பார்க்கிங் விமர்சனம் : பார்க்கிங் சிம்பிளான திரைக்கதையை மேக்கிங்கில் திருப்பங்களுடன் பிரமாதமாக பேசும்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டனர் | ரேட்டிங்: 3.5/5
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ்.சினிஷ் தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
ஹரிஷ் கல்யாண் (ஈஸ்வர்), இந்துஜா(அத்திகா), எம்.எஸ்.பாஸ்கர் (இளம்பருதி), ரமா ராஜேந்திரா (செல்வி), பிரார்த்தனா நாதன்(அபர்ணா),இளங்கோ (சண்முகம்), இளவரசு ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: சாம் சிஎஸ்,ஒளிப்பதிவு- ஜிஜு சன்னி, எடிட்டிங்: பிலோமின் ராஜ், கலை: என்.கே.ராகுல், சண்டை: தினேஷ் காசி, பீனிக்ஸ் பிரபு, ஆடைகள்: ஷேர் அலி, நடன இயக்குனர்: அப்சர், பாடல் வரிகள்: சாம் சிஎஸ், விஷ்ணு எடவன், நிர்வாகத் தயாரிப்பாளர்: டி முருகேசன், ஒலிக்கலவை: ராஜகிருஷ்ணன் எம்.ஆர், ஒலி வடிவமைப்பு: சின்க் சினிமா, ஸ்டில்ஸ்: ராஜேந்திரன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்
குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் நேர்மையான உயர் அதிகாரி இளம்பருதி (எம்.எஸ்.பாஸ்கர்). மனைவி செல்வி (ரமா) கல்லூரியில் படிக்கும் மகள் அபர்ணா(பிரார்த்தனா நாதன்) என்று அளவான குடும்பம் பத்து வருடங்களாக ஒரு வீட்டில் கீழ் பகுதியில் குடியிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்யும் (ஈஸ்வர்) ஹரிஷ் கல்யாண் தன் காதல் மனைவியும் கர்ப்பிணியுமான அத்திகாவுடன்(இந்துஜா) மாடி வீட்டில் குடியேறுகிறார். இரு குடும்பங்களும் முதலில் பரஸ்பர புரிதலோடு அன்போடு பழகுகிறார்கள். பின்னர் சில மாதங்கள் கழித்து ஈஸ்வர் தன் மனைவிக்காக புது கார் ஒன்றை வாங்குகிறார். அதனை கீழே வீட்டினுள்ளே பார்க்கிங் செய்யும் போது இளம்பருதியின் இரு சக்கர வாகனத்தை வெளியே எடுப்பதில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. முதலில் இது குறித்து விவாதித்து அதற்கேற்றவாறு அட்ஜெஸ்ட் செய்து பார்க்கிங் செய்யும் போது சிறு கீரல் காரில் விழ பிரச்சனை தொடங்குகிறது. முதலில் உரசலில் தொடங்கி விரிசலாகி இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சனை எழுகிறது. அதன் பின் இளம்பருதி போட்டி போட்டுக் கொண்டு புது கார் வாங்க பார்க்கிங் பிரச்சனை விஸ்வரூமமெடுக்கிறது. இறுதியில் இந்த பார்க்கிங் பிரச்சனை இரு குடும்பங்களுக்குள்ளும் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? இதனால் ஏற்படும் பகை எப்படி இவர்களை மாற்றுகிறது? இருவரின் குணாதிசயங்கள் மாறி எவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள்? இவர்களின் பார்க்கிங் பிரச்சனை முடிவுக்கு வந்ததா? என்பதே படத்தின் பரபரப்பான க்ளைமேக்ஸ்.
ஈஸ்வராக ஹரிஷ் கல்யாண் ரோமென்டிக் ஹீரோவாக வலம் வந்தவர் இந்த படத்தில் அதிரடியான மாற்றத்துடன் புது அவதாரம் எடுத்துள்ளார். மனைவி மீது பாசத்துடன், அலுவலகத்தில் நட்புடன் பழகுவதும், எம்.எஸ்.பாஸ்கரிடம் முதலில் அன்போடு பழக, பின்னர் கார் வந்த பிறகு இருவருக்குள்ளும் ஏற்படும் மோதல் முதலில் சாதாரணமாக தொடங்கி பின்னர் அடிதடி சண்டையில் முடிவதும், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் ஹரிஷிற்கு ஏற்படும் கோபம் பழி வாங்கும் அளவிற்கு மாறுவதை ஒவ்வொரு காட்சியிலும் முற்றிலும் புதிய கோணத்தில் நடித்து இறுதி காட்சிவரை அவருடைய முகபாவனைகள் அந்த வெறித்தனத்தை சிறப்பாக காட்டியுள்ளார். வெல்டன்.
கர்ப்பிணி மனைவி அத்திகாவாக இந்துஜா கணவனின் கோபத்தை கட்டுப்படுத்த படாதபாடுபடுவதும், அறிவுரை கூறி மாற்ற முயற்சிப்பதற்குள் கணவனின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சியாவதும், இறுதியில் பிரசவ வலியால் துடிக்கும் காட்சிகளில் பதற வைத்திருக்கும் நேர்த்தியான நடிப்பால் கவர்கிறார்.
அரசு அதிகாரியாக எம்.எஸ்.பாஸ்கர் தத்ரூபமான வில்லத்தனம் கலந்த குணசித்திர நடிப்பு மிரட்டல். தன் கைப்பிடிக்குள் குடும்பத்தை ஆட்டி வைப்பதும், தன் இஷ்டப்படி தான் நடக்க வேண்டும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத குணத்தால் சிறு சண்டை எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்த வழி வகை செய்கிறது, குள்ளநரித்தனத்துடன் போடும் திட்டங்களும், அலுவலத்தில் ரெய்டு வரும் போது காட்டும் பதட்டம், வசமாக மாட்டி கொள்ளும் இடத்தில் அழுத்தமான ஆர்ப்பாட்டமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. பாராட்டுக்கள்.
எம்.எஸ்.பாஸ்கர் மனைவி செல்வியாக ரமா நடுத்தர குடும்பத்தலைவியின் புலம்பல், ஆற்றாமையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் அசத்தல்.
மகள் அபர்ணாவாக நடித்திருக்கும் பிரார்த்தனா நாதன் இக்கட்டான சூழ்நிலை கைதியாக மாட்டிக் கொள்வதும், பின்னர் தைரியமாக எதிர்த்து தந்தைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதும், இவரின் பங்களிப்பு முக்கிய காட்சியில் தன்னம்பிக்கை பெண்ணாக மிளிர்கிறார்.
இவர்களுடன் வீட்டின் உரிமையாளராக இளவரசு மற்றும் இளங்கோ (சண்முகம்) சில காட்சிகள் வந்தாலும் மனதில் தடம் பதிக்கிறார்கள்.
சாம் சிஎஸ் இசை படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்து பின்னணி இசை மிரள வைத்துள்ளது.
வீடு, அரசு அலுவலகம், ஐடி நிறுவனம் இதைச் சுற்றியே கதைக்களம் இருப்பதை எந்த விதத்திலும் சலிப்பு ஏற்படாதவாறு விறுவிறு காட்சிகளிலும், காரை யார் முதலில் பார்க் செய்வது என்ற கண்ணமூச்சி ஆட்டத்திலும், பழி வாங்க இருவரும் முயற்சிக்கும் காட்சிகளில் பதற வைத்து ஆச்சர்ய காட்சிக் கோணங்களில் அதிர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி.
எடிட்டிங்: பிலோமின் ராஜ், கலை: என்.கே.ராகுல், சண்டை: தினேஷ் காசி, பீனிக்ஸ் பிரபு ஆகியோரின் முக்கிய பங்களிப்பு படத்திற்கு பலம்.
ஒரு வீட்டில் குடியிருக்கும் இரண்டு குடும்பத்தினரின் கார் பார்க்கிங் பிரச்சனை என்று சிம்பிளான கதைக்களத்தை சுவாரஸ்யத்துடன், விறுவிறுப்பு குறையாமல் முதல் பாதி இருவருக்குள்ளும் நடக்கும் ஈகோ சண்டை அதன்பின் இரண்டாம் பாதியில் அவர்களின் பழி வாங்கும் படலத்தால் அவமானப்படும் அளவிற்கு செல்லும் காட்சிகள், கொலைவெறி தாக்குதல்கள் என்று பரபரப்பாக கதைக்களத்தை கொடுத்து முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடியிருக்கும் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள்.இத்தகைய சம்பவங்கள் அன்றாடம் அனைவரும் எதிர்கொள்வது சகஜம் தான், யார் பெரியவன் என்ற ஈகோவை விட்டு கொடுத்து, அனுசரித்து ஒரு புரிதலோடு அரவணைத்து செல்லுங்கள் என்பதும் சிறு சண்டை எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் வாழ்க்கையை வாழும் இரண்டு தலைமுறையின் இடைவேளி மாற்றத்தையும் அழகாக காட்சிப்படுத்தி அசத்தலாக கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஹாட்ஸ் ஆஃப்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ்.சினிஷ் தயாரித்திருக்கும் பார்க்கிங் சிம்பிளான திரைக்கதையை மேக்கிங்கில் திருப்பங்களுடன் பிரமாதமாக பேசும்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டனர்.