லக்கி பாஸ்கர் சினிமா விமர்சனம் : லக்கி பாஸ்கர் சூழ்ச்சிகள் நிறைந்த வங்கி மற்றும் பங்கு தரகு மோசடிகள் பற்றிய மனதைக் கவரும் உற்சாகமூட்டும் திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் | ரேட்டிங்: 4/5

0
785

லக்கி பாஸ்கர் சினிமா விமர்சனம் : லக்கி பாஸ்கர் சூழ்ச்சிகள் நிறைந்த வங்கி மற்றும் பங்கு தரகு மோசடிகள் பற்றிய மனதைக் கவரும் உற்சாகமூட்டும் திருப்பங்கள் நிறைந்த திரைப்படம் | ரேட்டிங்: 4/5

லக்கி பாஸ்கர் சினிமா விமர்சனம் :

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்திருக்கும் லக்கி பாஸ்கர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி.

இதில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, சச்சின் கெடேகர், டின்னு ஆனந்த், ராம்கி, சாய் குமார், ரித்விக், ராஜ்குமார் காசிரெட்டி, சர்வதாமன் பானர்ஜி, ஷரத் கெடேகர்,   ராங்கி, ஹைப்பர் ஆதி, சூர்யா ஸ்ரீPனிவாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :-இசை : ஜி.வி. பிரகாஷ் குமார், எடிட்டிங் : நவீன் நூலி, ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி, மக்கள் தொடர்பு : டி ஒன், சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

1989 ஆம் முதல் 1992  ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையில் பம்பாயில் நடுத்தர வர்க்க வங்கி காசாளராக இருக்கும் பாஸ்கர் குமாரை (துல்கர் சல்மான்) சுற்றி கதைக்களம் நகர்கிறது. அவர் தனது தம்பி, சகோதரி, நோய்வாய்ப்பட்ட தந்தை, மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி) மற்றும் மகன் கார்த்திக் (ரித்விக்) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசிக்கிறார். குடும்ப சுமை காரணமாக அவர் நிதி நெருக்கடிகள் மற்றும் பெருகிய கடன்களால் சிக்கித் தவிக்கிறார். பகுதி நேரமாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணி நமித்தமாக உதவி செய்து சிறுக சம்பாதித்தாலும் கடன்களை அடைக்க முடியவில்லை. அவர் பணி புரியும் வங்கியில் நேர்மையாகயும் சாமர்த்தியமாகவும் செய்யும் செயல்களால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட, தான் எப்படியும் உதவி மேலாளராக பதவி உயர்வு பெற்று விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேலையில் அதுவும் கனவாக போகிறது. இதனால் விரக்தியில் இருக்கும் பாஸ்கர் நண்பர் மூலம் ஆன்டனி( ராம்கி) அறிமுகமாக, துறைமுக சரக்கை வெளியே எடுக்க பணம் கொடுத்தால் அதை விற்று கமிஷன் தருகிறேன் என்று கூற, வேறு வழியின்றி வங்கியில் பணத்தை எடுத்து பின்னர் திருப்பி வைத்து விடும் கையாடல் முதலில் பத்தாயிரத்தில் தொடங்கி பத்து லட்சமாக விரிவடைகிறது. ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டத்தால் தப்பிக்கும் பாஸ்கருக்கு தான் நினைத்த வாழ்க்கையும், கடனில்லாமல், தம்பி, தங்கையை படிக்க வைப்பதுடன், பணம் சம்பாதிக்கும் வழியையும் கண்டு பிடித்து அதன்படி பயணிக்கிறார். பாஸ்கருக்கு பதவி உயர்வு கிடைத்து வங்கியின் மேலாளராகிறார் இந்த அதிகாரத்தால் அவருக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொண்டுவருகிறது, பேராசையில் அவர் பங்குச் சந்தையில் ஒரு பெரிய புள்ளியாக இருக்கும் ஹர்ஷா மெஹ்ராவை சந்திக்கிறார், அவரது குழுவுடன் சேர்ந்து, கோடிகளை குவிக்கிறார். இந்த ஈடுபாடு அவரை சிபிஐ விசாரணையோடு கடுமையான சிக்கலுக்கு உள்ளாக்குகிறது அவரது மனைவியுடனான (மீனாட்சி சவுத்ரி) உறவில் விரிசலும் உண்டாகிறது. சக்தி வாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட கோடிக்கணக்கான பணம் காணாமல் போன வங்கி மோசடி ஊழலில் பாஸ்கர் சிக்குகிறார். அதன் பின் பாஸ்கர் என்ன செய்கிறார், என்ன விளைவுகளை சந்திக்கிறார்? தனது களங்கத்தை எப்படி சாமர்த்தியமாக அழிக்க முயல்கிறார்? பாஸ்கர் அதிர்ஷ்டத்தால் தப்பித்தாரா? என்பதுதான் மீதமுள்ள கதை.

துல்கர் சல்மான் பாஸ்கராக ஒரு தனித்துவமான நடிப்பை வழங்கி தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு வசீகரத்தையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வருகிறார். சல்மானின் சித்தரிப்பு உண்மையிலேயே கதையைத் தொகுத்து, பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தொடர்புபடுத்தக்கூடியதாகவும் அமையும் வண்ணம், பாஸ்கர் செய்வது சரியா தவறா என்பதைக் காட்டிலும் அவர் எடுக்கும் முடிவுகளில் சாதுர்யத்தை கடைபிடித்து தப்பிக்கும் காட்சிகளில் கை தட்டல் பெறுகிறார். நடுவகிடு சிகையலங்காரம், பெரிய கண்ணாடியுடன் நடை உடை பாவனையில் அசத்தி நேர்மையான மனிதன் தடம் மாறி பணத்தின் மோகத்தால் மோசடியில் இறங்கி அதிலிருந்து தப்பிக்க போடும் சூழ்ச்சிகள் நிறைந்த மையப்புள்ளி கதையில் துல்கரின் நடிப்பு பிரமாதம்.

மீனாட்சி சவுத்ரி காதல் மனைவியாக கணவனுக்கு உற்ற நேரத்தில் அரவணைத்து அதே நேரம் தவறு செய்யும் போது சுட்டிக் காட்டி எச்சரித்து திருத்த நினைக்கும் சமயத்தில் தன் பங்களிப்பை கச்சிதமாக செய்து படம் முழுவதும் பயணித்து படத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

இவருடன் சச்சின் கெடேகர், டின்னு ஆனந்த், ராம்கி, சாய் குமார், ரித்விக், ராஜ்குமார் காசிரெட்டி, சர்வதாமன் பானர்ஜி, ஷரத் கெடேகர், ராங்கி, ஹைப்பர் ஆதி, சூர்யா ஸ்ரீPனிவாஸ் மற்றும் பலர் படத்திற்கு பாலமாக அமைந்து தூணாக நிற்கிறார்கள். சிஏ படித்த தந்தையாக வருபவர் இறுதிக்காட்சியில் துல்கரின் பணத்தாசைக்கு முற்றுப்புள்ளி வைத்து மகனை சாமார்த்தியமாக தப்பிக்க உதவி செய்யும் காட்சிகள் அதகளம்.

பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள வெங்கி அட்லூரியின் லக்கி பாஸ்கரை விவேகமான முறையில் கையாள சுறுசுறுப்பான திரைக்கதைக்கு இசை ஜி.வி. பிரகாஷ் குமார் அதிரடி செய்துள்ளார், கச்சிதமான கூர்மையான எடிட்டிங் நவீன் நூலி, 80-90களின் பிற்பகுதியில் காட்சிக் கோணங்கள், தெருக்கள், வங்கிகள், பழமையான வீடுகள், வாகனங்கள், பரிவர்த்தனைகள், விசாரணை வளையங்கள் என்று ஒளிப்பதிவில் நிமிஷ் ரவி பங்களிப்பு கச்சிதம்.

இயக்குனர் வெங்கி அட்லூரி நிதி உலகில் மோசடிகள் ஆதிக்கம் செலுத்திய கடந்த காலத்தின் பாம்பேயை சுற்றி நகர்ந்து 1992 ஆம் ஆண்டின் பிரபல பத்திர மோசடியுடன் இணைந்து அமைக்கப்பட்ட இப்படம், வங்கி ரசீதுகளைப் பயன்படுத்தி பங்குச் சந்தையில் எப்படி அதிர்ஷ்டத்தால் சம்பாதித்தார்கள் என்பதை ஆராய்ந்து பல்வேறு விவரிப்புகளுடன் ஒரு மனிதனின் பயணத்தை விளக்கி அவருடைய குடும்பத்தை உயர்த்துவதற்கான தீர்மானத்துடன் செயல்படும் அசாதாரணமான சூழ்நிலையின் பயணத்தை விவரிக்கிறது. இயக்குனர் வெங்கி அட்லூரியின் விதிவிலக்கான கதை, பார்வையாளர்களை திரையில் கவர்ந்திழுக்க வைக்கிறது. திரைப்படத்தின் முதல் பாதி நிதித்துறையில் நடக்கும் சிறு குற்றங்களை சித்தரிக்கிறது மற்றும் பிற்பாதி நிதி மோசடிகள் பொருளாதாரத்தை எவ்வளவு ஆழமாக பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது.ஒரு இறுக்கமான திரைக்கதையின் மூலம் லக்கி பாஸ்கர் பணத்தின் மதிப்பையும், உங்கள் நிதி நிலையின் அடிப்படையில் உங்களைப் பற்றிய சமூகத்தின் பார்வை எப்படி மாறுகிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். முக்கிய கதாபாத்திரம் செல்வத்தை அடையும் போது ஏற்படும் மாற்றத்தையும், இந்த மாற்றம் மற்றவர்களுடனும் அவர்களது குடும்பத்துடனும் அவர்களது உறவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இது விளக்குகிறது. ஹீரோ தன்னுடைய மோசடி பயணத்தை தானே பலவித காலகட்டங்களில் விவரிப்பது போல சொல்லியிருப்பது புது வித அனுபவத்தை கொடுத்து படத்தில்; கதாபாத்திரத்தின் சித்தரிப்பு நெறிமுறையா இல்லையா என்பதை பார்வையாளர்களின் பார்வைக்கு விடப்படுகிறது. ய+கிக்கக்கூடிய கதைக்களம் தான் என்றாலும் அதை திருப்புமுனையோடு சஸ்பென்ஸ் கலந்து கொடுத்திருப்பதில் பெரிய பெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்; வெங்கி அட்லூரி. பணமோகத்திற்கு எந்த இடத்தில் தடை போட வேண்டும் அதிலிருந்து தப்பிக்க எத்தகைய முன்னேற்பாடுகள், புத்திசாலித்தனங்கள் அதைவிட அதிர்ஷ்டம் வேண்டும் என்பதையும் டைட்டில் பெயரிலேயே சொல்லிவிடுகிறார் இயக்குனர்; வெங்கி அட்லூரி.

மொத்தத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்திருக்கும் லக்கி பாஸ்கர் சூழ்ச்சிகள் நிறைந்த வங்கி மற்றும் பங்கு தரகு மோசடிகள் பற்றிய மனதைக் கவரும் உற்சாகமூட்டும் திருப்பங்கள் நிறைந்த திரைப்படம்.