ரெஜினா சினிமா விமர்சனம் : ரெஜினா அமைதியான ஆனால் கலங்கடிக்கும் பெண் சூறாவளி | ரேட்டிங்: 3/5

0
390
ரெஜினா சினிமா விமர்சனம் : ரெஜினா அமைதியான ஆனால் கலங்கடிக்கும் பெண் சூறாவளி | ரேட்டிங்: 3/5

எல்லோ பியர் புரொடக்‌ஷனஸ் எல்எல்பி சதீஷ் நாயர் தயாரித்திருக்கும் ரெஜினா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள மலையாள பிரபலம் டோமின் டி சில்வா.

கதையின் நாயகியாக சுனைனா, நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பானி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை- சதீஷ் நாயர், ஒளிப்பதிவு – பவி கே.பவன், கலை இயக்குனர்-கமருதீன், படத்தொகுப்பு- டோபி ஜான், நடனம் -விஜி சதீஷ், டோமின் டி சில்வா, ஆடை வடிவமைப்பு-ஏகன், மக்கள் தொடர்பு ஜான்சன்.

சிறு வயது பள்ளி பருவத்தில் ரெஜினாவின்(சுனைனா) தந்தை கண்ணெதிரே கொள்ளப்படுவதை பார்த்து மன அழுத்தத்தில் அமைதியான பெண்ணாக மாறி விடுகிறாள். பல வருடங்கள் கழித்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு காரணம் அன்பும், பரிவும், காதலும் சேர்த்து கொடுக்கும் வங்கி ஊழியரான ஜோவை (அனந்த் நாக்) திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஒரு நாள் ஜோ வேலை செய்யும் வங்கியில் நுழையும் முகமுடி கொள்ளையர்கள் ஜோவை கொலைசெய்து விட்டு பணம், நகையை கொள்ளையடித்து செல்கின்றனர். அவர்கள் செல்லும் வண்டி விபத்துள்ளாக, டிரைவர் மட்டும் போலீசில் மாட்டிக்கொள்கிறார் மற்றவர்கள் தப்பித்து சென்று விடுகின்றனர். மீண்டும் ஒரு பேரதர்ச்சிசை தாங்க முடியாமல் தவிக்கும் ரெஜினா கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் பல நாட்கள் காத்து கிடக்கிறார். ஆனால் காவல் நிலையத்தில் எந்த ஒரு மரியாதையும், நீதியும் கிடைக்காத ரெஜினா தனது கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களை தேடிச் செல்கிறார்.  முதலில் கோவாவில் ஒரு கடற்கரை உணவகத்தில் வேலை செய்கிறார். அந்த உணவகத்தின் உரிமையாளர் ஜூலியுடன் நட்பாக பழகி நன்மதிப்பை பெறுகிறார். ஜூலியின் கணவர் அறிவு (நிவாஸ் ஆதித்தன்)  சிறையிலிருந்து வர, தன்னுடைய திட்டத்தை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆயுத்தமாகிறார் ரெஜினா.  ஜூலியையும், அவள் குழந்தையையும் ரெஜினா என்ன செய்தார்? அறிவு யார்? அவரை பழி வாங்க ரெஜினா முற்படுகிறார்? அதன் மூலம் யாரையெல்லாம் பின் தொடர்ந்து பழி வாங்குகிறார்? காவல் நிலையத்தில் தனக்கு கிடைக்காத மரியாதையை தன் செயல் மூலம் எப்படி பெறுகிறார்? என்பதே பரபரக்கும் க்ளைமேக்ஸ்.

ரெஜினா என்ற பெண்ணின் மையக்கதையின் நாயகியாக சுனைனா முதல் முறையாக அழுத்தமான தனது பங்களிப்பை அனைத்து காட்சிகளிலும் முழுமையாக வழங்கியுள்ளார். வாழ்க்கையில் அன்பாக இருந்தவர்களை இழந்து தவிக்கும் அப்பாவி பெண்ணிலிருந்து, பழி வாங்கும் பெண்ணாக உருமாறி எடுக்கும் வஞ்சகம், அமைதி காத்து நேரம் வரும்போது தன்னுடைய பலத்தை காட்டி காரியத்தை சாதித்துக் கொள்ளும் பெண் சிங்கமாக கர்ஜிக்கிறார். சுயமரியாதை, நீதி கிடைக்காத பெண்ணிற்கு அதை தக்க வைத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வாள் என்பதை காட்டும் வகையில் தைரியமாக புகைபிடிப்பது, மது அருந்துவது என்று காட்சிகளில் தாராளமாக துணிந்து நடித்துள்ளார் சுனைனா.

ஜூலியாக ரிது மந்திரா, ஜூலியின் கணவராக நிவாஸ் ஆதித்தன், கேங்ஸ்டராக சாய் தீனா, அனந்த் நாக், வங்கி மேலாளராக கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பானி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு உணர்ந்து கச்சிதமாக செய்துள்ளனர்.

பவி கே.பவன் ஒளிப்பதிவு, சதீஷ் நாயர் இசை மற்றும் பின்னணி இசை, கலை இயக்குனர்-கமருதீன், படத்தொகுப்பு- டோபி ஜான் ஆகிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் பணியை நிறைவுடன் செய்துள்ளனர்.

ஒரு சராசரி பெண் தனக்கு நேர்ந்த அவலங்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள எடுக்கும் முடிவு ஆயுதத்தால் சாதித்து காட்டி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளும் திரைக்கதையில் மாவோயிஸ்ட் தந்தை கொலை, காதல் கணவன் கொலை, வங்கிக் கொள்ளை, காவல் நிலையத்தில் அவமானம், நீதி கிடைக்காமல் தவிப்பது, பழி வாங்குவது, என்று துண்டு துண்டாகத் தொடங்கி பின்னர் அது சாமானிய பெண்ணின் பழிவாங்கும் கதையாக மாறிவிடுகிறது. அதன் பின் ஊகிக்க கூடிய திரைக்கதையை இறுதியில் சில திருப்பங்களுடன் கொடுத்திருக்கிறார் மலையாள திரைப்பட இயக்குனர் டொமின் டி சில்வா.

மொத்தத்தில் எல்லோ பியர் புரொடக்‌ஷனஸ் எல்எல்பி சதீஷ் நாயர் தயாரித்திருக்கும் ரெஜினா அமைதியான ஆனால் கலங்கடிக்கும் பெண் சூறாவளி.