ராயன் சினிமா விமர்சனம் : சுவாரஸ்யம் கலந்த உணர்ச்சி பாசப்போராட்டங்களை தெறிக்க விடும் பழி வாங்கும் ஆக்ஷனின் த்ரில்லுடன் தில் காட்டும் தனிகாட்டு ராஜா | ரேட்டிங்: 4/5
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் ராயன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ்.
இதில் தனுஷ், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ்,செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார்,சரவணன்,திலீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை : ஏ. ஆர். ரஹ்மான்,ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ், படத்தொகுப்பு : பிரசன்னா, நடன இயக்குனர் : பிரபு தேவா, பாபா பாஸ்கர், தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஜாக்கி, பாடலாசிரியர் : கவிஞர் தனுஷ், கானா கதர், அறிவு, ஆடை வடிவமைப்பாளர் : காவ்யா ஸ்ரீராம், சண்டைப் பயிற்சி : பீட்டர் ஹெய்ன், ஒப்பனை : பி. ராஜா, படங்கள் : தேனி முருகன்,விளம்பரம் : சிவம் சி. கபிலன், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ரமேஷ் குச்சிரையார் , நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் சீனிவாசன், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது.
இளம் பருவத்தில் காத்தவராயன் (தனுஷ்)இரண்டு தம்பிகள் முத்துவேல்ராயன் (சுந்தீப் கிஷன்), மாணிக்கவேல்ராயன் (காளிதாஸ் ஜெயராம்) மற்றும் குழந்தை தங்கை துர்கா (துஷாரா விஜயன்) ஆகியோர் பெற்றோர்களுடன் வசிக்கின்றனர்.ராயனிடம் பெற்றோர் தம்பி, தங்கையை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சந்தைக்கு சென்றவர்கள் திரும்பி வராமல் போய்விடுகின்றனர்.அதனால் ராயன் தம்பி, தங்கையை அழைத்துக் கொண்டு ஊர் சாமியாரிடம் தஞ்சமடைந்து அவர் வீட்டில் இரவு தங்குகிறார். அங்கு சாமியார் தனது தங்கையை விற்க முயல்வதை அறிந்து அங்கிருந்து தப்பித்து செல்லும் போது சாமியாரை கொல்ல நேரிடுகிறது. கிராமத்தில் தாய், தந்தையை தொலைத்த ராயன், கொலைபழிக்கு பயந்து தன் தம்பி, தங்கையுடன் காய்கறி சரக்கு லாரி வண்டியில் ஏறி சென்னைக்கு வந்து விடுகிறார். அவர்கள் சென்னையில் காய்கறி சந்தையில் சேகரின் (செல்வ ராகவன்) உதவியைப் பெற்று கடுமையாக வேலை செய்து வாடகைக்கு வீடு எடுத்து ராயன் தன் தம்பிகள், தங்கையை பாசத்துடன் வளர்கிறார். ராயனின் விடாமுயற்சியால் பாஸ்புட் உணவகம் ஆரம்பித்து தன் குடும்பத்தின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மூத்த தம்பி முத்துவேல் ராயன் கோபக்காரன் குடித்து விட்டு சண்டை போட்டு பிரச்சனை ஏற்பட்டால் அவனுக்காக ராயனும், சேகரும் மன்னிப்பு கேட்டு அழைத்து வருவதை வாடிக்கையாக இருக்கிறது. முத்துவை காதலித்து, அவனை திருந்த முடியாமல் தவிக்கிறார் அபர்ணா பாலமுரளி. 2வது தம்பி மாணிக்கம் கல்லூரி மாணவன், அங்கே நடக்கும் கல்லூரி தேர்தலில் போட்டியிட பிரச்சனைகளை சந்திக்க, அண்ணன் ராயனின் வற்புறுத்தலில் தேர்தலில் நிற்க முடியாமல் மனவருத்தத்தில் இருக்கிறார். முத்துவும், மாணிக்கமும் நெருக்கமான பாசத்துடன் இருக்க ராயன் அண்ணனிடமிருந்து விலகியே இருக்கின்றனர். ஆனால் தங்கை துர்கா அண்ணன் ராயனிடம் மிகுந்த பாசம் வைத்து இருக்கிறார். ராயன் தன் தங்கை துர்காவுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறார். இதற்கிடையே அந்தப் பகுதியில் 25 ஆண்டுகளாக கந்துவட்டி, கொடுக்கல், வாங்கல், மிரட்டல், கொலை, கொள்ளை என்று சேது (எஸ்.ஜே. சூர்யா) மற்றும் துரை (சரவணன்) ஆகிய இரண்டு மாஃபியா டான்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரு தாதாக்களும் பகையோடு இருந்தாலும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், புதிதாக பொருப்பேற்கும் போலீஸ் கமிஷனர் (பிரகாஷ் ராஜ்) இந்த இரண்டு மாஃபியா டான்களை பழிவாங்க நினைக்கிறார். டான்கள் சேதுவுக்கும் துரைக்கும் இடையே சைலன்ட்டாக சண்டையை ஏற்படுத்தி மோத வைக்கிறார். ராயன் தனது சகோதரி துர்காவின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது, போலீஸ் தாதா துரையின் மகனை கொல்ல வகுத்த சூழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக முத்து மாட்டிக் கொண்டு இந்த மோதலில் நடக்கும் சண்டையில் துரையின் மகனை கொன்று விடுகிறார். இதனால் ஆத்தரமடையும் துரை கோபத்தில் ராயனிடம் தம்பி முத்துவை தனது வீட்டுக்கு அனுப்ப சொல்ல, ராயன் வேறு வழியின்றி தன் தம்பிகளுடன் துரை வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்து விட்டு தப்பித்து சென்று விடுகிறார். துரையை கொலை செய்தது யார் என்று ஒரு பக்கம் போலீசும், மறுபக்கம் சேதுவும் அவனது ஆட்களும் தேடுகிறார்கள்.இறுதியில் தன் தம்பிகளை ராயன் போலீசிடமிருந்தும், சேதுவிடமிருந்தும் எப்படி காப்பாற்ற முயல்கிறார்? தம்பிகள் இருவரும் அண்ணனை நம்பி இருந்தார்களா? ராயனுக்கு எதிராக தம்பிகள் மாற காரணமென்ன? அண்ணன், தம்பி, தங்கை பாசம் கடைசியில் என்ன ஆனது? வென்றதா? N;தாற்றதா? என்பதே படத்தில் பரபரக்கும் ஆக்ஷன் கலந்து ரத்தம் தெறிக்கும் க்ளைமேக்ஸ்.
காத்தவராயனாக தனுஷ் கூர்மையான ஆனால் அமைதியான பார்வை, குறைவான அழுத்தமான வசனம், மொட்டைத் தலையுடன் தான் நினைத்ததை செய்ய வைக்கும் சாதுர்யமான செயல், தன் குடும்பத்தைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள், அதற்காக கொலை கூட செய்யத்துணியும் துணிச்சல், மிரட்டி பணிய வைக்கும் தாதாவையே அடிபணிய வைக்கும் சாமர்த்தியம், எதிரிகளை துவம்சம் செய்வது, பாசக்கார அண்ணனான சிங்கிள் சிங்கமாக தனித்து நின்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி ரத்தம் தெறிக்க ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார் தனுஷ். தன் கதாபாத்திரத்தை விட மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிய பங்களிப்பை கொடுத்திருந்தாலும், அது தான் ராயனின் கேரக்டரை உயர்த்தி பிடித்து, படத்தின் முக்கிய வெற்றிக்கு வழி வகை செய்துள்ளது எனலாம். வெல்டன்.
செல்வராகவன் தனுஷிற்கு ஆரம்பம்; முதல் இறுதி வரை உற்ற பாதுகாவலராக, வழிநடத்தி செல்லும் உடன் பிறவா சகோதரராக தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார்.
முரட்டு மனிதராக தம்பி முத்துவெல்ராயனாக சந்தீப் கிஷன், கோபம், எதற்கும் கவலைப்படாத குணம், வெட்டியாக திரிந்து குடித்து விட்டு சண்டை போடுவது, இவரின் மூர்க்ககுணம் தான் படத்தின் திருப்புமுனையாக அமைந்து, படத்தின் திசையை மாற்றி அமைத்துவிடுவதில் முழு பங்கு வகித்துள்ளது.
காளிதாஸ் ஜெயராம் முதல் அண்ணனின் மேல் மரியாதை இருந்தாலும், இரண்டாவது அண்ணனிடம் காட்டும் பாசத்தால் தடம் மாறி சென்று பின்னர் வருந்தும் மாணிக்கவேல்ராயனாக சிறப்பாக செய்துள்ளார்.
அசால்டான மிரட்டல் வில்லனாக எஸ். ஜே. சூர்யா வந்தாலும், இரண்டு மனைவிகளிடம் மாட்டிக் கொண்டு அவதிப்படும் இடங்களில் நடிப்பில் தெறிக்க விடுகிறார்.
அலட்டிக்கொள்ளாமல் மாஸ்டர் பிளான் போட்டு வில்லன்களை மோதவிட்டு சைலன்ட் போலீஸ் வில்லத்தனத்தில் தனித்து தெரிகிறார் பிரகாஷ்ராஜ்.
பாசக்கார தங்கை துர்காவாக துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரம் இயல்பான வசன உச்சரிப்பு, நடை, உடை, பாவனை, அண்ணனை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள், அதற்காக வெறித்தனத்துடன் டாக்டரையே மிரட்டுவது, அண்ணனை காப்பாற்றி அதன் பின் அதற்கு காரணமானவர்களை தகுந்த நேரம் பார்த்து பழி வாங்கி பின்னர் அழுவது என்று நடிப்பு மட்டுமல்ல, ஆக்ஷனிலும் நேர்த்தியாக செய்து கை தட்டல் பெறுகிறார்.
அதட்டும் குரல், அசத்தல் நடனம், ஊடல் காதலுடன் அபர்ணா பாலமுரளி, சில காட்சகள் என்றாலும் வரலட்சுமி சரத்குமார்,சரவணன்,திலீபன் முக்கிய பங்களிப்பு சிறப்பு.
இரண்டு வித காலகட்டத்திற்கேற்ற காட்சிக்கோணங்கள், இரவு நேர துரத்தல் காட்சிகள், ரத்தம் தெறிக்க விடும் ஆக்ஷன், ஆக்ரோஷ மோதல்கள் என்று தன்னுடைய வியத்தகு ஒளிப்பதிவின் மூலம் தனித்தன்மையை நிரூபித்திருக்கிறார் ஓம் பிரகாஷ்
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகளில் பதற்றம் ஏற்படும் அளவிற்கு பின்னணி இசை என்று தெறிக்க விட்டு தனி ராஜாவாக அதகளம் செய்துள்ளார்.
படத்தில் சில சிறப்பான ஆக்ஷன் ஃபைட் பிளாக்குகள் குறிப்பாக இண்டர்வெல் ஆக்ஷன் சீக்வென்ஸ், மருத்துவமனை காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் ஆகியவை படத்தில் சிறப்பாக இருக்கும் சில குறிப்பிடத்தக்க காட்சிகள் மெய் சிலிர்;க்க வைக்கிறது.
எடிட்டர் பிரசன்னா ஜிகே படத்தில் உள்ள குறிப்பிடத்தக்க காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகளை அழகாக தொகுத்து வழங்கியிருப்பது படத்திற்கு பலம்.
தனுஷின் 50வது படம் எளிமையான அண்ணன், தம்பி, தங்கை பாசத்துடன் தாதாக்களின் தலையீடு, சண்டை கலந்து பழி வாங்கும் கதைக்களமாக எழுதி இயக்கியருக்கிறார் தனுஷ். இதில் குடும்ப சென்டிமெண்ட், பாசம், துரோகம், சூழ்ச்சி, பகையுடன் பல திருப்பங்கள் நிறைந்த வன்முறையோடு உணர்ச்சிகள் நிறைந்த படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் தனுஷ். தன் வாழ்க்கையை தியாகம் செய்து தன் உடன் பிறந்தோருக்காக வாழும் உன்னத எண்ணம் கொண்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ஆக்ரோஷம் நிறைந்த பாசக்கார அண்ணனின் வெளிப்பாடே ராயன். முதல் பாதி பாசத்தின் விரிவாக்கமாகவும், இரண்டாம் பாதி பழி வாங்கும் படலமாகவும் கதையை விரிவுபடுத்தி அதில் உச்சகட்ட விறுவிறுப்பை கூட்டி, எதிர்பாராத திருப்பங்களை வித்தியாசமான கோணத்தில் கொடுத்திருப்பதில் சிறப்பான பங்களிப்புடன் வெற்றி வாகை சூடியிருக்கிறார் இயக்குராக தனுஷ்.
மொத்தத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் ராயன் தேர்ந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், அசத்தலான வசனங்கள், சுவாரஸ்யம் கலந்த உணர்ச்சி பாசப்போராட்டங்களை தெறிக்க விடும் பழி வாங்கும் ஆக்ஷனின் த்ரில்லுடன் தில் காட்டும் தனிகாட்டு ராஜா.