பார்க் சினிமா விமர்சனம் : பார்க் இரட்டை மிரட்டலை பார்த்து ரசிக்கலாம் | ரேட்டிங்: 2.5/5
அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் ஈ.நடராஜ் பார்க் படத்தைத் தயாரிக்க ஈ.கே.முருகன் இயக்கியுள்ளார்
இப்படத்தில் கதாநாயகனாக தமன் குமார், கதாநாயகியாக ஸ்வேதா டோரதி, வில்லனாக யோகிராம், லயன் ஈ.நடராஜ் , பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ரஞ்சனா நாச்சியார், நீமாரே, சுரேந்தர், விஜித் சரவணன், ஜெயந்திமாலா, கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு பாண்டியன் குப்பன், இசை ஹமரா சி.வி, படத்தொகுப்பு குரு சூர்யா, நடனம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் சுரேஷ் சித், கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ், பாடல்கள் நா. ராசா, ஸ்டண்ட் எஸ் .ஆர் .ஹரி முருகன், தயாரிப்பு நிர்வாகி கே. எஸ் சங்கர், உடைகள் ஜி. வீரபாபு, ஒப்பனை ஷேக் பாட்ஷா, நிர்வாகத் தயாரிப்பாளர் எம். அருள், இணைத் தயாரிப்பாளர் நா.ராசா, பிஆர்ஒ-சக்தி சரவணன்.
திருவண்ணாமலையில் பட்டதாரியான தமன்குமார் வேலைக்கு செல்லாமல் ஊர்; சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் அம்மாவிற்கு அதிர்ஷ்ட பரிசு ஸ்கூட்டர் கிடைக்க அதை வாங்க செல்லும் தமன்குமார் ஸ்வேதா டோரதியை பார்க்கிறார். ஸ்வேதா டோரதிக்கு பைக் பரிசாக கிடைக்க, இருவரும் பேசி வண்டியை மாற்றி எடுத்துச் செல்கின்றனர். அதன் பின் உறவினர் சிபாரிசில் டிடிஎச் கனேக்ஷன் கொடுக்கும் கம்பெனியில் வேலையில் சேர்கிறார். அங்கே ஸ்வேதா டோரதியும் வேலை செய்ய, இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர்.இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயம் நடக்க, ஜாலியாக ஊர் சுற்றுகின்றனர்.அதே சமயம் ஜாலி பார்க் என்ற இடத்தில் அமானுஷ்ய சக்தி இருப்பதால் யாரும் இரவில் செல்ல தயங்குகின்றனர். இதனிடையே இருவரும் வெளியே செல்லும் போது ஸ்வேதாவின் அழகில் மயங்கி முன்னாள் அமைச்சரின் மகன் பின் தொடர்ந்து அவரை அடைய துரத்த, இருவரும் பூட்டியிருக்கும் அமானுஷ்யம் நிறைந்த ஜாலி பார்க்கில் கேட்டில் ஏறி உள்ளே குதிக்கின்றனர். இருவரையும் ஆண், பெண் என்ற இரண்டு பேய்கள் பிடித்துக் கொண்டு, முன்னாள் அமைச்சரின் நண்பர்களை துரத்தி கொல்கிறது. அதன் பின் பேய் பிடித்த ஜோடிகள் இருவரும் வக்கீல், போலீஸ் இன்ஸ்பெக்டர், காவலாளி என்று ஒவ்வொருவராக கொல்கிறார்கள். இவர்களின் நடவடிக்கை விசித்திரமாக இருப்பதை அறிந்து பெற்றோர்கள் சாமியார்களிடம் அழைத்துச் செல்லும் இடங்களிலும் கன்னடத்தில் பேசும் பேய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். போலீஸ் மர்ம கொலைகளின் பின்னணி என்ன என்பதை விசாரிக்க தொடங்குகின்றனர். மந்திரியின் மகனுக்கும் ஆபத்து இருப்பதை உணர்ந்து போலீஸ் எச்சரிக்கிறது. இறுதியில் ஏன் பேய்கள் மந்திரி மகனை கொல்ல வருகிறது? காரணம் என்ன? தமன்குமாரும், ஸ்வேதா டோரதி ஜோடி பேய்களின் பிடியிலிருந்து எப்படி தப்பித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
மித்ரனாக தமன்குமார் காதலியை விடாமல் துரத்தி காதலிக்க வைப்பதும், டிடிஎச் கனக்ஷன் கொடுக்க செல்லும் போது நடக்கும் சம்பவங்களில் சிரிக்க வைப்பது, ஜோடியாக காதலர்கள் சுற்றுவது என்று முதல் பாதியில் ஜாலியான பேர்வழியாக வந்து இரண்டாம் பாதியில் பேய் பிடித்தவுடன் மிரட்டும் கண்களில், மாறும் முகபாவனைகள், கன்னட ஆக்ரோஷ வசனத்தில் மிரட்டல் நடிப்பில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ஆக்ஷனில் அதிரடி செய்துள்ளார்.
காதலி யாழினியாக ஸ்வேதா டோரதி அழகான தேவதையாக வந்து, பேய்களின் பிடியில் மாட்டிக் கொண்டு கண்களை உருட்டி மிரட்டும் தோரணையில் வில்லன்களை துரத்தி அடிக்கும் ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தலாக செய்துள்ளார்.
பெண்பித்தனாகவும், தமிர் பிடித்த வில்லனாகவும் மந்திரியின் மகனாக யோகிராம், தந்தையாக லயன் ஈ.நடராஜ்,சில இடங்களில் காமெடியில் சிரிக்க வைக்கும் பிளாக் பாண்டி,ஊரை ஏமாற்றும் ஏலக்காய் சாமியாராக கிரேன் மனோகர், போலீஸ் இன்ஸ்பெக்டராக கம்பீரமாக வரும் ரஞ்சனா நாச்சியார், நீமாரே, சுரேந்தர், விஜித் சரவணன், ஜெயந்திமாலா, கராத்தே ராஜா ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு.
திருவண்ணாமலையின் அழகான லோகேஷன்கனை தேடிப் பிடித்து காட்சிக் கோணங்களில் கொடுத்து, பேயின் ஆக்ரோஷ துரத்தல்களையும், ஃபிளாஷ்பேக் காட்சிகளையும் திறம்பட கையாண்டுள்ளார் ஒளிப்பதிவு பாண்டியன் குப்பன்.
நா.ராசாவின் பாடல்களில் ஹமரா சி.வி இசையில் பழைய பாணியில் ஒரு குத்துப் பாடலையும் கொடுத்து ரசிக்க வைக்கிறார்.
படத்தொகுப்பு குரு சூர்யா, நடனம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் சுரேஷ் சித், கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ், பாடல்கள் நா. ராசா, ஸ்டண்ட் எஸ் .ஆர் .ஹரி முருகன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் கதைக்கு உறுதுணையாக உள்ளது.
பார்க்கில் பாலியல் வன்கொடுமையால் இறக்கும் கன்னட காதலியும், தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்படும் கன்னட காதலனும் சேர்ந்து பேய்களாக வந்து எதிரிகளை பழி வாங்கும் பழைய கதைக்களம் தான் என்றாலும், ஜோடியாக இரண்டு பேர்களை பிடித்துக் கொண்டு பழி வாங்குவது என்பது புதிதாகவும், விரசமில்லாமல் காட்சிகளை அமைத்திருப்பது, யாரை கொலை செய்ய வேண்டுமோ அவர்களை மட்டும் கொலை செய்து விட்டு ஜோடிகளை விட்டு விட்டு பேய்கள் செல்லுவது போல் காட்சிப்படுத்திய விதம், இன்ஸ்பெக்டரின் பார்வையில் இறுதிக் காட்சியில் திருப்பத்தை கொடுத்து முதல் பாதியை கலகலப்பாகவும், இரண்டாம் பாதியை சலசலப்பாகவும் கொடுத்து தோய்வு ஏற்படாத வண்ணம் இயக்கியுள்ளார் ஈ.கே.முருகன்.
மொத்தத்தில் அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் ஈ.நடராஜ் பார்க் இரட்டை மிரட்டலை பார்த்து ரசிக்கலாம்.