மெரி கிறிஸ்துமஸ் சினிமா விமர்சனம் : மெரி கிறிஸ்துமஸ் மர்மத்தில் மூடப்பட்டிருக்கும் காதல் மற்றும் த்ரில்லர் ஆகியவற்றின் கலவையுடன் கூடிய சிலிர்ப்பான பண்டிகை பயணம் | ரேட்டிங்: 3.5/5
டிப்ஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜயா தௌராணி, கேவல் கர்க் தயாரித்திருக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீராம் ராகவன்.
இதில் விஜய் சேதுபதி – ஆல்பர்ட், கத்ரீனா கைஃப் – மரியா ,கவின் பாபு – ரோனி ,ராதிகா – லக்ஷ்மி, சண்முகராஜா – தேவராஜ், ராதிகா ஆப்தே – ரோசி, ராஜேஷ் – யாதும் தாத்தா, பரி மகேஷ்வரி ஷர்மா – ஆனி , அஸ்வினி கல்சேகர் – ஸ்கார்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :எழுத்தாளர்கள் – பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா, பாலா நடராஜன், லதா கார்த்திகேயன், ஒளிப்பதிவு – மது நீலகண்டன், இசை – ப்ரீத்தம், பின்னணி இசை – டேனியல் பி ஜார்ஜ், படத்தொகுப்பு – பூஜா லதா சுர்தி, வெளியீடு – ஏபி இன்டர்நேஷனல், மக்கள் தொடர்பு – யுவராஜ்
கிறிஸ்துமஸ் என்றால் மகிழ்ச்சியான தருணம். ஆனால் அதை கொண்டாட முடியாமல் தன் தாய் இறந்த சோகத்தில் இருக்கும் ஆல்பர்ட் (விஜய் சேதுபதி); ஏழு வருடங்கள் கழித்து வெளியூரிலிருந்து தன் சொந்த வீட்டிற்கு வருகிறார். தாயின் நினைவில் வாடும் ஆல்பர்ட் அதை மறப்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் இரவு வெளியே செல்கிறார். ஒரு ஒட்டலில் சாப்பிட செல்லும் ஆல்பர்ட் ஒரு முகம் தெரியாத நபரால் அறிமுகப்படுத்தப்படும் மரியா (கத்ரீனா கைஃப்) என்ற கவர்ச்சியான பெண்ணுக்கும் அவரது வாய் பேச முடியாத மகள் ஆனிக்கு (பரி மகேஷ்வரி) உதவ முன் வருகிறார். இருவரையும் வீட்;டில் விடுவதற்காக அவர்களுடன் பயணிக்கும் ஆல்பர்டை வீட்டிற்கு அழைக்கும் மரியாவுடன் உள்ளே செல்கிறார். வீட்டில் ஆல்பர்ட்க்கு குடிக்க மது கொடுத்து விட்டு மரியா மகள் ஆனியை தூங்க வைத்துவிட்டு வந்தவுடன் இருவரும் வெளியே சென்று விட்டு வீடு திரும்புகிறார்கள். இருவருக்கும் ஒரு பேரதர்ச்சியாய் அங்கு மரியாவின்; கணவர் சோபாவில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக கிடக்கிறார். மரியாவிடம் போலீசுக்கு போன் செய்யலாம் என்று சொல்லும் ஆல்பர்ட் பின்னர் தன் முடிவை மாற்றி, தனது உண்மையான அடையாளத்தையும், தான் செய்த தவறையும் விவரிக்க முதலில் நம்ப மறுக்கும் மரியா பின்னர் சுதாரித்துக் கொண்டு வீட்டை விட்டு ஆல்பர்ட்டை துரத்தி விடுகிறார். கொஞ்ச தூரம் செல்லும் ஆல்பர்ட், மரியா வீட்டிலிருந்து தன் மகளுடன் வெளியேறி தேவாலயத்திற்கு செல்வதை பார்த்து பின் தொடர்கிறார். அங்கு அவள் ஒரு கட்டத்தில் மயக்கம் அடைய அப்போது ஒரு கேட்டரிங் தொழிலதிபர் ரோனி (கவின் பாபு) மற்றும் பின் தொடரும் ஆல்பர்ட் இருவரும் சேர்ந்து மரியாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல முற்படுகிறார்கள். ஆனால் மரியா மயக்கம் தெளிந்து தன்னை வீட்டில் விடும்படி கூறுகிறார். மூன்று பேரும் வீட்டுக்கு வந்த பின் அங்கு மரியாவின் கணவர் சடலம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறார் ஆல்பர்ட். ஆனால் எந்த சம்பவமும் நடக்காதது போல் மரியா கேட்டரிங் தொழிலதிபர் ரோனியை மது அருந்த சொல்லி குழந்தையை தூங்க வைத்து விட்டு ரோனியுடன் வெளியே செல்கிறாள். அவர்களுடன் செல்லும் ஆல்பர்ட்டும் போகும் வழியில்; இறங்கிக்கொள்கிறார். மரியாவின் மீது சந்தேகம் அடையும் ஆல்பர்ட் மரியாவின் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது தான் பெரும் அதிர்ச்சியடையும் ரகசியத்தை காண்கிறார். பின்னர் மரியாவின் மகளுடன் செய்கையில் பேசிக் கொண்டிருக்கும் போது கேட்டரிங் தொழிலதிபர் ரோனியுடன் வீட்டுக்குத் திரும்பிய மரியா வரும் சத்தத்தை கேட்டு ஒளிந்து கொள்கிறார். அப்பொழுது ரோனி எதிரில் சோபாவில் மரியா கணவரின் சடலம் கிடப்பதைக் காண்கிறார். அதனால் ரோனி அங்கிருந்து கிளம்பாமல், மரியாவுக்கு உதவி செய்ய போலீஸ் வரும் வரை காத்திருக்கிறார். வீட்டினுள்ளே குழந்தையை தேடி வரும் மரியா அப்போது ஆல்பர்ட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே வீட்டை விட்டு வெளியேற சொல்கிறாள். வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து விடுகிறார்கள். அதை கண்ட ஆல்பர்ட் மீண்டும் வீட்டுக்குள் சென்று மறைந்து கொள்கிறார். ஆல்பர்ட் கண்டுபிடித்த ரகசியம் என்ன? அவரது கடந்த கால கதை என்ன? மரியாவின் இறந்த கணவர் இரண்டாவது முறை வரும் போது காணாமல் போனதன் காரணம் என்ன? அதன் பின் சடலம் மீண்டும் எப்படி வந்தது? போலீஸ் கொலையாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? உண்மையில் நடந்தது என்ன? மரியா யார்? என்பதை ஓர் இரவுக்குள் நடக்கும் மீதிக்கதையாக திரையில் பார்க்கலாம்.
ஆல்பர்ட் (விஜய் சேதுபதி) ஏழு வருடங்கள் கழித்து தன் வீட்டைச் சுற்றி பார்க்கும் காட்சிகள், பின்னர் வெளியே சென்று மரியாவுடன் பயணிக்கும் தருணங்கள், மரியா வீட்டில் நடனம் ஆடுவது, மரியாவின் உண்மை முகத்தை கண்டுபிடித்து அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உதவி செய்வது, மரியா மகளின் மீது அன்பை பொழிய அதனால் நடக்கும் திருப்பங்கள், இறுதிக் காட்சியில் ரோசியின் மோதிரத்தை எடுத்து மரியா விரலில் அணிவித்து விட்டு அமரும் காட்சியில் வசனமே இல்லாமல் படத்தை புரிய வைத்திருக்கும் பாங்கு என்று ஆர்வமுள்ள ஆல்பர்ட்டாக விஜய் சேதுபதி சிறப்பாக செய்து இருக்கிறார். சில இடங்களில் பேசும் பன்ச் வசனங்கள் சிரிப்புடன் சிந்திக்க வைக்கிறது. தோசை மாவு, பொடி என்று கத்ரீனா கைஃப்பிடம்; கதைக்குள் கதையாக நேர்த்தியாக விவரிப்பது அழகு. விஜய் சேதுபதி வசனமே இல்லாவிட்டாலும் தன் நடிப்பால் உணர்த்தும் அற்புதமான நடிகர்.
கத்ரீனா கைஃப் வாழ்க்கை போராட்டத்தில் சிக்கி சூழ்நிலை கைதியாக தன் மகளுக்காக எடுக்கும் முடிவு எத்தகைய சூழலை ஏற்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்வதும், அதிலிருந்து விடுபட தவிக்கும் தவிப்பும், இறுதியில் தன் மகளின் பேச்சை கேட்டு ஒரு நொடி உணர்ச்சிவசப்படுவதும், பின்னர் விவரீதத்தை உணர்ந்து தடுமாறும் போது தேர்ந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கைஃப் மற்றும் சேதுபதி சிறப்பான நடிப்பை வழங்குகிறார்கள், அவர்களின் கதாபாத்திரங்களுக்கு ஆழத்தையும் நுணுக்கத்தையும் கொண்டு வருகிறார்கள்.
ஏட்டு லட்சுமியாக ராதிகா, காவல்துறை அதிகாரி தேவராஜாக சண்முகராஜா, ஆல்பர்ட்டின் காதலி ரோசியாக ராதிகா ஆப்தே, பக்கத்து வீட்டுக்கார் யாதும் தாத்தாவாக ராஜேஷ், மரியாவின் மகள் ஆனியாக பரி மகேஷ்வரி ஷர்மா, ஸ்கார்லேடாக அஸ்வினி கால்சேகர் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
ப்ரீதமின் இசை மற்றும் டேனியல் பி ஜார்ஜின் பின்னணி இசை படத்தின் மனநிலையை மேம்படுத்தி சஸ்பென்ஸை மேலும் உயர்த்துகிறது, படத்தின் தீவிரமான சூழ்நிலையை விவரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் தனது நேரத்தை எடுத்துக்கொண்டு, சிவப்பு-நீலம்-பச்சை வண்ணத் தட்டு ஒவ்வொரு பிரேமையும் கவர்கிறது. 80களின் பம்பாய் நகரக் காட்சிகளை அற்புதமாக உருவாக்கியுள்ளார். மர்மமான அடுக்கு மாடி குடியிருப்பு, அதன் உள்கட்டமைப்பு, பம்பாய் ரயில் நிலையங்களில் சுழலும் சிறிய டிஸ்க்குகளுடன் எடையுள்ள தராசுகள் அற்புதமாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் வசனங்களும் தனித்து நிற்கின்றன. திரைக்கதையின் பலம், காதல் மற்றும் த்ரில்லர் கூறுகளை தடையின்றி சொல்லி, பதற்றம் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு திரைக்கதையை உருவாக்கியதில் தனித்து தெரிகிறது.
படத்தின் பூஜா லதா சுர்தி எடிட்டிங் நேர்த்தியாகவும் கூர்மையாகவும் இருக்கிறது, ஒட்டுமொத்த இறுக்கமான மற்றும் ஈர்க்கும் கதைக்கு பங்களிக்கிறது.
கிறிஸ்துமஸ் ஈவ் அன்று இரண்டு அந்நியர்கள் சந்திக்கும் ஒரு எளிய கதையாகத் தொடங்குகிறது, ஆனால் விரைவில் மர்மம் மற்றும் சஸ்பென்ஸின் சிக்கலான வலையில் மாட்டிக் கொள்ளும் வகையில் இயக்குனர் ஸ்ரீPராம் ராகவன் மீண்டும் ஒரு தலைசிறந்த படைப்பை வழங்கியுள்ளார். காதல் மர்மம், மரியா (கத்ரீனா கைஃப்) ஆல்பர்ட் (விஜய் சேதுபதி) சந்திப்பு, கதை உணர்ச்சிகள் நிறைந்த இரவு ஒரு அழகான பயணத்தின் தொடக்கம் த்ரில்லராக முடிவடைகிறது. ஈர்க்கக்கூடிய மற்றும் சிந்திக்கத் தூண்டும் கதைக்களத்துடன், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் திரைப்படம் . இந்தத் திரைப்படம் அதன் நட்சத்திர நடிகர்கள் மற்றும் இயக்கத்திற்காக மட்டுமல்லாமல், ஒரு கிளாசிக் காதல் அமைப்பை சிலிர்ப்பான சினிமா அனுபவமாக மாற்றும் திறனுக்காகவும் தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் மற்றும் க்ரைம் நாடகங்களை பார்வையாளர்கள் பெரும்பாலும் திருப்பங்களை எளிதில் கணிக்கலாம் அல்லது மர்மத்தை உடைக்கலாம். ஆனால் இயக்குனர் ஸ்ரீPராம் ராகவன் சஸ்பென்ஸை மறைத்து வைத்திருப்பது மட்டுமல்லாமல், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாத அளவிற்கு கதை இரண்டாம் பாதியில் சிறகடித்து உங்களை இறுதிவரை ஆழ்த்துகிறது. எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கும் போது, மற்றொரு டிராக் தொடங்குகிறது. திருப்பம்; கதைக்கு மற்றொரு பரிணாமத்தை சேர்க்கிறது. மெதுவாக முதல் பாதி நகர்ந்தாலும் எந்த அவசரமும் இல்லாமல் தேர்ந்த நடிகர்களால் இரண்டாம் பாதி விறுவிறுப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது.
மொத்தத்தில் டிப்ஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜயா தௌராணி, கேவல் கர்க் தயாரித்திருக்கும் மெரி கிறிஸ்துமஸ் மர்மத்தில் மூடப்பட்டிருக்கும் காதல் மற்றும் த்ரில்லர் ஆகியவற்றின் கலவையுடன் கூடிய சிலிர்ப்பான பண்டிகை பயணம்.