நெஞ்சுக்கு நீதி விமர்சனம்: ஒடுக்கப்பட்டவர்களின் வலியை ஒங்கி ஒலிக்க செய்து அழுத்தத்தோடு பதிவு செய்து வசூலில் வெற்றி வாகை சூட காத்திருக்கும் தீர்க்கதரிசி நெஞ்சுக்கு நீதி | ரேட்டிங் – 3.5/5

0
299

நெஞ்சுக்கு நீதி விமர்சனம்: ஒடுக்கப்பட்டவர்களின் வலியை ஒங்கி ஒலிக்க செய்து அழுத்தத்தோடு பதிவு செய்து வசூலில் வெற்றி வாகை சூட காத்திருக்கும் தீர்க்கதரிசி நெஞ்சுக்கு நீதி | ரேட்டிங் – 3.5/5

பே வியூ பிராஜக்ட்ஸ் சார்பில் போனி கபூர்,  ஜீ ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இணைந்து தயாரித்து வழங்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீட்டில் வந்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி.

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதியில் தான்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, ஆரி அர்ஜுனன்,ராட்சசன் சரவணன், ஷிவானி ராஜசேகர், ரமேஷ் திலக், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், வசனம் -தமிழரசன் பச்சைமுத்து, படத்தொகுப்பு -ரூபன், பாடல்கள்-யுகபாரதி, பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ஏய்ம் சதீஷ்.

உதயநிதி ஸ்டாலின் (விஜயராகவன்) உதவி காவல் கண்காணிப்பாளராக மாற்றலாகி பொள்ளாச்சியில் உள்ள கிராமத்திற்கு வருகிறார். அங்கே சாதி பாகுபாடு, அரசியல் தலையீடு, காவல்துறையில் உயர் சாதி ஆதிக்கம், அதை எதிர்த்து போராடும் தலித் மக்களின் குரலாக விளங்கும் ஆரி மீது பல வழக்குகள் (குமரன்) என்று எங்கு பார்த்தாலும் வேற்றுமை நிறைந்து போராட்ட களமாகவே அந்த கிராமம் இருப்பதை உணர்கிறார். கிராமத்திலும் சரி, காவல் நிலையத்திலும் சரி இதே நிலைமை நீடிப்பதை உணர்ந்து அதிர்ச்சியாகிறார். இதனிடையே அரசியல்வாதியின் தொழிற்சாலையில் வேலை செய்யும் சத்யா என்ற பெண் உட்பட இரண்டு இளம் பெண்கள் முப்பது ரூபாய் அதிக ஊதியம் கேட்டார்கள் என்பதற்காக கடத்தப்படுகின்றனர்.மறு நாள் காலையில் இரண்டு பெண்கள் தூக்கில் தொங்கி இறந்திருக்க, சத்யா மட்டும் காணாமல் போகிறார். இதனால் கிராமத்தில் கலவரம் வெடிக்க பிரதே பரிசோதனையில் இரண்டு பெண்களும் கற்பழிக்கப்பட்டு, துன்புறுத்தி கொலை செய்யப்பட்டு இறந்தாக அறிக்கை வெளிவர, காவல் துறை அதிகாரியான சுரேஷ் சக்கரவர்த்தி அதை மூடி மறைக்க பல வழிகளில் முயல்கிறார். உதயநிதி ஸ்டாலின் இந்த வழக்கை துரிதமாக விசாரிக்க தொடங்க, பல திடுக்கிடும் உண்மைகள் புலப்படுகிறது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தன் வேலையே சஸ்பெண்ட் ஆகும் நிலையில் தள்ளப்படும் நிலையில் அதற்குள்ளாக குற்றவாளியை உதயநிதி கண்டுபிடித்தாரா? குற்றம் புரித்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? அனைவரும் இந்த பூமியில் சமமான உரிமையோடு வாழ வேண்டும் என்ற கொள்கைக்கு அடித்தளம் அமைத்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

ஏ.எஸ்.பி விஜயராகவனாக உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியான ஆனால் அழுத்தமான பார்வை, தீர்க்கமான பேச்சு, சிந்தித்து முடிவு எடுக்கும் திறன், உயர் அதிகாரிகளை நிதானத்துடன் கையாள்வது என்று மேம்பட்ட நாயகனாக பத்து ஆண்டு கால உழைப்பில் மாறி வருகிறார். தன்னுடைய கேள்விகளுக்கு விடை தன் காதலியிடம் பெறுவது, அதன் பின் சிந்தித்து பார்க்கும் போது சரியாக பிரதிபலிப்பது, தன் கீழ் பணியாற்றும் மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட போலீஸ் அதிகாரிகளை தன் கட்டளைக்கு பணிந்து போகச் செய்வது, தக்க தருணத்தில் விசாரணையை துரிதமாக முடித்து தண்டனை பெற்று தர சாமர்த்தியமாக காய் நகர்த்துவது என்று கச்சிதமாக உதவி காவல் கண்காணிப்பாளர் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.வெல்டன்.
நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நாயகனுக்கு வழிகாட்டும், அறிவுறுத்தும் நாயகியாக வித்தியாசமான கோணத்தில் காதலியாக சித்தரித்து அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்துள்ளார். வில்லனாக மிரட்டல் சாதிஆணவம் பிடித்த காவல் அதிகாரியாக சுரேஷ் சக்கரவர்த்தி, எதிர்த்து பேச முடியாமல் தவிக்கும் போலீஸ்காரர் இளவரசு ஆகிய இருவரும் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளனர். ஆரி அர்ஜுனன் போராளிக்குரிய கதாபாத்திரத்திலும் ராட்சசன் சரவணன், ஷிவானி ராஜசேகர், ரமேஷ் திலக், மயில்சாமி ஆகியோர் எந்தக் குறையுமில்லாமல் நடித்துள்ளனர்.
யுகபாரதியின் வரிகளில் பாடல்கள் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பின்னணி இசை, ரசிகர்களை காட்சிகளில் முழ்க செய்து கவனிக்க வைத்து கண்கலங்கும்படி படத்தின் வலுவை கூட்டியுள்ளார்.

திரையில் தோன்றும் காட்சிகளின் உணர்வுகளுக்கு உயிரூட்டியுள்ள தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு  கிராமத்தின் எழிலையும், அதில் புதைந்து கிடக்கும் சாதி வேற்றுமைகளையும், காவல் நிலையத்தின் அலங்கோலங்களையும், காணாமல் போன பெண்ணை தேடும் கடைசி நிமிடங்களிலும் தன்னுடைய காட்சிக்கோணங்களால் மிரள வைத்திருக்கும் உழைப்பிற்கு பாராட்டுக்கள்.
‘எல்லாருமே சமம்னா யாரு தான் ராஜாவா இருக்குறது…?” உதயநிதி கேள்வி எழுப்ப ‘எல்லாரும் சமம்னு நினைக்கிறவன்தான் ராஜாவா இருக்கணும்.” என்று தான்யா பதில் சொல்லும் விதத்தில் படத்தின் கதையை ஒரே வரியில் முடித்த தமிழரசன் பச்சைமுத்துவின் ஷார்ப்பான வசனங்கள் படத்துக்கு பெரும் பலம். ‘நம்மள இங்க எரிக்கத்தான் விடுவாங்க, எரிய விட மாட்டாங்க”, ” சட்டம் தான் இங்க தேசிய மொழி”,’அவங்க குளிச்சா அழுக்காகாத தண்ணி, நாங்க குடிச்சா அழுக்காகிடுமா சார்”, ‘சட்டமா, எங்களுக்கும் அதுக்கும் இந்த நாட்டுல மரியாதை இருக்கா என்ன” ஆரியும், ஷிவானி ராஜசேகர் தங்கள் மனக்குமறல்களாக கொட்டும் கேள்விகள் சாதிய மனநிலைக்கு எதிராக எழுதப்பட்ட வசனங்கள் சிந்திக்க வைத்து ரசிகர்களின் கரவொலியில் கைதட்டலுடன் நெஞ்சை கனக்க செய்துள்ளது.

ரூபனின் மிரட்டலான படத்தொகுப்புக்கு படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
ஹிந்தியில் 2019ம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்து பல எதிர்மறை விமர்சனங்களையும் ஒரு சேர பாராட்டுக்களையும் குவித்த ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் நெஞ்சுக்கு நீதி என்றாலும் நம் மண்ணின் மனம் மாறாமல்  இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப திரைக்கதையை அழகாக செதுக்கியுள்ளார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.கனா முதல் படத்தின் மூலம் சாதித்த இயக்குனர் அருண் ராஜா காமராஜ், நெஞ்சுக்கு நீதியின் மூலம் சாதியை வைத்து சாதிக்க வைத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த சாதிப் பிரச்னை, உண்மைச் சம்பவங்களை படத்தின் திரைக்கதையில் பிரதிபலித்து அனைவரும் சமம், தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்கிற அடிப்படையான விஷயத்தை வலியுறுத்திள்ளார். ஒரு பட்டியலின பெண் சத்துணவு சமைத்தார் என்பதற்காக துன்புறுத்தப்பட்டு சமைத்த உணவும் வீணாக்கப்பட்டதில் துவங்கி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெரியார், அம்பேத்கர் சிலைகள், டாக்டர் அனிதா மற்றும் காவலர்களுக்கு இடையே இருக்கும் சாதிய பாகுபாடு என அனைத்து நிலையிலும் மண்டிக்கிடக்கும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை எடுத்துரைத்து அதற்கு தீர்வாக சிக்கலான ஆர்ட்கிள் 15 சட்டப்பிரிவில் சாதி, மத, பாலினம் உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் பாகுபாடு பார்க்கக் கூடாது என்ற எளிமையாக கையாண்டு அனைவருக்கும் புரியும் வண்ணம் நெத்தியடியாக கொடுத்துள்ளார் இயக்குனர்.

பட்டியலின மக்களுக்காக போராடும் குமரனின் போராட்டங்கள், பாலியல் வன்கொடுமை காட்சிகள், அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்று திணிக்கப்பட்டு விரிவாக காட்டாமல் வசனங்களிலும், காட்சிகளிலும் கடந்து செல்வது படத்தில் ஆறுதலான விஷயங்கள். அதிரடியான ஆக்ஷன் களத்துடன் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் முற்றிலும் நேர்மறையான புதிய அனுபவத்தை கொடுக்கும். ஆரம்பக் காட்சியில் டீக்கடை, பாம்பு என்று தொடங்க இறுதிக் காட்சியிலும் டீக்கடை, பாம்பு என்று பல குறியீடுகளுடன் படத்தை முடித்து கவனிக்க வைப்பதில் வெற்றி  காண்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

மொத்தத்தில் பே வியூ பிராஜக்ட்ஸ் சார்பில் போனி கபூர்,  ஜீ ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீட்டில் வந்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி ஆதிக்க சாதி சக்திகளின் மிரட்டல், அலட்டல் இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை ஒங்கி ஒலிக்க செய்து அழுத்தத்தோடு பதிவு செய்து வசூலில் வெற்றி வாகை சூட காத்திருக்கும் தீர்க்கதரிசி.