பம்பர் விமர்சனம் : பம்பர் குலுக்கல் பரிசில் நேர்மையின் சிதறலில் மதம் கடந்த வாழ்க்கை தத்துவம் மனதை அள்ளிச் செல்கிறது | ரேட்டிங்: 3/5

0
355

பம்பர் விமர்சனம் : பம்பர் குலுக்கல் பரிசில் நேர்மையின் சிதறலில் மதம் கடந்த வாழ்க்கை தத்துவம் மனதை அள்ளிச் செல்கிறது | ரேட்டிங்: 3/5

வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தியாகராஜா, ஆனந்தஜோதி தயாரித்திருக்கும் பம்பர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எம். செல்வகுமார்.

இதில் வெற்றி, ஹரிஷ் பேரடி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி, ஜி.பி.முத்து, அருவி மதன், ஆதிரா, தங்கதுரை, டிடோ வில்சன், சீமா ஜி.நாயர், அஜய், அஸ்னா, கீர்த்தி, கார்த்திகா, பாரி, முத்து, வீரன், திலீப், கல்கி, சௌந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-வினோத் ரத்தினசாமி, இசை-கோவிந்த் வசந்தா, எடிட்டர்-மு. காசி விஸ்வநாதன், பாடல்கள்-கார்த்திக் நேதா, கலை-சுபந்தர், சண்டை-சுதேஷ், உடை-முத்து, ஒப்பனை-பட்டினம் ரஷித், தயாரிப்பு மேற்பார்வை-ராஜ் கமல், பிஆர்ஒ நிகில் முருகன்.

தூத்துக்குடியில் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து சிறிய திருட்டுக்கள் செய்து போலீசிடம் மாட்டிக் கொண்டு வெளிவருவது வெற்றியின் (புலிப்பாண்டி) வழக்கம். புலிப்பாண்டியின் தாய் காய்கறி வியாபாரம் செய்து கொண்டு மகனுக்கு கடன் வாங்கி உதவிகள் செய்தும் சரியான வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். புலிப்பாண்டிக்கு பல திருட்டு வழிகளில் உதவிகள் செய்து உபத்திரவமும் செய்பவர் காவலர் மாடசாமி (கவிதா பாரதி). பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் புலிப்பாண்டிக்கு ஒரு கொலை செய்தால் நிறைய பணம் வாங்கி தருவதாக காவலர் கவிதா பாரதி கூற, நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட அது சொதப்பலாகி விடுகிறது. இந்த சமயத்தில் அந்த ஊருக்கு புதிதாக சப் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் (அருவி மதன்) மாற்றலாகி வர, அனைத்து ரவுடிகள், திருடர்கள் ஆகியோரை வலை வீசி தேடி பிடித்து ஜெயிலில் அடைக்கிறார். இந்த லிஸ்டில் புலிப்பாண்டியும் அவருடைய நண்பர்களும் இருக்க வேறு வழியின்றி ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டு கேரளாவிற்கு தப்பிச் செல்கின்றனர். அங்கே பம்பையில் லாட்டரி டிக்கெட் விற்கும் முதியவர் (ஹரிஷ் பேரடி) இஸ்மாயிலிடம் 300 ரூபாய் கொடுத்து பம்பர் லாட்டிரி டிக்கெட் புலிப்பாண்டி வாங்குகிறார். அவசரமாக செல்கையில் அங்கேயே அந்த பம்பர் லாட்டரி டிக்கெட் விழுந்து விட, பின்னர் அதை கண்டெடுக்கும் இஸ்மாயில் புலிப்பாண்டியை தேட வேறு வழியில்லாமல் அதை பத்திரமாக எடுத்து வைக்கிறார். இதனிடையே குலுக்கலில் அந்த டிக்கெட்டிற்கு 10 கோடி பம்பர் பரிசு கிடைக்கிறது. இதைக் கேள்விப்படும் லாட்டரி ஏஜென்சி முதலாளி இஸ்மாயிலிடம் சொல்ல, அந்த டிக்கெட் தன்னிடம் தான் உள்ளதாக தெரிவிக்கிறார். இதனை கேள்விப்படும்  இஸ்மாயில் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.குடும்ப கஷ்டம் தீர்ந்து விட்டதாக நினைக்கும் குடும்பத்தினரிடம்  அந்த டிக்கெட்டை வாங்கிய புலிப்பாண்டியிடம் சேர்க்க வேண்டும் என்று இஸ்மாயில் பிடிவாதமாக சொல்வதை கேட்டு குடும்பத்தில் பெரும் பிரச்னை சண்டை நடக்கிறது. இஸ்மாயில் குடும்பத்தினரின் பேச்சை மீறி புலிப்பாண்டியை தேடி தூத்துக்குடிக்கு பயணிக்கிறார். அங்கே ஐயப்ப சங்கங்களில் புலிப்பாண்டியை பற்றி விசாரிக்க எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சந்தேகத்தின் பேரில் இஸ்மாயிலை போலீஸ் நிலையத்தில் அழைத்து விசாரிக்கின்றனர்.அப்பொழுது அங்கிருக்கும் கைதிகளைப் பற்றிய அறிவிப்பு பலகையில் புலிப்பாண்டியின் புகைப்படத்தைப் பார்த்து இஸ்மாயில் காவலர் மாடசாமி உதவியுடன் புலிப்பாண்டியை கண்டுபிடித்து 10 கோடி அதிர்ஷ்ட பம்பர் லாட்டரியைப் பற்றி சொல்கிறார். புலிப்பாண்டி பெரும் மகிழ்ச்சியுடன் இஸ்மாயில் மற்றும் தன் நண்பர்களுடன் 10 கோடி பணத்தைப் பெற கேரளா செல்கின்றனர். அங்கே புலிப்பாண்டியால் பணத்தை பெற முடிந்ததா? இஸ்மாயில் புலிப்பாண்டிக்கு பணம் வாங்க என்ன உதவி செய்தார்? பணத்திற்காக இஸ்மாயில் குடும்பத்தினர் என்ன செய்தனர்? புலிப்பாண்டிக்கு பத்து கோடி பணம் கைக்கு வந்து சேர்ந்ததா? புலிப்பாண்டியின் நண்பர்கள் பணத்திற்காக என்ன திட்டம் போட்டனர்? இறுதியில் புலிப்பாண்டி பணத்தை யாருக்கு கொடுத்தார்? என்பதே படத்தின் அசத்தலான க்ளைமேக்ஸ்.

புலிப்பாண்டியாக வெற்றி ஏழ்மை நிலையை போக்கவும் பணத்திற்காக குற்றங்களைச் செய்வதில் கை தேர்ந்தவராக அடிதடி, சண்டை என்று நண்பர்களுடன் திருடிய பணத்தை பங்கு போட்டு கொள்வது, போலீஸ் நிலையத்தில் ரெகுலராக வந்து போகும் குற்ற பின்னணி கொண்டவராக அடாவடி இளைஞராக இயல்பாக செய்துள்ளார். அதுவரை நண்பர்களுடன் நட்பாக பழகும் அவர், லாட்டரியில் பணம் கிடைத்தவுடன் சந்தேகம் குணம் கொண்டவராக யாரையும் நம்பாமல், சுயநலமாக சிந்திக்கும் வேளையில் கவனிக்க வைக்கிறார். அதன் பின் இஸ்மாயில் குடும்பத்தைப் பார்த்து அவர் எடுக்கும் முடிவு, நண்பர்களுக்கு அவர் செய்யும் செயல் தான் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு நன்பமதிப்பை ஏற்படுத்துகிறது. வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி பெயருக்கு ஏற்றாற் போல் வாகை சூடுவார்.

ஹரிஷ் பேராடி முதியவர் இஸ்மாயிலாக நடை, உடை, குல்லா தாடியுடன் அச்சு அசலாக இஸ்லாமிய பெரியவராக வாழ்த்திருக்கிறார். பெரும் பணக்காராக வாழ்ந்து நேர்மையால் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடினாலும் தன்னுடைய மனச்சாட்சிக்கு துரோகம் நினைக்காதவராக, கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் விதத்தில் தனித்து நிற்கிறார். டிக்கெட்டை கொடுக்க அவர் சந்திக்கும் இழப்புகள், வலிகள், அதை பத்திரமாக திருப்பி கொடுக்க எடுக்கும் முயற்சிகள் அவர் பிரதிபலிக்கும் நடிப்பு அற்புதம். மகனின் துரோகத்தை மறைத்து, தன் குடும்பத்தின் நிலைமையையும் மறைத்து பணத்தை பார்த்தவுடன் மனம் மாறாதவராக நடந்து கொள்ளும் விதத்தில் மனதை கொள்ளை கொள்கிறார். தன் குடும்பத்திற்கு சோறு போடும் வேலைக்கு எடுத்து செல்லும் பையே அவரின் நேர்மைக்கு பரிசாக பணத்தை வாரி கொடுக்க இறுதிக் காட்சியில் பணம் பிரதானமல்ல பணம் தன் செருப்புக்கு சமம் என்பதை செருப்பை கழட்டிவிட்டு தன் அறைக்கு செல்லும் காட்சியில் புரிய வைத்து கண் கலங்க வைத்து கை தட்டல் பெறுகிறார்.

ஆனந்தியாக ஷிவானி நாராயணன் இந்தப் படத்தில் தான் எதிர்பாராத வண்ணம் அடக்க ஒடுக்கமாக புலிப்பாண்டியின் காதலியாக நடித்துள்ளார்.

காவலர் மாடசாமியாக கவிதா பாரதி குள்ள நரியாக கூட இருந்து கொண்டே நன்மையும், வில்லத்தனத்தையும் மாறி மாறி செய்து மிரட்டலான இறுதி வரை யதார்த்தமான நடிப்பு சிறப்பு.

துப்பாக்கி பாண்டியனாக ஜி.பி.முத்து கொஞ்சம் நகைச்சுவைக்கு உத்திரவாதம் தந்து சிரிக்க வைக்கிறார். எஸ்.பி பெஞ்சமினாக அருவி மதன், பிரமாச்சியாக ஆதிரா, பூதமாக தங்கதுரை, நியாஸாக டிடோ வில்சன், இஸ்மாயில் மனைவியாக சீமா நாயர், ஷாஜி பட்டிகாராவாக அஜய், அஸ்னா, கீர்த்தி, கார்த்திகா, பாரி, முத்து, வீரன், திலீப், கல்கி, சௌந்தர்யா என்று எண்ணற்ற கதாபாத்திரங்கள் படத்தின் உயிரோட்டமான கதைக்கு முக்கியத்துவமான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

புனலூர், கொல்லம், கேரளா, தூத்துக்குடி என்று பயணிக்கும் கதைக்களத்தை எழில் கொஞ்சும் இயற்கை சூழலுடன், எளிமையான மக்கள் வாழ்விடத்தையும், கார் சேசிங், சண்டைக்காட்சிகள், போலீஸ் நிலையம் என்று தத்ரூபமான ஒளிப்பதிவில் வினோத் ரத்தினசாமி தனி முத்திரை பதித்துள்ளார்.

கார்த்திக் நேதாவின் பாடல் வரிகளில் கோவிந்த் வசந்தாவின் இசை, பின்னணி இசையும் அதிரடியாக இல்லாமல் அமைதியான தெளிந்த நீரோடைப்போல் கொடுத்துள்ளார்.

எடிட்டர்-மு. காசி விஸ்வநாதன்  முதல் பாதியில் தேவையில்லாத காட்சிகளை நீக்கியிருந்தால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும். கலை-சுபந்தர், சண்டை-சுதேஷ் பங்களிப்பு கச்சிதம்.

பரிசு விழுந்த பம்பர் லாட்டரி சீட்டு ஒவ்வொருவரின் மனநிலையை எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது இந்து, முஸ்லிம் மதம் கடந்த மனிதம் என்ன என்பதை மலையாள நெடியுடன் தமிழ் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எம். செல்வகுமார். பணத்திற்காக ஒருவன் எப்படியெல்லாம் வாழ்கிறான், பணத்திற்காக ஒருவன் எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றக்கூடாது என்பதை சித்தரிக்கும் கதையில் மனிதனின் பணத்தாசை எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்தும், மன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அழகாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி, உணர்ச்சிகளின் குவியலாக அசத்தலான நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸ் படத்திற்கு ப்ளஸ். இறுதிக் காட்சியில் படபடப்புடன் வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் எம்.செல்வகுமார். முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாக செல்லும் கதைக்களம் இரண்டாம் பாதியில் விறுவிறுப்புடன் அழுத்தமான பதிவால் சிறந்த படமாக பாடமாக மிளிர்கிறது. வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தியாகராஜா, ஆனந்தஜோதி தயாரித்திருக்கும் பம்பர் குலுக்கல் பரிசில் நேர்மையின் சிதறலில் மதம் கடந்த வாழ்க்கை தத்துவம் மனதை அள்ளிச் செல்கிறது.