மூன்றாம் மனிதன் விமர்சனம் : மூன்றாம் மனிதன் இளம் தலைமுறையினர் தவறான பாதையில் பயணிப்பதன் காரணம் பெற்றோர்களின் நடவடிக்கை என்பதைச் சொல்லும் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5
ராம்தேவ் பிக்சர்ஸ் சார்பில் ராம்தேவ் தயாரித்திருக்கும் மூன்றாம் மனிதன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம்தேவ்.
இதில் இயக்குனர் கே பாக்யராஜ், சோனியா அகர்வால், ஸ்ரீPநாத், ராம்தேவ், ரிஷிகாந்த், பிரணா, சூது கவ்வும் சிவகுமார், ராஜகோபால், மற்றும் மதுரை ஞானம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்: எடிட்டிங் : துர்காஸ், தயாரிப்பு மேற்பார்வை : எஸ்.எம்.முருகேசன், ஆர்ட் டைரக்டர்; டி.குணசேகர், ஒளிப்பதிவு: மணிவண்ணன், பாடல்கள்; ராம்தேவ், பாடல்கள் இசை : வேணு சங்கர்- தேவ் ஜி, பின்னணி இசை அம்ரிஷ், இணை தயாரிப்பாளர்கள் : மதுரை சி.ஏ. ஞானோதயா, டாக்டர் எம்.ராஜகோபாலன், டாக்டர் டி. சாந்தி ராஜகோபாலன், மக்கள் தொடர்பாளர் : வேலு.எஸ்.
முதல் காட்சியில் தொலைக்காட்சியில் பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவனையும், அவனது பெற்றோரையும் பேட்டி காண்பதை பார்த்தவுடன் சந்தோஷப்படுகிறார் போலீஸ் அதிகாரி பாக்யராஜ். அதன் பின் அவர்களைப் பற்றிய நினைவலைகளின் கண்ணோட்டத்தில் படம் விரிவடைகிறது. போலீஸ் உயர் அதிகாரி பாக்யராஜ் அவரது காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல இடங்களில் கை, கால்கள் துண்டாக்கப்பட்ட மனித உடல் ஒன்று எடுக்கப்பட அதை தீவிரமாக விசாரிக்க தொடங்குகிறார். அதன் பின் இறந்தது சோனியா அகர்வாலின் கணவரான போலீஸ் அதிகாரி ரிஷிகாந்த் என்பதை கண்டறிந்து சோனியாவை விசாரிக்கும் போது, தன் கணவரை வீட்டில் வேலை செய்த பிரணாவின் கணவர் ராம்தேவ் மிரட்டி விட்டு சென்றதாக கூறுகிறார். குடிகாரரான ராம்தேவ்வை விசாரிக்கும் போது தன் மனைவி பிரணாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இன்ஸ்பெக்டர் ரிஷிகாந்தை மிரட்டி விட்டு சென்றதை தவிர வேறு ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார். அதன் பின் சோனியாவின் நண்பர் ஸ்ரீநாத், பிரணா என்று தொடர் விசாரணை நடைபெறுகிறது. இறுதியில் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக? கணவன் மனைவி உறவுக்குள் விரிசல் ஏற்பட்டால் என்ன நடக்கும்? இதனால் பாதிக்கப்படும் பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி மாறுவார்கள்? அதை தடம் மாறும் பெற்றோர்கள் உணர்வார்களா? என்பதைச் சொல்லியிருக்கும் படம் மூன்றாவது மனிதன்.
இயக்குனர் கே பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாக கனிவும், கண்டிப்பும் நிறைந்தவராகவும், அதே சமயம் எப்படி விசாரணையை மேற்கொள்வது என்பதை தெளிவாகவும் கதையின் போக்கை தன் சாதுர்யமான புத்திகூர்மையுடன் விசாரித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து அதன் பின் மனம் மாறி எடுக்கும் முடிவு ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படுத்துகிறது என்பதை இயல்பாக செய்துள்ளார். முதல் காட்சியும் இறுதி காட்சியும் பாக்யராஜ் நினைப்பது போல் முடித்துள்ளனர்.
இயக்குனர் ராம்தேவ் குடிகார கணவராக படம் முழுவதும் வந்து வெட்டி பேச்சு பேசி மனைவியை இம்சிக்கும் காட்சியிலும், புலம்பும் காட்சியிலும் முடிந்தவரை ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார்.
சோனியா அகர்வால், ஸ்ரீPநாத், ரிஷிகாந்த், ராம்தேவ்வின் மனைவியாக முக்கிய வேடத்தில் திறம்பட நடித்துள்ளார் பிரணா, சூது கவ்வும் சிவகுமார், ராஜகோபால், மற்றும் மதுரை ஞானம் ஆகியோர் படத்தில் முக்கிய காட்சிகளுக்கு துணை போகின்றனர்.
ஒளிப்பதிவு: மணிவண்ணன், இசை : வேணு சங்கர்- தேவ் ஜி, எடிட்டிங் : துர்காஸ், ஆர்ட் டைரக்டர்; டி.குணசேகர், பின்னணி இசை அம்ரிஷ் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு இன்றியமையாததாக உள்ளது.
கொலையை விசாரிக்கும் போலீசிடம் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் சிறார்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்பதும் எதற்காக ஒப்புக் கொள்கிறார்கள் என்பதும் இதற்கு காரணகர்த்தாவாக விளங்குபவர்கள் யார் என்பதை திரைக்கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். வசதி படைத்த கணவன்-மனைவி உறவுக்குள் ஈகோ, சந்தேகத்தை பயன்படுத்தி அதை சாதகமாக்கி கொள்ளும் மூன்றாம் நபரால் குடும்பம் எத்ததைய பாதிப்புகுள்ளாகிறது என்பதை ஒரு கதையாகவும், வறுமையில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழும் ஒரு குடும்பம் ஒரு கட்டத்தில் கணவன் குடிக்கு அடிமையாக பணக்கஷ்டம், அரவணைப்பு இல்லாததால் தடம் மாறும் பெண்ணின் அவலத்தையும் சித்தரித்து இறுதியில் அந்தப் பெண் தன் பிள்ளைக்காக எடுக்கும் முடிவு எத்தகைய விபரீதத்தில் முடிகிறது என்பதையும், பெற்றோர்கள் செய்யும் தப்பால் பிள்ளைகள் தவறான பாதையில் செல்வதை சுட்டிக்காட்டி இறுதிக் காட்சியில் தான் சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாக சொல்லி கதையின் போக்கை மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். இந்தத் திரைப்படம் குறிப்பாக திருமணமான பெண்கள் மற்றும் ஆண்கள் கடுமையான வாழ்க்கைப் பாடங்களையும் பெற்றோருக்கு எச்சரிக்கையான ஆலோசனைகளையும் வழங்கி திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் சிந்திப்பவர்கள் அல்லது ஈடுபடுபவர்களுக்கு இதனால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளைப் பற்றிய தெளிவான எச்சரிக்கையை அளிக்கிறது.ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் தான் சில இடங்களில் காட்சியிலும், வசனத்திலும் தோய்வை ஏற்படுத்தி நெருடலை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ராம்தேவ் பிக்சர்ஸ் சார்பில் ராம்தேவ் தயாரித்திருக்கும் மூன்றாம் மனிதன் இளம் தலைமுறையினர் தவறான பாதையில் பயணிப்பதன் காரணம் பெற்றோர்களின் நடவடிக்கை என்பதைச் சொல்லும் க்ரைம் த்ரில்லர்.