பிச்சைக்காரன் 2 திரைவிமர்சனம் : பிச்சைக்காரன் 2 வலிமையையும், வலியையும் ஒருசேர அனுபவிக்கும் பணக்கார தோரணையில் இருக்கும் கருணை மனம் கொண்ட பாசக்காரன் | ரேட்டிங்: 4/5
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பேனரில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் , பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்கம், இசை, கதை எழுதி நாயகனாக விஜய் ஆண்டனியே செய்துள்ளார்.
இதில் அவருடன் காவ்யா தாப்பர், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, யோகி பாபு, ராஜா கிருஷ்ணமூர்த்தி, கதிர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – ஓம் நாராயணன், துணை எடிட்டிங்-திவாகர் டெனிஸ், கலை-ஆறுசாமி, எழுத்து-விஜய் ஆண்டனி, கே.பழனி, பால்ஆண்டனி, பாடல்கள்-அருண்பாரதி, திரைக்கதை-கே.பழனி, மக்கள் தொடர்பு- டிஒன் சுரேஷ்சந்திரா, ரேகா.
பணக்கார பட்டியிலில் இந்தியாவில் குறிப்பிடும்படி 7வது இடத்திலும் ஒரு லட்சம் கோடிக்கு அதிபதியாக இருக்கும் குருமூர்த்தி மற்றும் அவரது மகன் (விஜய் ஆண்டனி) விஜய் குரூமூர்த்தி. இவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்து கொண்டே பகையோடு இருப்பவர்கள் தேவ் கில், ஜான் விஜய் மற்றும் ஹரீஷ் பெராடி. குருமூர்த்தி திடீரென்று இறந்து போக அவரது மகனிடமிருந்து சொத்துக்களை அபகரிக்க மூன்று பேரும் திட்டம் போடுகின்றனர்.விஜய் குருமூர்;த்தியை தங்கள் இஷ்டம் போல் ஆட்டி வைக்க ஆசைப்பட்டு மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்ய பல கோடிகளை வாரி இரைத்து பிரபல டாக்டரின் ஆலோசனைப்படி ஏபி பாசிடிவ் வகை இரத்தப் பிரிவைச் சேர்ந்த பிச்சைக்காரர் சத்யாவை கொண்டு வருகின்றனர். பிச்சைக்காரர் சத்யா சிறு வயதில் தொலைந்து போன தங்கையை தேடி ஊர் ஊராக சுற்றி கொலை வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் கழித்து விடுதலையானவன். அவனின் பின்பலம் தெரியாமல் விஜய் குருமூர்த்திக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக சத்யாவின் மூளையை பொருத்தி விடுகின்றனர். அதன் பின் தேவ் கில், ஜான் விஜய் மற்றும் ஹரீஷ் பெராடி ஆகிய மூவரும் சேர்ந்து சத்யாவை விஜய் குருமூர்;த்தி போன்று இருக்க பயற்சி கொடுக்கின்றனர். இதனை துளியும் விரும்பாத சத்யா, பணக்காரராக வாழ பிடிக்காமல், தன் தங்கையை கண்டுபிடிக்க மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்.ஒரு கட்டத்தில் தன்னை துன்புறுத்தும் மூன்று பணக்கார சதிகாரர்களையும் தீர்த்து கட்டுகிறார். அதன் பின் பிச்சைக்காரர்கள், ஏழைகளுக்கு உதவும் ஆண்டி பிகிலி என்ற சேவையை குறிக்கோளாக கொண்ட இயக்கத்தை தொடங்க முற்படுகிறார். இந்த நேரத்தில் சத்யாவைப் பற்றிய உண்மைகள், மூன்று பேர் கொலைகள், பல கோடி சொத்துக்கள் பற்றிய விவரங்கள் முதலமைச்சருக்கு தெரிய வருகிறது. அரசியல்வாதியிடம் சிக்கிவிடும் சத்யா என்ன ஆனார்? ஆண்டி பிகிலி திட்டம் என்னவானது? கைது செய்யப்படும் வழக்கில்; சத்யாவிற்கு என்ன தண்டனை கிடைத்தது? இறுதியில் சத்யா தங்கையை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
பிச்சைக்காரர் சத்யா மற்றும் பணக்காரர் விஜய் குருமூர்த்தி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரரின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் படத்தின் கதையை எழுதியிருக்கிறார். பணக்காரராக மிடுக்கு, திமிர், அதிகார மிரட்டலுடன் மிகையாகவும், பிச்சைக்காரராக அமைதி, பொறுமை, வெறித்த பார்வை, மூர்க்கத்தனம் என்று அடக்கமாகவும் சிறப்பாக செய்துள்ளார். ஏழைகளுக்காக வகுக்கும் திட்டம், பணக்காரர்களுக்கு வழங்கும் வசையடி, நீதிமன்றத்தில் வாதிடும் விதம், தங்கையையும், தங்கையின் குழந்தையையும் பார்த்தவுடன் நெகிழ்ந்து உருகும் விதம், காதல் பாடல்களில் நெருக்கம் என்று நடிப்பில் பல பரிமாணங்களை நேர்த்தியாக உணர்ச்சிகள் பெருக கொடுத்துள்ளார்.
கவர்ச்சி கன்னியாக காவ்யா தாப்பர் ஆரம்பத்திலும், நடுவே கொஞ்சம் வந்து இறுதியில் தலையை காட்டி அழகு தேவதையாக வந்து விட்டு போகிறார்.
சிறு வயது சத்யா, ராணியாக வரும் குழந்தைகளின் தத்ரூபமான நடிப்பு அற்புதம்.
மற்றும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, யோகி பாபு, ராஜா கிருஷ்ணமூர்த்தி, கதிர் ஆகியோர் படத்தை விறுவிறுப்பாக்க முயன்றுள்ளனர்.
விஜய் ஆண்டனி இசை, பின்னணி ஸ்கோர் நல்லவிதமான செய்திருந்தாலும் எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஓம் நாராயணின் பிரமாதமான ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தை கூட்டியுள்ளது.பணக்கார மாளிகை, ஆய்வுக்கூடம், பாலைவன பாம்பு அதே சமயம் ப்ளாஷ்பேக் காட்சிகளில் வறுமையின் நிறத்தை தத்ரூபமாக கொடுத்துள்ளார்.விஎஃப் எக்ஸ் தொழில்நுட்பத்தை இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம்.
விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு பிச்சைக்காரன் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைப்படைத்தது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய் ஆண்டனியே (இரட்டை வேடம்) நடித்து இப்படத்திற்கு கதை எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்து, இசையமைத்திருக்கிறார். 1918 முதல் இன்று வரை மூளை மாற்று அறுவை சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்க, அதை வைத்து புனைக்கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய் ஆண்டனி. இதில் பணக்காரர் பிச்சைக்காரர் மனநிலையில் யோசித்து இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை நீண்டநெடிய பிரசாரத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் ஆண்டனி. பணக்காரர்கள் பரம்பரையாக பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு தன் வாரிசகளுக்கு கொடுக்காமல், அதை நல்வழியில் பல ஏழை மக்களுக்கு உதவினால் நாடு வளமாகும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். முதல் படத்தில் அம்மா சென்டிமெண்ட் என்றால் இரண்டாம் பாகத்தில் தங்கை சென்டிமெண்ட். இயக்குனர் விஜய் ஆண்டனியின் கடின உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டுதல்களை தெரிவிக்கத்தான் வேண்டும்.
மொத்தத்தில் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள பிச்சைக்காரன் 2 வலிமையையும், வலியையும் ஒருசேர அனுபவிக்கும் பணக்கார தோரணையில் இருக்கும் கருணை மனம் கொண்ட பாசக்காரன்.