பறந்து போ சினிமா விமர்சனம் : பறந்து போ – பெற்றோர்களின், குழந்தைகளின் மனதில், வெற்றி கொடி கட்டி புன்முறுவலோடு சிறகடித்து உயர பறக்கும் வாகை சூடும் | ரேட்டிங்: 4/5
ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர் தயாரித்திருக்கும் பறந்து போ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம்
இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர்; நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவினர்கள்: ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம், படத்தொகுப்பு: மதி வி.எஸ்., இசை: சந்தோஷ் தயாநிதி, பின்னணி இசை: யுவன் சங்கர் ராஜா,பாடல் வரிகள்: மதன் கார்க்கி,தயாரிப்பு வடிவமைப்பு: குமார் கங்கப்பன்,சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா,காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவனே,நடன இயக்குநர்: ரிச்சி ரிச்சர்ட்சன்,ஒலி வடிவமைப்பு: அருள் முருகன்,ஆடியோகிராசூஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன், கலரிஸ்ட்: ராஜசேகரன்,விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்,ஸ்டில்ஸ் : ஜெய்குமார் வைரவன்,ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்,விளம்பர வடிவமைப்பு: ட்வென்டி.ஒன்.ஜி, உலகளாவிய வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்,மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்
சென்னை சிட்லபாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கலப்பு காதல் திருமணம் செய்து கொண்ட கோகுல் (மிர்ச்சி சிவா) மற்றும் குளோரிக்கு (கிரேஸ் ஆண்டனி) எட்டு வயதில் மகன் அன்பு (மிதுல்) இருக்கிறான்.கோகுல் கடைகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் வேலையும், குளோரி புடவைகளை விற்கும் கடை நடத்தி வரும் நடுத்தர குடும்பம் என்பதால் தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்திலும் மீதி வாங்கும் கடனிலும் மகன் அன்பிற்கு தேவையானவை கிடைக்க ஏற்பாடு செய்தாலும், அவனை சரியாக கவனிக்காமல் ஒரு பரபரப்பான வாழ்க்கை நடத்துகிறார்கள்.இருவரும் வேலைக்கு செல்வதால் கொடை விடுமுறை நேரத்தில் மகனை தனிமையில் விட்டு விட்டு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்லும் நிலைமை ஏற்படுகிறது. குளோரி கோவை கண்காட்சியில் புடவை கடை ஸ்டால் போட சென்று விடுவதால், அன்புவை கோகுல் கவனித்து கொள்கிறார். அவ்வப்போது கைபேசியில் தொடர்பு கொண்டு பூட்டிய வீட்டுக்குள் தனிமையில் ஆன்லைன் கோடை வகுப்புகள், கேட்பதை சாப்பிட வாங்கி கொடுத்தாலும் அவனது கவனம் வேறு பக்கம் திசை திரும்புகிறது. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடியும், பெற்றோருடன் கைகோர்த்து சந்தோஷமாக குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஏங்குகிறான். வீட்டிற்கு வரும் கோகுலுக்கு அவனின் செய்கை அமர்க்களமும் தலைவலியாக இருக்க வெளியே சாலை பயணத்திற்கு அழைத்து செல்கிறார். தன் பெற்றோர்களை பார்க்க செல்வதும், கோகுலின் பள்ளி தோழி, அன்புவின் நண்பி என்று இவர்களின் பயணத்தில் நகர வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து விடுபடும் தந்தை கோகுலும் எட்டு வயது மகன் அன்புவும் எழில் கொஞ்சும் மலைப் பிரதேசத்திலும் ஒரு புதிய மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கிறது. மேலும் வழியில், தந்தையின் புகை பழக்கத்தை நிறுத்த அன்பு செய்யும் செயல் என்ன? அன்புவின் குறும்புத்தனத்தால் கோகுலும் குளோரியும் என்ன பாடு பட்டார்கள்? இந்தச் சாலை பயணத்தில் அன்பு தன் குழந்தைப் பருவ சுதந்திரத்தை அனுபவித்தானா? கோகுல் மற்றும் குளோரி தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை கண்டார்களா? என்பதே ராமின் ‘பறந்து போ’ கிளைமாக்ஸ்.
கோகுலாக சிவா, குடைச்சல்கள் தரும் மகனை பொறுமையாக கையாண்டு, தன்னை பூட்டி விட்டு செல்லும் மகனிடம் கெஞ்சுவது, சில நேரங்களில் கடிந்து கொள்வது, மகனின் விளையாட்டு திறமையை கண்டு பூரிப்பது, மலை ஏறும் மகன் இறங்கி வர தெரியாமல் தவிக்கும் போது பரிதவிப்பது, பொய் சொல்லிவிட்டு புகை பிடிப்பது, அஞ்சலியிடம் சூர்யகாந்தி பூ கொடுத்து விட்டு தடுமாறுவது, மனைவியிடம் மகனின் செய்கைகளை விவரிப்பது, மரத்தில் ஏறிக் கொண்டு தூங்கி விடுவது, மகனை துரத்திக் கொண்டு ஓடுவது என்று பாசக்கார தந்தையின் குணாதிசயங்களை பிரதிபலித்துள்ளார். சேட்டைகளை தாங்கிக் கொண்டு ஐ யம் ப்ரௌட் ஆப் மை சன் என்று சொல்லும் இடத்தில் இப்படிப்பட்ட கோபப்படாத தந்தை இல்லையே என்ற ஏக்கத்தை தந்திருப்பதோடு, வித்தியாசமான ரோலில் தன்னை பொறுத்திக் கொண்டு தன்னுடைய வசன மாடுலேஷனில் சிரிக்கவும் வைக்கிறார். வெல்டன்.
அன்புவாக மிதுல் ரியான் எட்டு வயது சிறுவனின் குறும்பு, சேட்டை, பிடிவாதம், பெற்றோரை ஆட்டி படைக்கும் குணம், கோபம், மகிழ்ச்சி, சில சமயங்களில் அதிகப்பிரசங்கிதனமாக தெரிந்தாலும் குழந்தையின் மனநிலையை ஆதாங்கத்தை புரிந்து கொள்ளும் போது மனதில் பதிந்து விடுகிறார்.
மனைவி குளோரியாக கிரேஸ் ஆண்டனி முதலில் செல்போனில் உரையாடும் போதும், மகனிடம் நைசாக பேசி சமாதானப்படுத்தும் போதும், கணவனிடம் மகனை பார்த்து கொள்ள சொல்லும் போது சாதாரண பெண்மணியாக தெரிகிறார். பின்னர் குடும்பத்திற்காக பணத்தை மிச்சப் படுத்த படும் கஷ்டங்கள், வேலை செய்யும் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு பணம் காணாமல் தவிக்கும் தவிப்பு, கவலைகளை மறந்து நடனமாடுவது, தங்கையின் சாபத்தை நினைத்து அழுவது, என்று சோகத்தில் இருக்கும் தருணத்தில் வேறொரு நடிப்பு திறனில் ஜோலிக்கிறார். அதன் பின் கணவனிடம் வந்து சேர்ந்ததும் செய்யும் அலப்பறைகள், சாத்தானே என்று கணவனை அன்பாக கடிந்து கொள்ளும் நேரத்தில், மகனை கண்டு பிடிக்க ஓட முடியாமல் தவிக்கும் பதட்டமான ஒட்டம் என்று பரபரக்கும் காட்சிகளில் நகைச்சுவையில் அசத்தியுள்ளார்.
சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான் மூவரும் தான் படத்திற்கு முதுகெலும்பாக பயணிக்கிறார்கள்.
கோகுலின் தந்தையாக பாலாஜி சக்திவேல், சிவாவின் ஓல்ட் கிரஷ் அஞ்சலி, கணவர் அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் படத்தின் உயிர் நாடிகளாக இருந்து தாங்கி பிடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரத்தின் மெய் சிலிர்க்கும் லாங் ஷாட்கள், இயற்கை எழிலை அள்ளித் தரும் கோணங்கள், மலைகளின் அழகை கண் குளிர கண்டு களிக்கும் வண்ணம் அனைத்தும் புத்துணர்ச்சி ததும்ப விருந்து படைத்துள்ளார்.
தோய்வில்லாத வண்ணம் மதியின் படத்தொகுப்பும், யுவன் சங்கர் ராஜாவின் பிரஷ்ஷான பின்னணி இசையும், ஆங்கிலம் கலந்த இக்கால குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் இதமான சிறு சிறு பாடல்களின் தொகுப்பின் வடிவாக மதன் கார்க்கி பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதியின் இசை கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
தந்தை மகன் உறவை மையப்படுத்தி அதில் மகனின் ஆதாங்கத்தையும், ஆசையையும் வெளிக்கொணர ஒரு பைக் பயணத்தில் தந்தை தன்னுடைய இளமை காலத்தில் தவற விட்ட தருணத்தை நினைத்து ஏங்குவது போலவும், இயற்கையோடு கலந்த வாழ்க்கை முறையை பார்த்து நகர வாழ்க்கையில் இயந்தரத்தன்மை, பெருளாதார தேடல் மறந்து மகிழ்ச்சியாக செல்லும் திரைக்கதையில் தாய், தந்தை, மகன் மூவரின் பாசம், புரிதல், கோபம் கலந்து தெளிந்த நீரோடைப்போல் செல்லும் இடங்களிலும், ஆங்கங்கே சந்திக்கும் நல்ல மனிதர்கள், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பாடம், தந்தையின் புகை பழக்கத்தை நிறுத்த மகன் செய்யும் குறும்பு, பெற்றோர்கள் குழந்தைகளிடம் செலவிட நேரம் ஒதுக்கி அவர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதில் எத்தனை ஆனந்தம் ஏற்படுகிறது என்பதை புரிய வைத்து அழுத்தமாகவும், இயல்பாகவும், விறுவிறுப்பு குறையாமல் பெற்றோர்களின் தியாகத்தையும் சுட்டிக் காட்டி மெய் மறக்கும் வண்ணம் நகைச்சுவை இழையோட கொடுத்து பாராட்டுக்கள் பெறுகிறார் இயக்குனர் ராம். ஹாட்ஸ் ஆஃப்.
மொத்தத்தில் ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ், இணைந்து தயாரித்திருக்கும் பறந்து போ – பெற்றோர்களின், குழந்தைகளின் மனதில், வெற்றி கொடி கட்டி புன்முறுவலோடு சிறகடித்து உயர பறக்கும் வாகை சூடும்.