ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் விமர்சனம்: மாதவனின் கடின உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி | மதிப்பீடு: 4|5
ட்ரை கலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன், சரிதா மாதவன், மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் இணைந்து தயாரித்து படத்தின் கதை, திரைக்கதை, பாடல் வரிகள், எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். மாதவன்.
இதில் ஆர். மாதவன், சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, சாம் மோகன், குல்ஷன் குரோவர், மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர்.மற்றும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு: சீர்ஷா ராய், பாடல்கள்: கே. ராம் மனோகர், இசை: சாம் சி.எஸ், மக்கள் தொடர்பு – D’one சுரேஷ்சந்திரா, ரேகா
ஒரு டிவி சேனலில் ஹீரோ சூர்யா நம்பி நாராயணனை (மாதவன்) நேர்காணல் செய்ய அவரது வாழ்க்கை எப்படி சென்றது? இஸ்ரோவில் எப்படி சேர்ந்தீர்கள்? அவர் மீதான குற்றச்சாட்டுகளை எப்படி எதிர்கொண்டார் என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கதை நகர்கிறது. நம்பி நாராயணன் 1966 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) சேர்ந்து படிப்படியாக வளர்ந்து, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ராக்கெட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. அங்கு பெரிய சம்பளத்துக்கு நாசா இவரை வேலைக்கு அழைக்க தனது குருநாதர் விக்ரம் சாராபாயின் கோரிக்கையை ஏற்று, அந்த வாய்ப்பை பணிவுடன் நிராகரித்துவிட்டு இந்தியா திரும்புகிறார். இஸ்ரோவில் வேலை பார்க்கிறார் நம்பி நாராயணன். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சியை எட்ட வேண்டிய ஆர்வத்தில் இருக்கும் நேரத்தில் இவரது உழைப்பு அளவிட முடியாததாக பார்க்கப்படுகிறது. திடவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், திரவ எரிபொருள் ((liquid fuel) கொண்டும் ராக்கெட்டை அதிக தூரம் செலுத்த முடியும் என்று விகாஸ் என்ஜினையும் இந்தியாவுக்காக கண்டுபிடிக்கிறார். அடுத்து நம்பி நாராயண் (ஆர்.மாதவன்) தனது திறன்களைப் பயன்படுத்தி முதல் முறையாக இந்தியாவில் தனது குழுவுடன் இணைந்து ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்காக உள்நாட்டு ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்யா உருவாக்கிய கிரையோஜெனிக் இன்ஜின்களை இந்தியா கொண்டுவர விரும்புகிறார். கிரியோஜெனிக் எஞ்சின் பக்கம் மாதவன் திரும்பும் நிலையில், அந்த ஆற்றல் மட்டும் இந்தியாவிற்கு கிடைத்து விட்டால் ஏவுகணை செய்து இந்தியா வல்லரசு நாடாகி விடும் என்கிற அச்சத்தால், அமெரிக்கா அதற்கான உதவிகளை செய்யக் கூடாது என ரஷ்யாவுக்கு உத்தரவு போடுகிறது. ஆனாலும், ரஷ்ய விஞ்ஞானிகளிடம் பல கோடி மதிப்புள்ள அந்த கிரையோஜெனிக் இன்ஜின்களை மிககுறைந்த விலைக்கு பேசி வாங்குகிறார் நம்பி நாராயணன். ஆனால்,ரஷ்யாவில் நடக்கும் உள்நாட்டு பிரிவினை போரால் அதை இந்தியாவுக்கு நேரடியாக எடுத்து வர முடியாத சூழலில் பல பாகங்களாக பிரித்து கொண்டு வருகிறார். அதன் சில பாகங்கள் பாகிஸ்தான் கராச்சி வழியில் இருந்து வரும் நிலையில், இவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதே நேரத்தில், இந்திய ராக்கெட் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக கூறி அதிரடியாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் மீது பொய் வழக்குகள் போட்டு பிறகு கேரள காவல்துறையால் சித்திரவதைகளை அனுபவிக்கிறார். அவர் மீதான பொய் வழக்குகளில் இருந்து அவர் எப்படி மீண்டார்? தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானங்கள், மனஉளைச்சலை எப்படி எதிர்கொண்டார்? மீண்டெழுந்து எப்படி தன்மீது இருந்த தேச துரோக பட்டத்தை துடைத்து தேசப்பற்று மிகுந்த விஞ்ஞானி என்பதை நிரூபித்தார்? என்பதே மீதிக்கதை.
இயக்குநர் மாதவன் இயக்கும் முதல் படத்திற்கே இப்படியொரு ரிஸ்க்கான கதையை எடுத்துக் கொண்டு அதில் நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்க நம்பியாகவே மாறிவிட்டார் மாதவன். அவரது மேக்கப்பில் இருந்து அவர் ஒவ்வொரு காட்சிகளை எடுத்துச் செல்லும் விதம் அவர் உழைத்த அத்தனை உழைப்பையும் திரையில் பார்க்க முடிந்தது. கதாபாத்திரமாகவே வாழ்ந்த நடிப்பு படத்திற்கு பெரிய ப்ளஸ். இளமையான தோற்றத்துடன், நம்பி நாராயணன் இப்போது எப்படி இருக்கிறார் என்பதை திரையில் காட்ட முயன்று அதற்காக கடுமையாக உழைத்துள்ளார் மாதவன். வயிற்றைக் கட்டுவது, பல் வரிசையை மாற்றுவது, இளமை முதல் முதிய கெட்டப் வரை என பல விஷயங்களில் துணிச்சலாக முடிவெடுத்து சாதித்து காட்டியுள்ளார் மாதவன். நம் இந்திய தேசத்தின் விண்வெளி வளர்ச்சிக்காக ‘விகாஸ்” என்ஜினை கண்டுபிடித்த விஞ்ஞானி நம்பி நாராயணனை தேச துரோகியாக மாற்றி சிறையில் அடைத்த கொடுமைகளையும், அப்போது என்ன மாதிரியான மன நெருக்கடியை அவரும் அவரது குடும்பத்தாரும் அனுபவித்தார்கள்.பிறகு 24 வருடங்கள் வழக்காடி அவர் நிரபராதியாக வெளிவந்தது மட்டுமின்றி நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘பத்ம பூஷண்” 2019 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி கௌரவித்த உணர்ச்சிகரமான காட்சிகள். அதை இறுதியில் தற்போதைய பிரதமர் கலந்து கொண்ட பத்ம பூஷன் விழாவின் உண்மையான காட்சிகள், என பல உணர்ச்சிகளை உருவாக்கும் வகையில் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மாதவன் கிளைமேக்ஸில் ரியல் நம்பி நாராயணனை அழகாக கொண்டு வந்து பொருத்தியது ஹைலைட். விகாஸ் இன்ஜின் செயல்பாட்டை சிறப்பாக காட்டியுள்ளார் மாதவன்.
சிபிஐ அதிகாரியாக வரும் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், கலாம் கேரக்டரில் குல்ஷன் குரோவர், நம்பியின் மனைவி மீனாவாக சிம்ரன், முதலில் வெறுத்து துன்பத்தில் உதவும் விஞ்ஞானி நண்பர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
நம்பியை நேர்காணல் செய்யும் ஹீரோ சூர்யா, நம்பி நாராயணனின் கதையைக் கேட்டு அவர் முன் மண்டிப் போட்டு இந்திய தேசத்தின் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என சூர்யா பேசும் இடம் அருமை.
ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, சாம் மோகன், மிஷா கோஷலதுணை வேடங்களில் நடித்த மற்ற நடிகர்கள் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தியதோடு அவர்களின் நடிப்பு படத்திற்கு பலம்.
பிஜித் பாலாவின் படத்தொகுப்பு, சிர்ஷா ரேயின் ஒளிப்பதிவு மற்றும் ஷ்யாம். சிஎஸ் இசையும், பின்னணி இசையும் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி படத்தை வேறு லெவலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதற்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” நம்பி நாராயணனின் வாழ்க்கையைப் பற்றிய உண்மையான தகவல் நிறைந்த தேச பற்று மிகுந்த விஞ்ஞானியின் கடந்த வந்த கடினமான பாதை ஒப்பற்ற தியாகத்தைப்பற்றி அறியும் வாய்ப்பை கொடுத்த மாதவனின் கடின உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.