மிரள் விமர்சனம் : தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கும் த்ரில்லிங் உளவியல் | ரேட்டிங்: 3.5/5

0
374

மிரள் விமர்சனம் : தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கும் த்ரில்லிங் உளவியல் | ரேட்டிங்: 3.5/5

அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு தயாரிப்பில் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சக்திவேல்.
இதில் பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜய், ஜீவா சுப்ரமணியன், மாஸ்டர் அன்கித், பாக்யா, மாஸ்டர் சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-  இசை-பிரசாத்.எஸ்.என், ஒளிப்பதிவு-சுரேஷ்பாலா, படத்தொகுப்பு-கலைவாணன்.ஆர், கலை-மணிகண்டன் ஸ்ரீனிவாசன், சண்டை-டேன்ஜர் மணி, ஒலி-சச்சின் சுதாகரன், ஹரிஹரன், உடை-முகமது சுபீர்,ஒப்பனை-வினோத் சுகுமாரன், தயாரிப்பு நிர்வாகம்-எஸ்.சேதுராமலிங்கம், பிஆர்ஒ-சுரேஷ்சந்திரா, ரேகா

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பரத் மற்றும் வாணிபோஜன். இவர்களுக்கு பத்து வயதில் மகன் இருக்கிறான். வாணிபோஜனுக்கு தன் கணவன் கொல்லப்படுவது போன்ற கனவு வர அதிலிருந்து மன உளைச்சலில் தவிக்கிறார். பரத்திற்கும் தான் வேலை செய்யும் இடத்தில் விபத்து ஏற்பட அதிலிருந்து மயிரிழையில் உயிர் தப்புகிறார்.  வாணி போஜனின் தாய் மீரா கிருஷ்ணன் இருவரையும் கிராமத்திற்கு வந்து குலதெய்வ வழிவாடு செய்து விட்டு சென்றால்  சரியாகும் என்று சொல்கிறார். இந்த வழிபாட்டில் நண்பன் ராஜ்குமார் குடும்பத்தையும் கலந்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு மகனுடன் காரில் பரத், வாணிபோஜன் பயணிக்கின்றனர். கிராமத்திற்கு சென்று குலதெய்வ வழிவாடு முடித்தவுடன், பரத்திற்கு அவசரமாக வேலை நிமித்தமாக அழைப்பு வர, மீண்டும் அந்த இரவிலேயே ஊருக்கு திரும்பி செல்ல முடிவெடுத்து கிளம்புகின்றனர். வழியில் பராமரிப்பிற்காக வேறு ஒரு மாற்று பாதையில் பயணிக்கும் போது கார் டயர் பஞ்சர் ஆகிவிட, அதற்காக பரத் கிழே இறங்கி சரி செய்து விட்டு திரும்பும் போது முகமுடி அணிந்த மர்ம நபர் பயமுறுத்த அவனை துரத்தி செல்லும் பரத் பிடிக்க முடியாமல் திரும்புகிறார். காரில் மனைவி, மகன் இருவரையும் காணாமல் திகைக்கிறார். தவிக்கிறார்.அவர்களை தேடி கண்டுபிடித்தாரா? அவர்கள் எங்கே போனார்கள்? யார் கடத்தினார்கள்? பயமுறுத்த காரணம் என்ன? உண்மையில் இந்த சம்பவம் நடந்ததா? யார் பழி வாங்கப்பட்டார்கள்? என்பதே படத்தின் திடுக்கிடும் க்ளைமேக்ஸ்.

பரத் ஹரி என்ற கதாபாத்திரத்தில் தன் காதல் மனைவி மீது அக்கறை கொண்ட நல்ல கணவனாக, மனைவியின் குழப்ப நிலைக்கு காரணம் யார் என்பதையறிந்து துடிப்பதும், அதற்காக செய்யும் மறைமுக வேலைகள், பயமுறுத்தல் காட்சிகளில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். இன்னொறு திருப்புமுனையோடு இறுதியில் கதை பயணிப்பதை ஆரம்பம் முதல் தன் மேல் கவனம் இருக்குமாறு செய்திருப்பது படத்தில்; எதிர்பாராத டிவிஸ்ட்டை தக்க வைப்பதில் ஜெயித்திருக்கிறார்.

ரமாவாக வாணி போஜன் கணவன், மகன் என்று மகிழ்ச்சியான வாழ்க்கையில் இடையில் ஏற்படும் சுறாவளியில் சிக்கிண்டு தவிக்கும் மனநிலையை சோகமாகவும், திகிலாகவும் நம் கண் முன்னே காட்சிப்படுத்தி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

அப்பா ராஜாங்கமாக கே.எஸ்.ரவிக்குமார், அம்மா ரேணுகாவாக மீரா கிருஷ்ணன், வில்லனாக நண்பன் ஆனந்தாக ராஜ்குமார்,  ஆனந்தின் மனைவி ஹேமாவாக காவியா அறிவுமணி, அர்ஜெய், ஜீவா சுப்பரமணியன், மாஸ்டர் அர்ஜித், மாஸ்டர் சாந்தனு, பாக்யா ஆகியோரின் யதார்த்தமான நடிப்பு படத்தின் விறுவிறுப்பை எகிறச் செய்கிறது.

படத்தின் காட்சிகளில் ஒருவித பயத்தை ஏற்படுத்தும் அதிரும் பிரசாத்தின் இசை மற்றும் பின்னணி இசை அதை இன்னும் மெருகேற்றும் சச்சின் சுதாகரன், ஹரிஹரன் ஒலி வடிவமைப்பு படத்தின் திகிலான மயான அமைதியில் நெஞ்சை பதற செய்கிறது வெல்டன்.

காட்சி தொடங்கும் போது ஏற்படும் ஒருவித அச்ச உணர்வை இரவின் பயமுறுத்தல், காற்றாலை சுழலும் விதம்,  அதன் சத்தம், பொட்டல் காடு, ஆரவாரமில்லாத இடம் என்று படம் முழுவதும் பயத்தை விதைத்து ஒருவித அச்சத்தை நீடித்திருப்பதற்கு சுரேஷ்பாலாவின் உழைப்பும் ஒளிப்பதிவும் ஒரு காரணம்.

கலைவாணனின் நேர்த்தியான படத்தொகுப்பு அபாரம். கலை இயக்குனர் மணிகண்டனின் உழைப்பு படத்திற்கு இன்றியமையாததாக உள்ளது.
இனிய வாழ்க்கையில் பாலியல் துன்புறுத்தல் வெளியிலிருந்து எந்த ரூபத்திலும் வரலாம் சிலருக்கு அது யார் என்று தெரிந்திருக்கும்.சிலருக்கு அது தெரியாமல் நிகழ்ந்திருக்கும். அத்தகைய கயவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்கும் படமாக, திகலும், த்ரில்லும் கலந்து ஒரு சுவாரஸ்யமாக சிரத்தையுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சக்திவேல். திரைக்கதையில் யூகிக்க முடியாத திருப்பங்கள் ஏன், எதற்கு நடக்கிறது என்பதை க்ளைமேக்ஸ் காட்சியில் மாறும் போது தான் கதையின் போக்கு நன்கு புரியும் என்பற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. இந்தப் படத்தில் கதாபாத்திரத் தேர்வு, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. தேவையற்ற பாடல்கள், வசனங்கள் இல்லாதது படத்திற்கு ப்ளஸ் அதை பின்னணி இசையால் நிறைத்திருப்பது இன்னும் சிறப்பு.

மொத்தத்தில் அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு தயாரிப்பில் மிரள் அனைவருக்கும் ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்து திகிலும், சஸ்பென்ஸ{ம் நிறைந்து தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கும் த்ரில்லிங் உளவியல்.