மத கஜ ராஜா (எம்ஜிஆர்) சினிமா விமர்சனம் : மதகஜராஜா குடும்பத்துடன் பொங்கல் நாளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தடம் பதித்து விஸ்வரூப வெற்றி பெறும் காமெடி கலர்ஃபூல் கலாட்டா மரகதராஜா | ரேட்டிங்: 4/5
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்திருக்கும் மதகஜராஜா படத்;தை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.
இதில் விஷால், ஆர்யா, வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின்சத்யா, சோனு சூட், மொட்டை ராஜேந்திரன், மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு, சதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை : விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன், ஆக்ஷன் கொரியோகிராஃபி : சூப்பர் சுப்பராயன், எடிட்டிங் : பிரவீன் கே.எல். மற்றும் என்.பி. ஸ்ரீகாந்த்,மக்கள் தொடர்பு : ஜான்சன்
கேபிள் டிவி ஆபரேட்டரான எம்ஜிஆர் (எ) மத கஜ ராஜா (விஷால்) தனது மூன்று பால்ய நண்பர்களான சந்தானம், சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின்சத்யா ஆகியோர் தங்கள் பள்ளி ஆசிரியரின் வீட்டுத் திருமணத்தின் மூலம் மீண்டும் சந்திக்கின்றனர். அவர்களுடன் சடகோபன் ரமேஷின் உறவினர் வரலட்சுமி சரத்குமார் கலந்து கொள்கிறார். வரலட்சுமியுடன் விஷால், சந்தானம், மற்றும் நிதின்சத்யா ஆகியோர் கலகலப்பாக திருமணத்தில் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இந்நிலையில் சிறுவயதில் ஒட்டப்பந்தயத்தில் தோற்கடித்த நண்பர்களை விஷால் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் விஷாலுடன் மீண்டும் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்று விஷாலிடம் வற்புறுத்துகின்றனர். இந்த சந்திப்பால் பழைய நண்பர்களின் மோதல் முடிவுக்கு வருகிறது, அதன் பின் சந்தானம் மற்றும் அவரது மனைவியுடனான மனஸ்தாபங்களையும் தீர்த்து வைத்து ஒன்று சேர்கிறார். அப்பொழுது சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா தங்களது பிரச்சனையையும் தீர்க்குமாறு சொல்கின்றனர். கார்ப்பரேட் முதலாளியும் ஊடக அதிபருமான கார்குவேல் விஸ்வநாத் (சோனு சூட்) என்பவரிடமிருந்து நண்பர்கள் பணப்பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருப்பதையறிந்து ராஜா தனது நண்பர்களின் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்கிறார். இதில் ராஜா ஊடக அதிபரும் அரசியல் பலம் படைத்த தொழிலதிபர் கார்குவேல் விஸ்வநாத்தை தேடி சென்னைக்கு வருகிறார். தொழிலதிபர் கார்குவெல் விஸ்வநாத்திடம் தன் நண்பர்கள் சந்தித்த நஷ்டம் 54 லட்சத்தை திருப்பி தருமாறு ஒரு வார கெடு வைத்து விட்டுச் செல்கிறார். அதன் பின் இருவருக்குமிடையே மோதல் வெடிக்கிறது. அதன் பின் விஷாலால் கார்குவெல் விஷ்வநாத்திடம் பணத்தை பெற முடிந்ததா? தன் நண்பர்களின் சிக்கலை தீர்த்தாரா? என்பதே ஆக்ஷன் கலந்த காமெடி களத்துடன் படம் முடிகிறது.
விஷால் இளமை துள்ளலுடன் ஆட்டம் போட்டு காதல், நடனம், ஆக்ரோஷம், ஆக்ஷன், காமெடி என்று அனைத்திலும் தன்னால் நிலை நிறுத்த முடியும் என்பதை இந்த படத்தில் சாதித்து காட்டியுள்ளார். ஒரு எனர்ஜிடிக் பர்பார்மன்ஸில் உழைப்பும் திறமையுடன் அசத்தியுள்ளார். இறுதிக் காட்சியில் சோனு சூட்டுடன் சிக்ஸ் பேக் ஆக்ஷன் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
சிறப்பு தோற்றத்தில் ஆர்யா, கிளுகிளுப்பு கவர்ச்சி தூக்கலுடன் வரலட்சுமி சரத்குமார், ஊடலும், உரசலுமாக காதலி அஞ்சலி, நீண்ட இளைவேளிக்கு பின் ரசிக்க வைக்கும் ஒன் லைன் பஞ்ச், கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் பழைய மோடில் சந்தானம், நண்பராக சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின்சத்யா, அதட்டல், மிரட்டல், விரட்டல், ஆக்ஷன் கிங்காக சோனு சூட், சிரிப்புக்கு தன் பங்களிப்பை தரும் மொட்டை ராஜேந்திரன், சில காட்சிகள் என்றாலும் ஆட்டோ டிரைவராக மனதில் நிற்கும் மணிவண்ணன், அரசியல்வாதி பின் சடலமாக வந்து இரண்டாம் பாதியில் முக்கிய பங்களிப்பில் கலகலக்க வைக்கும் மனோபாலா, வில்லனின் செகரட்டிரியாக வரும் சிட்டிபாபு, க்ளைமேக்ஸ் முடிவில் கவர்ச்சி பாடலில் அசத்தும் சதா என்று அனைவரின் பங்களிப்பு சிறு துளி என்றாலும் படத்தை முழுவதுமாக கரை சேர்;க்க உதவி செய்துள்ளது.
விஜய் ஆண்டனி இசையில் அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் உள்ளதால் படத்தில் பாடல்களுக்கு பயங்கர கைதட்டல் விசிலுடன் ஆட்டம் போட வைத்துள்ளார். பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு இணையாக அசத்தியுள்ளது.
ரிச்சர்ட் எம் நாதன் படத்தில் பாடல்கள், ஆக்ஷன், காமெடி என்று கலர்ஃபூல் காம்பினேஷன்களுடன் காட்சிக் கோணங்களை வைத்து ரசிக்க வைத்துள்ளார்.
சூப்பர் சுப்பராயனின் ஆக்ஷன் காட்சிகள் அதிர வைத்து மிரட்டலுடன் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வித்தியாசமாக தடம் பதித்துள்ளார்.
எடிட்டிங் : பிரவீன் கே.எல். மற்றும் என்.பி. ஸ்ரீகாந்த் எந்த இடத்திலும் தோய்வு ஏற்படாதபடி விறுவிறுப்பை தக்க வைத்துள்ளனர்.
பன்னிரெண்டு வருடங்களுக்கு பின் ரிலீசாகும் படம் மத கஜ ராஜா இயக்குனர் சுந்தர்.சியின் அக்மார்க் டிரெண்டுடன் படம் இந்த ஆண்டு பொங்கல் ரேசில் களமிறங்கியிருப்பது திடீர் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி என்றாலும் படத்தை பார்த்த பிறகு இது சரியான நேரத்தில் தான் வந்துள்ளது என்பதற்கு படத்தின் வரவேற்பு சாட்சி. இப்;பொழுது வரும் படங்களில் அடிதடி, கொலை, ரத்தம் தெறிக்க பார்த்த நம் கண்களுக்கு இந்தப்படம் இதம் தரும் குளிர்ச்சியாக காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல் என்று அத்தனை அம்சங்களுடன் நச்சென மனதில் பதிந்து மாஸ் என்டர்டெயினராக கமெர்ஷியல் மசாலாக்கள் கலந்து வெற்றிக்கனி பறித்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.
மொத்தத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்திருக்கும் மதகஜராஜா குடும்பத்துடன் பொங்கல் நாளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தடம் பதித்து விஸ்வரூப வெற்றி பெறும் காமெடி கலர்ஃபூல் கலாட்டா மரகதராஜா.