பத்து தல விமர்சனம் : ‘பத்து தல’ முழுமையான த்ரில்லிங் அனுபவத்தை தரும் சிம்புவின் இராவண ஆட்டம் | ரேட்டிங்: 4/5

0
1286

பத்து தல விமர்சனம் : ‘பத்து தல’ முழுமையான த்ரில்லிங் அனுபவத்தை தரும் சிம்புவின் இராவண ஆட்டம் | ரேட்டிங்: 4/5

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் ‘பத்து தல’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஓபிலி என் கிருஷ்ணா.

இதில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ மேனன், பிரியா பவானி சங்கர், டீஜே அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, அனு சிதாரா, சந்தோஷ் பிரதாப், மனுஷ்யபுத்திரன், சென்ராயன், மது குருசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை -ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – ஃபரூக் ஜே பாஷா, படத்தொகுப்பு-பிரவீன் கே.எல்;, ; கலை இயக்குநர்- மிலன், சண்டை- சக்தி சரவணன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா டிஒன்.

கன்னியாகுமரியில் பெரிய சுரங்க மாஃபியா தாதாவான ஏஜி ராகவன் என்ற ஏஜிஆர் அரசியல், அதிகாரம், பணம், அடியாட்கள் பலம் என்று கொடி கட்டி பறந்து தனக்கென்று ஒரு தனி ராஜாங்கமே நடத்தி தமிழக அரசியலில் முதலமைச்சரை தீர்மானிக்கும் அளவிற்கு செல்வாக்கு மிகுந்தவராக வலம் வருகிறார். இதனிடையே தமிழகத்தை ஆளும் கட்சிக்குள் பரபரப்பான அரசியல் சண்டைக்கு மத்தியில் முதல்வர் அருண்மொழியும் (சந்தோஷ் பிரதாப்), ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்ற துணை முதல்வர் நாஞ்சிலார் குணசேகரனும் (கௌதம் வாசுதேவ் மேனன்) தடுப்பூசி நலத் திட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த நலத் திட்டத்தில் உறுதி செய்த பங்கு கிடைக்காததால் நாஞ்சிலார் அருண்மொழியை மிரட்ட, விடிவதற்குள் கொடுத்துவிடுவதாக அருண்மொழி உறுதி கொடுக்கிறார். அன்றிரவு உரிய பாதுகாப்பை தவிர்த்து முதல்வர் அருண்மொழி வெளியே செல்ல கடத்தப்படுகிறார். இதற்கு காரணம் நாஞ்சிலார் குணசேகரன் என்று கட்சிக்காரர்கள் நினைக்கின்றனர். நாஞ்சிலாருக்கு தாதா ஏஜிஆர் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. கடத்தியவர்களை கண்டு பிடிக்க சிபிஐ களமிறங்க அவர்களுக்கு உதவி செய்ய அன்டர்கவர் போலீஸ் அதிகாரியான சக்திவேல் (கௌதம் கார்த்திக்) குணா என்ற பெயரில் உளவாளியாக ஏஜிஆர் கும்பலுக்குள் நுழைந்து தன் செயல் மூலம் நெருங்கிய முக்கிய ஆளாக ஏஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக உருவெடுக்கிறார். நாஞ்சிலாரும் ஏஜிஆரை பழி வாங்க திட்டம் போடுகிறார். ஏஜிஆர் சக்திவேலிடம் சிக்கினாரா? நாஞ்சிலாரிடமிருந்து ஏஜிஆர் தப்பித்தாரா? சக்திவேல் ஏஜிஆரின் குடும்ப பின்னணியை தெரிந்து அதிர காரணம் என்ன? காணாமல் போன முதல்வர் அருண்மொழியின் நிலை என்ன? இந்தப் பனிப்போரில் வென்றது யார்? தோற்றது யார்? என்பதே ஆக்ஷன் கலந்த க்ளைமேக்ஸ்.

சிலம்பரசன், தாடி வைத்த தோற்றத்தில், முழுக்க முழுக்க கறுப்பு உடைகள் மற்றும் திடமான உடற்கட்டுடன்,ஒரு மாநிலத்தின் முதல்வரை பதவியிலிருந்து இறக்கிவிடக்கூடிய அல்லது நியமிக்கக்கூடிய சக்திவாய்ந்த தாதாவாக நம்பும்படியாக இருக்கிறார். ஏழைகளுக்கு உதவ சுரங்க தொழிலில் ஈடுபட்டு ராபின்ஹ{ட்டாக மாறி ஏழை மக்களுக்கு வாரி வழங்கி ஊர் மக்களால் கொண்டாடப்படும் மனிதராக பில்டப்புடன் இரண்டாம் பாதி படத்திற்கு மேல் வந்து தன் உன்னதமான நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். சிலம்பரசன் டி.ஆரின் உற்சாகம், திரைப் பிரவேசம் மற்றும் வலிமையான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் தீப்பொறி பறக்கிறது. முதலில் சிறிய நெகடிவ் தோற்றமாக தெரிந்தாலும் அதன் பின் அதற்கான காரணத்தை விவரிக்கும் காட்சிகள், அவரின் உண்மையான பின்னணி அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதில் தவறவில்லை.பாதி படத்தில் வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சிம்புவிற்கு ஏற்ற பொருத்தமான கதாபாத்திரம் அசத்தலுடன் உயிரோட்டத்துடன் நடித்துள்ளார். இறுதியில் மாஸ் காட்டும் சண்டைக் காட்சிகள் உண்டு.

சிலம்பரசனும் கௌதம் கார்த்திக்கும் படத்தின் இரு துருவங்களாக தாங்கி நிற்கிறார்கள். கௌதம் கார்த்திக் அன்டர்கவர் போலீஸ் சக்திவேலாக முதல்வர் காணாமல் போன வழக்கின் விசாரணை அதிகாரியாகவும், அதே சமயம் தாதா கூட்டத்தில் உளவாளி குணாவாக சுவாரஸ்யத்துடன் தன் பங்களிப்பை கொடுத்து இந்தப் படத்தில் மூலம் முக்கிய திருப்புமுனை கலந்த கேரக்டரில் முத்திரை பதித்து சிறப்பான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளார். அவர் வரும் ஆக்ஷன் காட்சிகளில் கடின உழைப்பு தேர்ந்த நடிகராக சண்டையிடுவது கூடுதல் சிறப்பு. ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படும்.

முக்கிய எதிரியாக, வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு மாற்றத்திற்காக ஒரே படத்தில் வெவ்வேறு ஸ்லாங்கை முயற்சித்திருக்கிறார். அரசியலில் தான் துணை முதல்வர் என்றால் படத்திலும் துணை வில்லனாக தான் காட்சிப்படுத்தப்பட்டு குறைவான புத்திசாலித்தனத்துடன் கதைக்களத்திலிருந்து நகர்ந்து விடுகிறார்.

லீலா தாம்சனாக பிரியா பவானி சங்கர் தாசில்தாராகவும், கௌதம் கார்த்திக்கின் முன்னால் காதலியாகவும் வந்து தன் இருப்பை தக்க வைத்துவிட்டுச் செல்கிறார்.

ஏஜிஆரின் உதவியாளராக டீஜய் அருணாசலம், ஒரு கும்பலில் கெட்டவனாக இருந்தாலும் கவனத்தை ஈர்க்கும் நல்ல கதாபாத்திரம்.

கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, அனு சிதாரா, சந்தோஷ் பிரதாப், மனுஷ்யபுத்திரன், சென்ராயன், மது குருசாமி ஆகியோர் படத்தின் காட்சிகளை உணர்ந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக, படத்தின் தாக்கத்தை அதிகரிக்க ஏஆர் ரஹ்மான் ஒரு மயக்கும் பின்னணி இசையை வழங்கி அதிரடியான குத்தாட்டம் போடும் சாயிஷாவிற்காக ராவடி பாடலையும் கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஃபாரூக் ஜே பாஷாவின் காட்சிகள் சிறப்பாக உள்ளன. வான்வழி ஷாட்களில் தேர்ச்சி பெற்றவர் என்பதை நிரூபிக்கிறார், பெரும்பாலும் குவாரியில் ஓடும் லாரிகளின் எண்ணிக்கை, குவாரியின் அளவு மற்றும் செயல்பாட்டின் அளவைக் காட்ட அவற்றைப் பயன்படுத்துகிறார். மிகைப்படுத்தும் சண்டைக் காட்சிகளிலும் அதிர வைத்துள்ளார்.

சக்தி சரவணன் சிம்புவிற்கும், கௌதம் கார்த்திக்கிற்கும் சண்டைக் காட்சிகளை விறுவிறுப்புடன் அமைத்து கைதட்டல் பெற வைத்துள்ளார்.

சிவராஜ்குமாரின் வெற்றி கன்னடப் படமான முஃப்தியின் தமிழ் ரீமேக்கான பத்து தல, அரசியல் கலந்த தாதா படத்துடன் கணிக்கக்கூடியதாக கவனத்தை ஈர்க்கிறது. ஏஜிஆரின் கோட்டையில் உளவாளி போன்ற சில ஆச்சரியங்கள், ஏஜி.ஆருக்கும் அவரது சகோதரிக்கும் இடையே உள்ள உணர்ச்சிப்பூர்வமான பிரிவு, ஒருவரையொருவர் பேசிக் கொள்ளாதது, ஏஜிஆ;ர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை சித்தரிக்கும் பகுதிகள்  என்று படத்தின் குற்றக் கோணம் பெரும்பாலும் இரண்டாம் பாதியில் விரிவடைகிறது, மேலும் படத்தின் இந்த பாதிதான் ஒருவரை கதையில் மூழ்கடிக்க வைக்கிறது. நவீன கால அரசியலை மிகத் துல்லியமாக ஆராயும் இத்திரைப்படம், கதையை இன்னும் சுவாரஸ்யமாக்குவதற்கு கூடுதல் உழைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா. எந்தவொரு கேங்க்ஸ்டர் படத்தின் வெற்றி அதன் உலகை எவ்வாறு உருவாக்குகிறது மற்றும் முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஆழம் சேர்க்கிறது என்பதைப் பொறுத்து அமைகிறது. இதில் அத்தனை சிறப்பங்சங்களையும் கலந்து மாஸ் என்டர்டெயின்மெண்ட் படமாக சிம்பு ரசிகர்களுக்கு ஒரு விஷ{வல் ட்ரீட்டாக மாஸ் காட்டி இயக்கியுள்ளார் ஒபிலி என்.கிருஷ்ணா.

மொத்தத்தில் ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் ‘பத்து தல’ உணர்ச்சிகள் கலந்த ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் கொண்ட முழுமையான த்ரில்லிங் அனுபவத்தை தரும் சிம்புவின் இராவண ஆட்டம்.