மால் திரைப்பட விமர்சனம்: மால் சிலை கடத்தல் ஏற்படுத்தும் கோல்மால் | ரேட்டிங்: 2.5/5

0
157

மால் திரைப்பட விமர்சனம்: மால் சிலை கடத்தல் ஏற்படுத்தும் கோல்மால் | ரேட்டிங்: 2.5/5

கோவை பிலிம் மேட்ஸ் சார்பில் சிவராஜ் ஆர் மற்றும் சாய்கார்த்தி தயாரித்திருக்கும் மால் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் குமரன். இப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதில் கஜராஜ், கதிர் வேடத்தில் அஸ்ரப், பிலிப்ஸாக தினேஷ் குமரன், கர்ணனாக சாய்கார்த்தி, யாழினியாக கவுரி நந்தா,கௌதமாக விஜே பப்பு,ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : பத்மயன் சிவானந்தம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு : சிவராஜ் ஆர், மக்கள் தொடர்பு : சுரேஷ்சுகு மற்றும் தர்மதுரை.

தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் விலைமதிப்புள்ள சோழன் சிலை மாபியா மன்னன் கர்ணணிடம்(சாய் கார்த்திக்) இருக்க இந்த பணியை தன் கூட்டாளியிடம் ஒப்படைக்கிறான். அதே சமயம் சோழன் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை அமைக்கப்படுகிறது. இதை அபகரிக்க நினைக்கும் இன்னொரு கடத்தல் கும்பல் சிலையை கர்ணனின் கூட்டாளிகளிடம் இருந்து பறிக்க நடக்கும் கார் சேஸிங்கில், இரண்டு உள்ளுர் சங்கிலிப் பறிப்பாளர்கள் கதிர் மற்றும் பிலிப்ஸ் (அஸ்ரஃப் மற்றும் தினேஷ்) வழியில் கடத்தல் காருடன் விபத்து ஏற்பட்டு கடத்தல்கார்கள் இறக்கிறார்கள். திருடர்கள் அந்த இடத்தை விட்டு சென்று விடுகின்றனர். அந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கஜராஜ் வர சிலை காரில் இருப்பதை பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். விஷயம் அறிந்த கடத்தல் மன்னன் கர்ணன் சிலையை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் கஜராஜை மிரட்டுகிறார். அதே நேரத்தில் சங்கிலிப் பறிப்பாளர்கள் கதிர் மற்றும் பிலிப்ஸ் தங்களிடமிருந்த திருட்டு நகைகளை பறித்த இன்ஸ்பெக்டர் கஜராஜின் வீட்டில் கொள்ளை அடிக்க செல்கிறார்கள். அப்போது வீட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க அங்கிருந்து தப்பிக்கும் போது இன்ஸ்பெக்டர் கஜராஜ் வந்து விட, வீட்டில் பதுக்கி வைத்திருந்த சிலை காணாமல் போவதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். கதிர் மற்றும் பிலிப்ஸ் தான் சிலையை திருடி விட்டார்கள் என இந்த பிரச்சனையில் இவர்களும் இழுக்கப்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இவர்கள் சோழர் சிலை காணாமல் போன பிரச்சனையால் எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்? அதிலிருந்து மீண்டார்களா, இல்லையா? சோழர் சிலை  எங்கே போனது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

கஜராஜ், அஸ்ரப், தினேஷ் குமரன், சாய்கார்த்தி, கவுரி நந்தா, விஜே பப்பு, ஜெய் படத்தில் நடித்த அனைவருமே கடத்தல் சம்பந்தப்பட்ட கதையில் தங்களால் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளனர்.

இசை : பத்மயன் சிவானந்தம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு : சிவராஜ் ஆர் ஆகியோர் கடத்தல், சேசிங், நான்கு பேரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை காட்சிக் கோணங்களில் கச்சிதமாக கொடுத்து அசத்தியுள்ளனர்.

சிலை கடத்தல், மாபியா கும்பல், திருடர்கள், போலீஸ் துரத்தல் என்று எடுத்துக்கொண்ட கதைக்களத்தை சுவாரஸ்யமாக கொடுக்க வேண்டியதை பரபரப்பு இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் குமரன். சிலை கடத்தியது யார் என்ற எதிர்பார்ப்பை பலமான காட்சிகள் அமைத்து அழுத்தத்துடன் கதைக்களத்தை கொடுத்திருந்தால் வித்தியாசமான படைப்பாக வெளிவந்திருக்கும். இருந்தாலும் இயக்குனர் தினேஷ் குமரன் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் கோவை பிலிம் மேட்ஸ் சார்பில் சிவராஜ் ஆர் மற்றும் சாய்கார்த்தி தயாரித்திருக்கும் மால் சிலை கடத்தல் ஏற்படுத்தும் கோல்மால்.