பரம்பொருள் திரைப்பட விமர்சனம் : பரம்பொருள் இருவரின் சிலைக் கடத்தல் பரமபத விளையாட்டில் திருப்பங்களுடன் வித்தியாசமான கோணத்தில் அசத்தலுடன் ஆச்சர்யப்பட வைத்துள்ளது | ரேட்டிங்: 3.5/5

0
322

பரம்பொருள் திரைப்பட விமர்சனம் : பரம்பொருள் இருவரின் சிலைக் கடத்தல் பரமபத விளையாட்டில் திருப்பங்களுடன் வித்தியாசமான கோணத்தில் அசத்தலுடன் ஆச்சர்யப்பட வைத்துள்ளது | ரேட்டிங்: 3.5/5

கவி கிரியேஷன்ஸ் மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிட சி.அரவிந்த் ராஜ் இயக்கி இருக்கும் படம் ‘பரம்பொருள்’

இதில் ஆர்.சரத்குமார், அமிதாஷ், காஷ்மீர் பர்தேஷி ,சார்லஸ் வினோத் ரவி வெங்கட், டி.சிவா, பாலாஜி சக்திவேல். ஸ்வாதிகா, பாவா செல்லதுரை, கஜராஜ், வி.பாலகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், செந்தில் குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பகலைஞர்கள் : இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு இயக்குனர் – எஸ்.பாண்டிகுமார், எடிட்டர் – நாகூரன் ராமச்சந்திரன், சண்டைக்காட்சி – தினேஷ் சுப்பராயன், நடனம் – சதீஷ் கிருஷ்ணன், ஆடைகள் – பூர்ணிமா ராமசாமி, கலை – குமார் கங்கப்பன், பாடல் வரிகள் – மதன் கார்க்கி, சினேகன், விவேக், நிர்வாக தயாரிப்பாளர் – ஜாயல் பென்னட், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்ரேயன்(சரத்குமார்) ஒய்வு பெறுவதற்குள் ஊட்டியில் நிலம் வாங்கி வசதியாக செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையோடு மனைவி, மகள் பற்றி கவலையில்லாமல் பணம் ஒன்றையே குறிக்கோளாக பேராசை பிடித்த மனிதராக வாழ்கிறார். அதே சமயம் உயிருக்கு போராடும் தன் தங்கையின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் வேலை இழந்து தவிக்கும் ஆதி (அமிதாஷ்) திருட்டு தொழில் செய்து பணத்தை சேர்க்க முற்படுகிறார். இதனிடையே இன்ஸ்பெக்டர் மைத்ரேயனின் வீட்டில் கொள்ளையடித்து ஆதி மாட்டிக் கொள்கிறார். ஆதி சிலை கடத்தும் கும்பலிடம் வேலை செய்ததை அறிந்து மைத்ரேயன் அவரை பழங்கால சிலைகளை திருடி விற்க உதவி செய்தால் ஆதியை போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வைப்பதாக சொல்லி மிரட்டுகிறார். ஆதியும் தன் தங்கையின் மருத்துவச் செலவை கருத்தில் கொண்டு சிலைகடத்தலுக்கு சம்மதம் சொல்கிறார். ஆயிரம் ஆண்டு தொன்மை நிறைந்த புத்தர் சிலை கடத்தல் கும்பலிடமிருந்து மைத்ரேயனிடம் சிக்குகிறது. அந்தச் சிலையை விற்க மைத்ரேயன் மற்றும் ஆதி பலவழிகளில் முயற்சி செய்கின்றனர். ஆனால் சுலபமாக விற்று விடலாம் என்று தப்பாக கணக்கு போடும் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இருவரும் அந்த சிலையை மறைமுகமாக விற்றார்களா? பணம் கைக்கு கிடைத்ததா? சிலையால் அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்ன? இறுதியில் தங்கையின் மருத்துவ சிகிச்சைக்கு ஆதியால் உதவ முடிந்ததா? இதற்கு பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.

இன்ஸ்பெக்டர் மைத்திரியனாக சரத்குமார் மிடுக்காக வரும் நேர்மையான போலீஸ் அதிகாரி, தவறுகளை தட்டிக் கேட்பார் என்று நினைத்தால் அதற்கு எதிர்மறையாக தப்பு செய்வதையே தனது பிரதான கொள்கையாக பணத்தை சேமிக்கும் வித்தியாசமான கேரக்டரில் வந்து அசத்தியுள்ளார். பணத்திற்காக குடும்பம், பாசம் இரண்டையுமே தூக்கி எறிந்து விட்டு தன் லட்சியக் குறிக்கோளோடும் சிலைக்கடத்தலுக்காக பலவிதங்களில் மெனக்கெடும் சரத்குமார் வித்தியாசமான கதைக்களத்தில் தனித்து நின்று படத்தின் அச்சாணியாக ஜொலிக்கிறார்.

ஆதியாக அமிதாஷ் சரத்குமாருடன் படம் முழுவதும் பயணிக்கும் சிறப்பான கதாபாத்திரம். சிலைக்கடத்தலுக்கு துணை போனாலும் அதில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க எடுக்கும் முடிவுகள் படத்திற்கு ப்ளஸ்சாக அமைத்திருப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார் அமிதாஷ். பலவித உணர்ச்சிகளை உள்ளடக்கி வெளிக்காட்டாமல் அப்பாவியாக வலம்வந்து இறுதியில் சர்ப்ரைஸ் கொடுத்து சூப்பரான படத்தில் கிளாஸாக நடித்துள்ளார்.

யாமினியாக காஷ்மீர் பர்தேஷி சிலை ஆராய்ச்சியாளர் என்ற சிறிய கதாபாத்திரம் என்றாலும் படத்திற்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.

சார்லஸ் வினோத் – பாலுவாக, ரவி வெங்கட் – சற்குணபாண்டியனாக, டி.சிவா – வாசுதேவனாக, பாலாஜி சக்திவேல் – சங்கரலிங்கமாக, ஸ்வாதிகா – சக்தியாக, பாவா செல்லதுரை – முத்து குமாராக, கஜராஜ் – ஐஜி கோபால்சாமியாக, வி.பாலகிருஷ்ணன் – வருண் ராவ்வாக, வின்சென்ட் அசோகன் – கிஷன் சேட்டாக, செந்தில் குமரன் – தரணியாக அனைவருமே படத்தில் முக்கிய பங்களிப்புடன் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

சிலைக்கடத்தலின் இருண்ட பக்கங்களை தன் காட்சிக்கோணங்களால் அழகாக படம் பிடித்து, அதற்கான டிடேய்லிங்கை விரிவாக விவரித்து காட்டியிருப்பதில் எடுத்திருக்கும் முயற்சிகள் படத்திற்கு பெரும் பலமாக அமைத்து கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.பாண்டிகுமார்.

எடிட்டர் – நாகூரன் ராமச்சந்திரன், சண்டைக்காட்சி – தினேஷ் சுப்பராயன் ஆகியோர் பரபரப்பை கூட்டியுள்ளனர்.

சிலை வியாபாரம் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்டாக மாறியுள்ளது, பரம்பொருள் அதன் அழுத்தமான திரைக்கதை மூலம் வித்தியாசத்தை தனித்தன்மையோடு பிரதிபலித்துள்ளது. கடத்தல் கும்பல் மோதல்கள் மற்றும் கொலைகளின் வழக்கமான சேர்க்கைக்கு மாறாக, சிலை கடத்தல் வணிகத்தின் நுணுக்கங்கள், ஆராய்ச்சிகள் மற்றும் அது உள்ளடக்கிய உள்ளார்ந்த ஆபத்துகளை ஆழமாக ஆராய்ந்து விவரமாக சொல்லியிருப்பதில் அசத்தியுள்ளார் இயக்குனர் சி.அரவிந்த் ராஜ்.மேலும்,  இறுதிக் காட்சியில் எதிர்பாராத திருப்பத்தை எடுத்து, எதிர்பார்ப்புகளை மீறி, சூழ்ச்சியின் கதைக்களத்தால் பழிவாங்கும் பாதையை நோக்கி நகர்கிறது, இது க்ளைமேக்சில் சஸ்பென்சை தக்க வைக்க உதவி புரிந்துள்ளது.பரம்பொருள், நிச்சயமாக, சட்டவிரோத வர்த்தகத்தின் உலகத்தை ஈர்க்கும் ஆய்வாக பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கியுள்ளது. பரம்பொருள் சிலை கடத்தலை மையமாக வைத்து குற்றம் அதன் கொடூரமான உலகத்தைக் காட்ட  முதல் காட்சியிலேயே  கடத்தல்காரர்களிடம் பேரம் பேசும் ஒருவன் சந்திக்கும் கொடூர மரணமே படத்திற்கு சாட்சி. அனேகமாக, க்ரைம் த்ரில்லர்களின் வெற்றி குற்றத்தை விளக்குவது மட்டுமல்லாமல், கதையை எப்படி நகர்த்துவது என்ற உத்தியை வடிவமைப்பதிலும், அதை சரியாக திருப்பங்களுடன் இணைத்து கொடுப்பதில் தான் உள்ளது. அதை சரியாக செய்து படத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் இயக்குனர் சி.அரவிந்த ராஜ்.

மொத்தத்தில் கவி கிரியேஷன்ஸ் மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரிப்பில் பரம்பொருள் இருவரின் சிலைக் கடத்தல் பரமபத விளையாட்டில் திருப்பங்களுடன் வித்தியாசமான கோணத்தில் அசத்தலுடன் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.