற்கு பலம்.

ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர்,  இசை ஷான் ரோல்டன் , படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் சரியான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

லாக்டவுன்  நேரத்தில் திருமண தடை நீங்கி 33 வயதில் மகிழ்ச்சியாக திருமணம் நடைபேற  இருக்கும் போது ஏற்படும் அதிர்ச்சி சம்பவம், ஒரு இளைஞனின்  வாழ்க்கையில் எத்தகைய இன்னல்களை எதிர் கொண்டு குடும்பத்தினரின், உறவினர்களின் ஏளனத்தை சமாளித்து, அவனின் தூய்மையான மனதிற்கேற்றவாரு நல்லதே நடப்பது போன்று சிம்பிளான திரைக்கதை என்றாலும்  அதை மெல்லிய நகைச்சுவை கலந்து உயிரோட்டமாக காதல் உணர்ச்சிகளின் குவியலாக நிறைவாக இயக்கியுள்ளார் சண்முக பிரியன்.

மொத்தத்தில் அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் டாக்டர்.சுவேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்திருக்கும் லவ் மேரேஜ்  அனைவரின் மனதை கவர்ந்து கலகலப்பூட்டும் குடும்ப விழா.