மாவீரன் திரைப்பட விமர்சனம் : மாவீரன் வித்தியாசமான புதிய முயற்சியுடன் திரைக்கதை, மக்கள் மனதில் ரசிக்கும் வண்ணம் ஸ்தரமான சரியாத அடித்தளம் போட்டு வெற்றி வகை சூடும் உறுதியான கல்தூண் | ரேட்டிங்: 4/5
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ள மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.
இதில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகிபாபு, சுனில், அருவி மதன், திலீபன், மோனிஷா பிளெஸ்ஸி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மேலே இருந்து ஒலிக்கும் குரலை விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : விது அய்யன்னா, இசை : பரத் சங்கர், படத்தொகுப்பு : பிலோமின் ராஜ், கலை இயக்கம்: குமார் கங்கப்பன் மற்றும் அருண் வெஞ்சரமூடு,சண்டைப்பயிற்சி: யானிக் பென்,ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன், கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம்: சந்துரு ஏ, ஒலிக்கலவை: சுரேன் ஜி, ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன், ஒப்பனைக் கலைஞர்: ஷைட் மாலிக், மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.
கார்டூனிஸ்ட் சத்யா (சிவகார்த்திகேயன்) சரியான வேலை கிடைக்காமல் தவிக்க தினத்தீயில் வேலை செய்யும் சப் எடிட்டர் நிலா (அதிதி ஷங்கர்) மூலம் அந்த நாளிதழில் வேலை கிடைக்கிறது. சத்யா அங்கே வரையும் மாவீரன் என்ற கதை ஓவியத்தில் அநீதியை எதிர்த்து, போராடி நீதியை வழங்கி, மக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதாக மாவீரனை சித்தரித்தாலும் நிஜத்தில் சத்யா மிகவும் கோழையாக, இருக்கின்ற வாழ்க்கையை பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவான இருக்கிறான். இதனிடையே ஆற்றின் கரையோரம் குடிசைப்பகுதியில் சத்யா தாய் சரிதா, தங்கை மோனிஷா பிளெஸ்ஸியுடன் வாழ்கிறார். அங்கிருக்கும் குடிசைவாழ் மக்களை வெளியேற்றி அரசு சார்பில் அமைச்சர் ஜெயகொடி (மிஷ்கின்)கட்டித்தரும் அடுக்குமாடி குடியிறுப்பில் வசிக்க அழைத்துச் செல்கின்றனர். சத்யா குடும்பமும் அங்கே சென்று வசிக்க ஆரம்பிக்க, முதலில் மகிழ்ச்சியாக செல்லும் அவர்கள் அதன் பின் அந்த கட்டிடம் தரமற்றதாக இருப்பதை உணர்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு முறையாக கட்டப்படாததால் விரிசல், கசிவு, கட்டிட மேற்பூச்சு உதிருதல், சிமெண்ட் பூச்சு பெயர்தல் என்று அன்றாடம் எதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்க, தாய் சரிதாவிற்கு கோபம் வருகிறது. சத்யா தாயை சமாதானப்படுத்தி அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று சொல்கிறார். இந்நிலையில் தங்கையை சீண்டும் இன்ஜீனியரை தட்டிக் கேட்க முடியாமல் இருக்கும் மகன் சத்யாவை கோழையாக இருப்பதாகவும், அதற்கு சாகலாம் என்று கூறி சரிதா திட்டுகிறார். இதனால் விரக்தியடையும் சத்யா தற்கொலை செய்து கொள்ள போக, தன் குடும்பத்தை நினைத்து மனம் மாறும் போது, எதிர்பாராத விதமாக நின்றிருக்கும் சுவர் பெயர்ந்து கீழே விழுகிறார். இதில் அதிர்ஷ்டவசமாக தப்பித்தாலும், திடீரென்று அசரீரியாக காதுகளில் சக்தி வாய்ந்த குரல் கேட்க ஆரம்பிக்கிறது. அந்தக் குரல் சத்யாவிற்கு எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களை சொல்லி எச்சரிக்கிறது. அந்தக் கட்டிடத்தை கட்டிய அமைச்சர் ஜெயகொடி எதிரியாக சித்தரித்து அவரை பழி வாங்கி மக்களை காப்பாற்றுமாறு சொல்கிறது. அந்த குரலின் சொல்படி அமைச்சர் ஜெயகொடிக்கு எதிராக களம் இறங்க சம்பவங்கள் நடக்கிறது. இதனால் சத்யா அமைச்சர் ஜெயகொடியின் கோபத்திற்கு உள்ளாகிறார். சத்யா அமைச்சரிடம் தான் அப்பாவி என்பதை புரிய வைக்க முயற்சிக்கிறார். அதன் பின் அமைச்சர் ஜெயகொடி சத்யாவின் பிரச்சனையை புரிந்து கொண்டாரா? ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் சத்யாவிற்கு அந்தக் குரல் உதவி செய்ததா? கோழையாக இருக்கும் சத்யா பின்னர் அந்தக் குரல் உதவி இல்லாமல் மாவீரனாக ஜெயிக்க முடிந்ததா? அமைச்சர் ஜெயகொடியை வழி வாங்கினாரா? தரமற்ற அரசு அடுக்குமாடி கட்டடத்திலிருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
ஏழ்மை நிலை, வேலையில்லா இளைஞன் என்பதற்கேற்ப தன் நடை, உடை, பாவனையில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். கோழையாக சித்தரிக்கப்படும் சத்யா, அந்தக் குரலின் ஒலிக்கு ஏற்ப வீரனாக மாறும் தருணங்களில் அசத்தல் ஆக்ஷன் காட்சிகள், நடக்கும் சம்பவங்கள் யதார்த்தமாகவும், நகைச்சுவையோடும் அதே சமயம் அப்பாவித்தனமாகவும் பல்வேறு முக பாவனைகளில் மெய் சிலிர்க்கும் வண்ணம் இயல்பாக நடித்துள்ளார். புதிய முயற்சி என்பதை விட, அதை காட்சிகளுக்குகேற்ப செயல்படுத்திய விதத்தில் தனித்து நிற்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வண்ணம் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நீங்கா இடம் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.
முக்கிய வில்லன் அமைச்சர் ஜெயகொடியாக மிஷ்கின் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அதிகாரத் திமிரை திறம்பட காட்சிப்படுத்தி, தன்னை மட்டம் தட்டி பிறர் எதிரில் மிரட்டி பேசும் அரசியல் நண்பனையே முக்கியமான காட்சியில் போட்டுத் தள்ளிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு பேசும் வசனக்காட்சிகளில் கை தட்டல் பெறுகிறார். கண்களாலேயே உருட்டி மிரட்டும் பார்வை, கோபத்துடன் அடித்து நொறுக்குவது, பழி வாங்க துடிப்பது என்று அதகளம் பண்ணுகிறார் மிஷ்கின்.
தமிழ் தொழிலாளியாக இருப்பதால் வேலை கிடைக்காமல் தவிக்க வேறு வழியில்லாமல் வடஇந்திய தொழிலாளியாக களமிறங்கி மாஸ் காட்டும் காமெடியில் கட்டிடத்தில் பேட்ச் ஒர்க் செய்யும் கூலித் தொழிலாளியாக வருகிறார் யோகி பாபு. இவர் வரும் காட்சிகளில் படத்தின் முழுகாமெடி பேட்ச் ஒர்;க்கை முழுவதுமாக பட்டி பார்த்து சரி செய்து ஒன் லைன் பன்ச் வசன நகைச்சுவையில் தெறிக்க விட்டு ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார் யோகிபாபு.
சிவகார்த்திகேயனின் பூ விற்கும் தாயாக சரிதா ஏழையாக இருந்தாலும், மானத்தோடு வாழ்ந்து தப்பை எதிர்த்து குரல் கொடுத்து தட்டி கேட்க வேண்டும் என்ற வைராக்கியம் நிறைந்த பெண்மணியாக தைரியம் நிறைந்த நெகிழ்ச்சியான நடிப்பால் மனதில் நிறைகிறார்.
படத்தில் முகமே காட்டாமல் குரல் வழியாக பாதி படத்திற்கு மேல் இவரது அசரீரி குரல் வழியாகவே மாவீரனின் சக்தியாக வலம் வந்து வழி நடத்துகிறார் விஜய் சேதுபதி.
அதிதி ஷங்கர் கதாநாயகியாக தனக்கு கிடைத்த காட்சிகளுக்கேற்ப உழைப்பை கொடுத்து நியாயம் செய்திருக்கிறார்.
அரசியல்வாதியின் நண்பன், ஆலோசகராக வரும் சுனில் திடீர் திடீரென்று அதிகாரத்தை கையிலெடுத்தும், அமைச்சருக்கு எப்படி மரியாதையை காட்சிகளுக்கேற்ப மாற்றுகிறார் என்பதை சிறப்பாக சொல்லி கவனிக்க வைக்கிறார், இன்ஜினியராக அருவி மதன் வில்லத்தனத்தில் மிரள வைக்கிறார். இவர்களுடன் திலீபன், தங்கை மோனிஷா பிளெஸ்ஸி மற்றும் சக குடியிருப்புவாசிகள் என்று ஏகப்பட்ட மக்கள் கூட்டம் படத்தை தாங்கி பிடித்துள்ளனர்.
விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கும், இயக்குனரின் எண்ணத்தை திறம்பட காட்சிப்படுத்தி எளிதாக மக்கள் மனதில் புரியும்படி கொடுத்த விதத்திலும், புதிய முயற்சிக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருந்து காட்சிக் கோணங்களில் அசத்தியுள்ளார்.
பரத் சங்கரின் ஆற்றல்மிக்க இசை மற்றும் பின்னணி இசையால் ‘மாவீரன்’ தொழில்நுட்ப ரீதியாக தனித்து நிற்கிறது.
சத்யாவுக்கும் குரலுக்கும் இடையேயான புத்திசாலித்தனமான யானிக் பென்னின் அதிரடி சண்டைக்காட்சிகள் சிறப்பாக வெளிப்படுத்திய விதம் அருமை.
படம் வித்தியாசமான கோணத்தில் நகர எடிட்டிங் ஃபிலோமின் ராஜ் மிகப்பெரும் பங்காற்றியுள்ளார்.
மண்டேலாவில் ஒரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மடோன் அஷ்வின், இம்முறை குடிசைவாசிகள் அடுக்குமாடி குடியிருப்பு மறுவாழ்வில் அரசாங்கத்தின் குறைபாடுகளை தைரியமாக கற்பனை கலந்த திரைக்கதையோடு அம்பலப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சாமானியனுக்குள்ளும் உறங்கிக் கிடக்கும் மாபெரும் வீரனை ஒவியக்கதை எழுத்தாளனாக எழுப்ப முயன்று பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார். சத்யாவுக்கு நடப்பது ஒன்று, குரல் அவனிடம் சொல்வது ஒன்று, ஆனால் காட்சியின் முடிவு ஒரே மாதிரியாக இருப்பது, இயக்குனர் மடோன் அஷ்வினுக்கு இவ்வளவு சிக்கலான யோசனை கதைக்களமாக எடுக்க பெரிய சிந்தனையும், ஆற்றலும் வந்ததற்கு பாராட்ட வேண்டும். சமூகப் பிரச்சனையை கற்பனைகுரல்வளத்துடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், முதல் பாதி ஆக்ஷன் காமெடி கலந்தும் இரண்டாம் பாதி உணர்ச்சிகள், செண்டிமெண்ட் கலந்து வெற்றி வாகை சூடியுள்ளார் மடோன் அஷ்வின். கோழையாக இருக்கும் நாயகன் ஒரு மாபெரும் வீரனாக உருவெடுத்து எதிரிகளை வீழ்த்தும் கற்பனையுடன் கதைக்களத்தை சுவாரஸ்யத்துடன், அனைத்து மக்களும் ரசிக்கும் வண்ணம் கலந்து கொடுத்து கலர்ஃபூல் கலக்கல் விருந்து படைத்திருக்கிறார் மடோன் அஷ்வின். வெல்டன்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ள மாவீரன் வித்தியாசமான புதிய முயற்சியுடன் திரைக்கதை, மக்கள் மனதில் ரசிக்கும் வண்ணம் ஸ்தரமான சரியாத அடித்தளம் போட்டு வெற்றி வகை சூடும் உறுதியான கல்தூண்.