போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் : போத்தனூர் தபால் நிலையத்திற்கே அதிர்ச்சி தந்தி கொடுக்கும் தந்திரக்காரன் | ரேட்டிங் – 3.5/5

0
224

போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் :

போத்தனூர் தபால் நிலையத்திற்கே அதிர்ச்சி தந்தி கொடுக்கும் தந்திரக்காரன் | ரேட்டிங் – 3.5/5

பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் தயாரித்து ஆஹா தமிழில் ஓடிடி உலகளாவில் வெளியீடாக போத்தனூர் தபால் நிலையம் திரைப்படத்தை இயக்கியுள்ள பிரவீன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பிரவீன் மற்றும் அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-தென்மா, ஒலி வடிவமைப்பு-அருண்காந்த், ஒளிப்பதிவு-சுகுமாரன் சுந்தர், கலை இயக்குனர்- பிரவீன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.

சிறு வயதிலிருந்தே பிரவீன், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர் இணை பிரியா நண்பர்கள். இவர்களின் குறிக்கோள் சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்கின்றனர். பிரவீன் நன்றாக படித்து பட்டதாரியான பின்னர் கம்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்க வங்கியில் கடன் வாங்க முடிவு செய்கிறார். பிரவீனின் தந்தை ஜெகன் கிரிஷ் போத்தனூர் தபால் நிலையத்தில் பணி புரியும் நேர்மையான போஸ்ட் மாஸ்டர். இவர் கீழ் பதிமூன்று பேர் வேலை செய்ய, தபால் நிலையத்தை கட்டுப்பாடுடன் நடத்தி வருகிறார். இந்த தபால் நிலையத்தில் டெபாசிட் செய்யும் பணம் பாதுகாப்பு கருதி உடனுக்குடன் வங்கியில் கட்டிவிடும் பழக்கத்தை ஜெகன் கடைப்பிடித்து வருகிறார். நேரமின்மை கருதி பணம் வங்கியில் கட்ட முடியாவிட்டால் வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைத்திருந்து மறுநாள் வங்கியில் கட்டி விடுவார். இது தபால் நிலையத்தில் கடைபிடிக்கும் நடைமுறை இல்லை என்பதால் அலுவலர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வார். இதனிடையே சிறு பிரச்சினையால் பிரவீனுக்கு வங்கியில் கடன் கிடைக்காமல் போகிறது. அதே சமயம் ஜெகன் தபால் நிலையத்தில் சனிக்கிழமை அன்று காசாளர் கட்ட மறந்த 7 லட்ச ரூபாய் பணத்தை பாதுகாப்பிற்காக வீட்டிற்கு எடுத்து வரும் வழியில் பண மூட்டை காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சியடையும் ஜெகன், வீட்டிற்கு வந்து பிரவீனிடம் நடந்ததை சொல்கிறார். திங்கட்கிழமைக்குள் பணத்தை தேடி கண்டு பிடித்து தந்தையை காப்பாற்ற பிரவீன் முடிவு செய்து நண்பர்களுடன் தேடுதல் வேட்டையில் இறங்குகிறார். முதலில் காசாளர், ஈ.டி, மற்றும் தந்தையுடன் சண்டை போட்ட ஊழியர் என்று விசாரணை விரிவடைந்து கொண்டே போகிறது. இறுதியில் பிரவீன் கொள்ளையனை கண்டு பிடித்தாரா? கைப்பற்றிய பணத்தை தந்தையிடம் ஒப்படைத்து அவரை காப்பாற்றினாரா? இல்லை பிரவீன் போடும் திட்டம் தான் என்ன? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

அறிமுக நடிகராக பிரவீன், புத்திசாலியாக வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற லட்சிய இளைஞராக, கடன் கிடைக்காத விரக்தி, தந்தை தவறவிட்ட பணத்தை தேடும் அவசரம், தடங்கல்களை தாண்டி பணத்தை கைப்பற்றி எடுக்கும் முடிவு என்று திருப்பங்களுடன் படத்தை நகர்த்தி 90களின் காலகட்டத்தின் நடை, உடை, பாவனை என்று அசத்தியுள்ளார்.

காதலியாக அஞ்சலி ராவ் துணையாக இருந்து சிக்கல்களை சமாளிக்கும் பெண்ணாக வருகிறார், நண்பராக வெங்கட் சுந்தர், தந்தையாக ஜெகன் கிரிஷ் நேர்மையான போஸ்ட் மாஸ்டருக்கான அடையாளமாக ஸ்கூட்டரில் பயணிப்பது, மனைவியிடம் சண்டையிடுவது, பிள்ளைகளின் படிப்பு, பணத்தை பறிகொடுத்து தவிப்பது, பணத்தை புரட்ட அல்லாடுவது என்று 90களில் நடுத்தர மக்களின் வாழ்க்கையை அச்சு அசலாக பதிவு செய்து முத்திரை பதித்துள்ளார். இவர்களுடன் சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இசை-தென்மா, ஒலி வடிவமைப்பு-அருண்காந்த், ஒளிப்பதிவு-சுகுமாரன் சுந்தர் ஆகியோர் 1978, 1985, 1990 காலகட்டங்களை கண் முன் நிறுத்தி காட்சிக் கோணங்களில் கொடுத்துள்ள முக்கியத்துவம் படத்திற்கு பலம் சேர்த்து வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர்.

இரட்டைக்கொலையில் தொடங்கும் கதைக்களம், பின்னர் வெவ்வேறு காலகட்டங்களை கடந்து போத்தனூர் தபால் நிலையத்தில் காணாமல் போகும் பணத்தை மும்முரமாக தேடும் வேட்டையில், கள்ள நோட்டு, லாட்டரி சீட்டு என்று பல கோணங்களில் பயணித்து இறுதியில் பல திருப்பங்களுடன் ஆச்சர்யமூட்டும் திரைக்கதையை -கலை இயக்குனர், நடிகர், இயக்குனர் என்று பலமுகங்களை கொண்ட பிரவீன் அசத்தலாக கொடுத்துள்ளார். முதலில் மெதுவாக நகரும் திரைக்கதை, இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாக சென்று இறுதியில் எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து, அடுத்த பாகத்திற்கான ஆவலை பார்க்க தூண்டியிருப்பதிலேயே முழு வெற்றி பெற்றுவிடுகிறார் பிரவீன். 70களின் காலகட்டம் தொடங்கி  90களின் கால கட்டம் வரையில் படத்தில் வீடு, வாகனங்கள், பொருட்கள், தபால் நிலையம், வங்கி, சிதிலடைந்த வீடுகள், துப்பாக்கி, பண நோட்டுக்கள் என்று பார்த்து பார்த்து குறையில்லா வண்ணம் கொடுத்துள்ளதற்காக இயக்குனரின் அபரிதமான உழைப்பிற்கு பாராட்டுக்கள். வெல்டன்.

மொத்தத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் தயாரித்திருக்கும் போத்தனூர் தபால் நிலையத்திற்கே அதிர்ச்சி தந்தி கொடுக்கும் தந்திரக்காரன்.