பீஸ்ட் விமர்சனம்: பீஸ்ட் வேஸ்ட் பீஸ் இருந்தாலும் விஜயின் நடனத்திற்கு பார்க்கலாம் | ரேட்டிங் – 2.5/5

0
193

பீஸ்ட் விமர்சனம்: பீஸ்ட் வேஸ்ட் பீஸ் இருந்தாலும் விஜயின் நடனத்திற்கு பார்க்கலாம் | ரேட்டிங் – 2.5/5

நடிப்பு: விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் மற்றும் பலர்
தயாரிப்பு நிறுவனம்: சன் பிக்சர்ஸ்
தயாரிப்பு: கலாநிதி மாறன்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா
எடிட்டர்: ஆர். நிர்மல்
இயக்குனர்: நெல்சன் திலீப் குமார்
இசையமைப்பாளர்: அனிருத்

இந்திய உளவு நிறுவனத்தில் ரா ஏஜென்ட் வீரராகவன் (விஜய்). அவரது துணிச்சலான நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு அவருக்கு பிடிக்காது என்பதால் உளவுதுறை அவரை ஒரு ஹீரோவாகவே பார்க்கிறது. பயங்கரவாதத் தலைவன் உமர் பரூக்கைப் பிடிக்க ஒரு முக்கிய ஆபரேஷன்;; போது, உயர் அதிகாரிகள் கொடுத்த தவறான தகவலால் எதிர்பாராத விதமாக விஜய்க்கு நெருக்கமான குழந்தை இறக்கிறது. குழந்தை இறந்ததற்கு தான் தான் காரணம் என்று மனம் நொந்து வேலையை விட்டு விலகி சென்னை வருகிறார் வீர ராகவன். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான விஜய்யை மருத்துவர் தனக்கு தெரிந்த ஒரு திருமணத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ப்ரீத்தி (பூஜா ஹெக்டே) அறிமுகமாகிறார். திருமணம் செய்து கொள்ள விரும்பாத வீரராகவனை காதலிக்கிறார். இதற்கிடையில், ஒரு மால் பயங்கரவாதிகளால் கடத்தப்படுகிறது. பயங்கரவாதிகள் ஷாப்பிங் மாலில் புகுந்து மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து தலைவர் உமர் ஃபாரூக்கை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். அவர்களின் கோரிக்கைகள் என்ன, தீவிரவாதிகளிடம் இருந்து நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை வீரராகவன் எப்படி காப்பாற்றினார் என்பது மீதிக்கதை.

ரா ஏஜென்டாக வீர ராகவனாக கதாபாத்திரத்தில் விஜய் ஸ்லிம்மாவும், ஸ்டைலாகவும் இருக்கிறார். தனது அசால்ட்டான நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார் விஜய். தொடக்கக் காட்சியில் இருந்தே அதிரடி காட்சிகளில் குறைபாடற்ற நடிப்பை வெளிப்படுத்துகிறார். அரேபிய குத்து பாடலில் விஜய்யின் நடன அசைவுகள் மிகவும் அழகாகவும் சிரமமின்றியும் இருக்கும். பாடலில் விஜய்யின் ஸ்டைலும், நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாகவே உள்ளது.இருந்தாலும் கதை தேர்வில் தெளிவு இல்லாததால், கடந்த ஆண்டு வெளியான “மாஸ்டர்” போல் விஜயயின் “பீஸ்ட்” இல்லை.

பூஜா ஹெக்டே பொருத்தமற்ற மூன்று காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே தோன்றுகிறார். இருந்தாலும் கிளாமரில் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

வி.டி.வி கணேஷ் தனது நகைச்சுவையால் நன்றாகவே ஹைலைட் ஆகிறார். பேஸ் குரலில் அவரது பஞ்ச் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்.

யோகிபாபுவின் நகைச்சுவை இம்முறை ஈர்க்கவில்லை.இயக்குனர் செல்வ ராகவன் நடிகராக விருந்தளிக்கிறார். மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக உள்துறை அமைச்சர் கதாபாத்திரம் எரிச்சலூட்டுகிறது.படத்திற்கு அனிருத்தின் இசை மிகப்பெரிய பலம். பின்னணி இசையில் பார்வையாளர்களை எங்கும் ஏமாற்றவில்லை. இதனால் ஆக்ஷன் காட்சிகளில் விஜய் நடிக்கும் போது பிஜிஎம் கலவரமாகிறது. மேலும் அரேபிய குத்து பாடல் இறுதிக்கட்டமாக பார்வையாளர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.அன்பறிவின் ஆக்ஷன் காட்சிகள் ஓகே. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் பிரேம்கள் படத்திற்கு ரிச் லுக்கை கொடுக்கிறது.
எடிட்டர் நிர்மல் தனது கடந்த கால அனுபவத்தை பயன்படுத்தி கத்தரிக்கோல் போட்டு காட்சிகளை சரியாக எடிட் செய்துள்ளார்.கோலமாவு கோகிலா , டாக்டர், உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கியுள்ள நெல்சன் ஏமற்றத்தை அளித்துள்ளார். விஜய்யின் ஹீரோயிசத்தை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான யோகி பாபு நடித்த கூர்க்கா கதை கருவை எடுத்து, பல படங்களில் பார்த்த தீவீரவாதத்தை புகுத்தி வலுவில்லா திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் நெல்சன். விஜய் ரசிகர்களை குறிவைத்து வழக்கமான கதையைத் தேர்ந்தெடுத்து இயக்குனராகவும் நெல்சன் படுதோல்வி அடைந்தார் என்றே சொல்லலாம்.இயக்குநர் நெல்சனின் டிரேட் மார்க் நகைச்சுவைக் காட்சிகளைத் தவிர வேறு எங்கும் படத்தில் வராததுதான் பீஸ்ட்படத்திற்கு பெரிய மைனஸ். தேவையில்லாத ஆக்ஷன் காட்சிகள், தேவையில்லாத கிளைமாக்ஸ் எபிசோட் ஏன் போடப்பட்டது என்பதும் புரியவில்லை. இந்த இரண்டுமே இல்லாவிட்டால் நகைச்சுவைக்காகவாவது படத்தைப் பார்த்திருப்பார்கள். இன்று பான் இந்தியா லெவலில் சினிமா போய் கொண்டிருக்கிறது. இனி லாஜிக்கும் அர்த்தமற்ற திரைக்கதையும், நியாயமற்ற காட்சிகள், விறுவிறுப்பில்லாத தோய்வான கதையை மக்கள் ஏற்க மாட்டார்கள் நெல்சன்.

மொத்தத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பீஸ்ட் வேஸ்ட் பீஸ் இருந்தாலும் விஜயின் நடனத்திற்கு பார்க்கலாம். | ரேட்டிங் – 2.5/5