பனாரஸ் விமர்சனம்: பனாரஸ் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் காசியின் புனிதம் கலந்த காலச்சக்கரத்தில் மாட்டிக்கொள்ளும் காதல் கதை | ரேட்டிங்: 3/5

0
264

பனாரஸ் விமர்சனம்: பனாரஸ் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் காசியின் புனிதம் கலந்த காலச்சக்கரத்தில் மாட்டிக்கொள்ளும் காதல் கதை | ரேட்டிங்: 3/5

என் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் திலகராஜ் பல்லால் மற்றும் முஸ்ஸாமில் அஹமத் கான் தயாரித்திருக்கும் பனாரஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயதீர்த்தா.

இதில் ஜையீத் கான் – சித்தார்த் சிம்ஹா, சோனல் மோன்டோரியோ – தனி, சுஜய் சாஸ்திரி – ஸாம்பு, அச்யுத் குமார் – நாராயண் சாஸ்திரி, பரக்கத் அலி – பீட்டர் ஜாக்சன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு : அத்வைதா குருமூர்த்தி, படத்தொகுப்பு: கே. எம். பிரகாஷ், இசை : பி. அஜனீஷ் லோக்நாத், தமிழ்நாடு வெளியீடு : பி. சக்திவேலன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, மக்கள் தொடர்பு : யுவராஜ்.

சித்தார்த் (ஜையீத் கான்) தன் கல்லூரி நண்பர்களிடம் தனியை (சோனல் மான்டீரோ) வீழ்த்துவேன் என்று சவால் விடுகிறார், மேலும் தனியை ஒரு சுவாரஸ்யமான முறையில் டைம் மிஷன் கதையை சொல்லி நம்ப வைத்து அணுகுகிறார். தனி சித்தார்த்தை நம்ப, அவரால் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்குகிறார். தன் தவறை உணர்ந்த சித்தார்த், அவளிடம் மன்னிப்பு கேட்க, தனி தங்கியிருக்கும் பனாரஸ{க்கு செல்கிறார். தனியிடம் மன்னிப்பு கேட்டாரா சித்தார்த்? தனி அவனை மன்னித்தாளா? இந்த விஷயத்தில் சித்தார்த் சந்திக்கும் சூழ்நிலைகள் என்ன? சித்தார்த்திற்கு ஏற்படும் மனநிலை மாற்றம் என்ன? சித்தார்த் யாரால் பழி வாங்கப்படுகிறார்? இது மீதமுள்ள கதையின் ஒரு பகுதியாகும்.

பனாரஸ் மூலம் நடிகராக அறிமுகமான ஜையீத் கான், அழகாகவும் ஸ்டைலாகவும் இருந்து எளிதாகவும் இயல்பாகவும் நடித்து தனது முதல் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க தன் தோளில் கதையை சுமந்து சுவாரஸ்யத்துடன் கொடுத்துள்ளார்.

சோனல் மான்டிரோ அழகாகத் தோன்றி அவரது பாத்திரத்தில் சிறப்பாக நடித்து புத்துணர்ச்சியூட்டி, ஒவ்வொரு ஃபிரேமிலும் இயற்கையான நேர்த்தியையும் வெளிப்படுத்துகிறார், மேலும் ஜையீத் கான் உடனான அவரது ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

சுஜய் சாஸ்திரி, அச்யுத் குமார் மற்றும் தேவராஜ், சப்னா ராஜ், ஆகியோர் கவனம் ஈர்த்துள்ளனர்.

‘மாய கங்கா’ பாடல் படத்திற்கு ப்ளஸ். இந்தப் பாடல் மாயம் செய்து பார்வையாளர்களின் காதுகளில் ஒலிக்கின்றன. இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் பணி சிறப்பு. பின்னணி இசை இனிமை.

அத்வைத் குருமூர்த்தியின் கேமராவில் பனாரஸ் இன்னும் அழகாக தெரிகிறது. மேலும் பனாரஸின் கம்பீரமான இடங்களை மிக அழகாக படம்பிடித்துள்ளார்.படத்திற்கேற்ற தலைப்புடன் காட்சிக்கோணங்களில் வர்ண ஜாலங்களை காட்டி அசத்தியுள்ளார்.

‘புயூட்டிஃபுல் மனசுகுலு’, ’பெல்பாட்டம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா புதிய ரசனை கொண்ட கதை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். காசியை கதைக்கள பின்னணியாக கொண்டு காதலுடன் டைம்லூப் கான்செப்ட்டை புதுவிதமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர். கதையின் முதல் பாதி மெதுவாக ஓடும் அமைதியான கங்கை போல் தோன்றினால், இரண்டாம் பாதி வேகமாக பல மேடு பள்ளங்களை தாண்டி ஒடும் ஆக்ரோஷ கங்கையாக மாறுகிறது.

மொத்தத்தில், பனாரஸ் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் காசியின் புனிதம் கலந்த காலச்சக்கரத்தில் மாட்டிக்கொள்ளும் காதல் கதை.