நூடுல்ஸ் விமர்சனம் : ‘நூடுல்ஸ்’ எதிர்பாராத திருப்பங்களுடன் சிக்கலை தீர்த்து நொடியில் அசத்திடும் சாமர்த்தியமான சாதுர்யமான துரித தீர்ப்பு | ரேட்டிங்: 3.5/5

0
464

நூடுல்ஸ் விமர்சனம் : ‘நூடுல்ஸ்’ எதிர்பாராத திருப்பங்களுடன் சிக்கலை தீர்த்து நொடியில் அசத்திடும் சாமர்த்தியமான சாதுர்யமான துரித தீர்ப்பு
| ரேட்டிங்: 3.5/5

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் தயாரித்திருக்கும் ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் ‘அருவி’ மதன். இப்படத்தை ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’  சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்.

நடிகர் ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார்,ரவுடி பேபி புகழ் ஆஸியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா, மஹினா, சுபா,பிரகாஷ் மற்றும் இவர்களுடன் இயக்குனர்‘அருவி’ மதனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத் தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார். பிஆர்ஒ-ஜான்.

ஹரீஷ் உத்தமனும் ஷீலா ராஜ்குமாரும் காதல் திருமணம் செய்தவர்கள்.இவர்களுக்கு ஆஸியா என்ற பெண் குழந்தை உள்ளது. ஷீலாவின் பெற்றோர் பத்து வருடங்களாக மகளை பார்க்காமல் இருக்கின்றனர். இதனால் ஹரிஷ் மற்றும் ஷீலா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினர் தான் இவர்களுக்கு உறவுகளாக இருக்கிறார்கள். ஒரு நாள் இரவு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் மொட்டை மாடியில் அமர்ந்து ஜாலியாக சத்தமாக பாட்டு பாடி மகிழ்கின்றனர். இவர்களின் கூச்சலால் போலீஸ் நிலையத்திற்கு புகார் வர, இன்ஸ்பெக்டர் அருவி மதன் கான்ஸ்டபிளுடன் அந்த இடத்திற்கு வந்து எச்சரிக்கின்றார். இதனால் கோபமடையும் ஹரீஷ் மற்றும் ஷீலா இன்ஸ்பெக்டர் அருவிமதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட பெரிய சண்டையாக மாறிவிடுகிறது. இதனால் கோபமுடன் செல்கிறார் இன்ஸ்பெக்டர் அருவிமதன். அதன்பின் ஷீலாவின் பெற்றோர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று மறுநாள் வரப்போவதாக தகவல் வர ஹரீஷ் மகிழ்ந்து அவர்களுக்காக உணவு ஏற்பாடு செய்து விட்டு மனைவி ஷீலாவிற்கு சொல்லாமல் சர்ப்பரைஸ் கொடுக்க நினைக்கிறார். மறுநாள் அதிகாலை ஹரீஷ் மகளுடன் கடைக்கு செல்ல, பணம் இல்லாததால் மகளை வீட்டிற்கு அனுப்பி எடுத்துவரச் சொல்கிறார். கடையில் திடீரென்று ஹரீஷிற்கு அழைப்பு வர அவசரமாக வீட்டிற்கு செல்ல அங்கே வீட்டினுள் ஒருவர் விழுந்து கிடக்க, மனைவி ஷீலா பதட்டத்துடன் இருக்கிறார். அந்த நபர் மகள் அஸியாவிடமிருந்து செல்போனை பறிக்க போக இழுத்து தள்ளும் போது கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட்டதாக சொல்கிறார் ஷீலா. இதைக்கேட்டு அதிர்ச்சியாகும் ஹரீஷ் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகிறார். ஹரீஷ் கொலை குற்றத்தில் மாட்டிக் கொண்டதால் தெரிந்த வக்கீல் வசந்த் மாரிமுத்துவை அழைக்கிறார். ஏற்கனவே இன்ஸ்பெக்டரிடம் சண்டை போட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். இதனிடையே இன்ஸ்பெக்டர் அருவிமதன் வீட்டிற்கு விசாரணைக்காக வருகிறார். ஏற்கனவே பதட்டத்தில் இருக்கும் மூவரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். இறுதியில் இன்ஸ்பெக்டர் மதன் இவர்கள் மறைக்கும் காரணத்தை கண்டு பிடித்தாரா? அடிபட்ட நபர் என்ன ஆனார்? ஹரீஷ் மற்றும் ஷீலாவை இன்ஸ்பெக்டர் கைது செய்தாரா? இவர்களுக்கு உதவ வரும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் செய்த காரியம் என்ன? அனைவரும் இன்ஸ்பெக்டரிடமிருந்து தப்பித்தார்களா? ஷீலா பெற்றோரை சந்தித்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சரவணனாக ஹரீஷ் உத்தமன் பாசம் நிறைந்த காதல் கணவராகவும் மனைவி கொலை செய்து விட்டார் என்பதையறிந்தவுடன் தன் மீதே பழியை போட்டுக் கொண்டு சமாதானப் படுத்துவதும், இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் நடத்தி தெரியாமல் சண்டையிட்டு இக்கட்டில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போதும், இறுதிக் காட்சியில் அதிலிருந்து தப்பிக்கும் தருணத்தில் நிம்மதி பெருமூச்சு விடச் செய்து விடுகிறார். படம் முழுவதும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

மனைவி சக்தியாக ஷீலா ராஜ்குமார் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அதைக்கேற்ற நடிப்பை இயல்பாக கொடுத்துள்ளார்.

இன்ஸ்பெக்டராக வரும் அருவி மதன் உருட்டல், அதட்டல் விடுத்து அனைவரையும் அடிபணிய வைப்பதும், பின்னர் வசமாக மாட்டிக் கொண்ட பிறகு பம்மும் இடங்களில் நடிப்பால் மிரட்டிவிடுகிறார்.

இவர்களைவிட படத்தில் சர்ப்பரைஸ் வக்கீல் திருவாக வரும் வசந்த் மாரிமுத்துவின் நடிப்பு தான். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை, மிரட்சி, நடுக்கம், சமாளிப்பு என்று பலதரப்பட்ட உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி கை தட்டல் பெறுகிறார்.

இவர்களுடன் பேபி ஆஸியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா, மஹினா, சுபா,பிரகாஷ் கச்சிதமான தேர்வு படத்திற்கு பலம்.

ஒளிப்பதிவு வினோத், படத்தொகுப்பு சரத்குமார், இசை ராபர்ட் சற்குணம், கலை இயக்குநர் கென்னடி இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான இப்படத்தை ஒரே வீட்டினுள் நடப்பதாக இருக்கும் காட்சிகளுக்கு தனித்துவமான பங்களிப்பை கொடுத்திருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

சாதாரண மக்கள் போலீசிடம் வம்பு வைத்துக்கொண்டால் என்ன சிக்கலும், பிரச்சனையும் ஏற்படும் அதன் பின் என்ன நடக்கும் என்ற சிம்பிளான கதையை ஆழமான கதையம்சத்துடன், அழுத்தமான திரைக்கதையுடன் விறுவிறுப்பு குறையாமல், யதார்த்தமாக நடப்பது போல் சம்பவங்களை கோர்வையாக கொடுத்து, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் கலகலப்பாக முடித்து பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறிய படமாக மட்டுமல்ல சீரிய படமாகவும் கொடுத்து அசத்தியுள்ளார் நடிகரும், இயக்குனருமான அருவிமதன். வெல்டன். இரண்டு நிமிஷத்தில் ரெடியாகும் ‘நூடுல்ஸ்’ போல இந்தப்படம் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் மனித உறவின் உணர்ச்சிகளையும், அதிகார பதவிகளின் அடாவடித்தனத்தையும் தோலுரித்து காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது.

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் தயாரித்திருக்கும் ‘நூடுல்ஸ்’ எதிர்பாராத திருப்பங்களுடன் சிக்கலை தீர்த்து நொடியில் அசத்திடும் சாமர்த்தியமான சாதுர்யமான துரித தீர்ப்பு.