நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம் : நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவிற்காக பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
458

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம் : நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவிற்காக பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

லைகா நிறுவனம் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுராஜ்.
இதில் வைகைப்புயல் வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ராவ் ரமேஷ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், பிரசாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை : சந்தோஷ் நாராயணன்,ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு,எடிட்டிங்: செல்வா ஆர்.கே, பிஆர்ஒ- யுவராஜ்.

ஆறு வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்து வரும் வேல ராமமூர்த்தி தம்பதி குழந்தை வரம் வேண்டி பைரவர் கோயிலுக்கு செல்ல ஒரு சித்தரின் அருள் ஆசி பெற்ற அதிர்ஷ்ட நாய் குட்டி ஒன்றை வீட்டிற்கு எடுத்து வருகின்றனர்.  அந்த நாய் வந்த நேரம், வேல.ராமமூர்த்தியின் குடும்பமும் செல்வச் செழிப்போடு வளர, வடிவேலுவும் பிறக்கிறார். வேலைக்காரன் (ராவ்ரமேஷ்) அந்த நாயை பார்த்துக் கொள்ள, அதனுடைய அதிர்ஷ்டத்தைஅறிந்த அவன் தெய்வ அருள் பெற்ற நாயை திருடிக் கொண்டு போய் ஹைதராபத்தில் கூடியேறி செல்வ செழிப்புடன் வாழ்கிறான்.  நாய் தொலைந்து போனவுடன் வேல ராமமூர்த்தியின் குடும்பமும் நலிந்து பொய் விட, வறுமையில் வாடுகின்றனர். அதனால்  தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து விலை உயர்ந்த நாய்களைக் கடத்தி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் இந்தியாவின் முதல் நாய் கடத்தல்காரராக நாய் சேகர் என்ற பெயருடன் வலம் வருகிறார் வடிவேலு. ஒருநாள் பெரிய தாதாவான ஆனந்த் ராஜின் நாயை தெரியாமல் கடத்திக் கொண்டு வந்து விட, அதை தெரிந்து கொண்டு வடிவேலுவை தன்  அடியாட்களுடன் தேடி வருகிறார் தாதா ஆனந்தராஜ். இதனிடையே பணக்கஷ்டத்தில் தவிக்கும் வடிவேலு ஹைதராபாத்தில் இருக்கும் தன் அதிர்ஷ்ட நாயை மீட்பதற்காக தனது குழுவை அழைத்துக்கொண்டு செல்கிறார்.இதே சமயம் வடிவேலுவால் பாதிக்கப்பட்ட போலீஸ் முனீஸ்காந்தும் அவரை துரத்திக் கொண்டு வருகிறார். ஹைதராபாத்தில் தாதா, போலீஸ் ஆகிய இருவரிடமிருந்து வடிவேலு தப்பித்தாரா? தொலைந்து போன அதிர்ஷ்ட நாயை மீட்டாரா? வேலைக்காரரை என்ன செய்தார்? என்பதே க்ளைமேக்ஸ்.

வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய மறு பிரவேசத்தை மாண்டஸ் புயலுடன் சேர்ந்து கரையை கடக்க முயற்சி செய்திருக்கிறார். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது ரசிகர்கள் கையில் தான் உள்ளது. தமிழ் சினிமா நகைச்சுவையில் வடிவேலு ஒய்வு எடுத்ததிலிருந்து வெற்றிடமாகத் தான் இன்றும் இருக்கிறது. அந்த அரியணையில் மீண்டும் அமர வடிவேலுவின் மறக்க முடியாத நாய் சேகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சுராஜ் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடிகருக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் என்ட்ரி கொடுத்து சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். வடிவேலுவின் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவனை, நடனம், பாட்டு என்று அசத்தியிருந்தாலும்;, தன்னுடைய நகைச்சுவை பஞ்ச் டெலிவெரிகள் சரியாக இல்லாததால், நினைத்த வண்ணம் சிரிப்பை வரவழைக்க முடியாமல் திணறி ஒரளவு பூர்த்தி செய்துள்ளார். அவரது நகைச்சுவைத் திறமை அதிலும் ஒப்பந்தக்காரர் நேசமணி, கைப்புல்ல மற்றும் வாண்டுமுருகன் போன்ற அவரது மிகவும் பிரபலமான பாத்திரங்களில் சிலவற்றைப் எண்ணிப் பார்த்தும் புகழ்பெற்ற டயலாக்குகளை நினைத்துப் பார்த்தும் ஏக்கத்துடன் பெருமூச்சு விட வைத்து விட்டார்.

இவருடன் ஷிவாங்கி, பிரசாந்த் முதலில் தோன்றி படப் பெயரைப் போல் எங்கே ரிட்டர்ன் போனார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு பதில் இரைச்சல் சத்தத்துடன் ரெடின் கிங்ஸ்லி, ராவ் ரமேஷ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், இவர்கள் தவிர,  தங்கதுரை, கே.பி.ஒய் பாலா, சச்சு, ராஜா ராணி கார்த்தி, மனோபாலா, ராமர்  அனைத்து காமெடியர்களும் களமிறங்கி தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கம் முயற்சியில் வந்து போகிறார்கள் மற்றும் தாதாவாக ஆனந்தராஜ் வரும் காட்சிகள் எல்லாம் ஒரளவு நகைச்சுவைக்கு உத்திரவாதம்.

இசை : சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு தங்கள் பங்கை கச்சிதமாக செய்துள்ளனர். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பரவாயில்லை.

தொலைந்து போன அதிர்ஷ்டம் நிறைந்த நாயை கண்டு பிடிக்க செல்லும் வடிவேலுவை வைத்து திரைக்கதை எழுதி அதில் தாதா,கடத்தல், துரத்தல், திருமணம் என்று பழைய மசாலாவை அரைத்திருக்கிறார் இயக்குனர் சுராஜ். இதில் வடிவேலுவுக்கு ஏற்றவாறு நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் சிர்ப்பதற்கான சாத்தியகூறுகள் இல்லாததால் படத்தின் முக்கிய நோக்கமே காணாமல் போக, இறுதிக் காட்சியில் கொஞ்சம் ஆறுதலாக சிரிக்க வைத்துள்ளார் இயக்குனர் சுராஜ்.

மொத்தத்தில் லைகா நிறுவனம் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவிற்காக பார்க்கலாம்.