நாடு விமர்சனம் : நாடு வித்தியாசமான அணுகுமுறையோடு முயற்சியை கைவிடாத அசத்திடும் நிலைப்பாடு | ரேட்டிங்: 3/5

0
169

நாடு விமர்சனம் : நாடு வித்தியாசமான அணுகுமுறையோடு முயற்சியை கைவிடாத அசத்திடும் நிலைப்பாடு | ரேட்டிங்: 3/5

ஸ்ரீஆர்ச் மீடியா அண்ட் எண்டர்டெயிண்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் சக்ரா மற்றும் ராஜ் தயாரித்திருக்கும் நாடு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சரவணன்.

இதில் தர்ஷன், மஹிமா நம்பியார், ஆர்.எஸ் சிவாஜி, சிங்கம் புலி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்:- இசை: சி.சத்யா, ஒளிப்பதிவு : கே.ஏ.சக்திவேல், கலை. : லால்குடி. என்.இளையராஜா, எடிட்டர் பி.கே, பிஆர்ஒ-ஆனந்த்.

கொல்லிமலையில் உள்ள ஒரு சிறிய மலைக்கிராமம் தேவநாடு. அந்த கிராமத்தில் மருத்துவமனை இருந்தும், டாக்டர்கள் இல்லாததால், அவசரகாலத்தில் நெடும் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்குள் பல உயிர்கள் பலியாகின்றன. கிராம மக்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கலெக்டரிடம் மனு கொடுத்து போராடி மருத்துவமனைக்கு ஒரு மருத்துவரை நியமிக்க வைக்கின்றனர். டாக்டர் அந்த கிராமத்தை விட்டு போகாமல் இருக்க வைப்பது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது என்று கலெக்டர் சொல்லிவிட்டுச் செல்கிறார். தேவநாடு கிராமத்தின் மருத்துவமனைக்கு மருத்துவராக மஹிமா நம்பியார் வருகிறார். ஊர் தலைவர் சிங்கம் புலி, தர்ஷன் மற்றும் தர்ஷனின் தந்தை ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் டாக்டர் மகிமாவுக்கு உதவியாக இருக்கிறார்கள். இருந்தாலும் டாக்டர் மஹிமா கிராமத்தில் பணி செய்வதை விரும்பாமல் ஒரு வாரத்திற்குள் இடமாற்றம் செய்ய முற்படுகிறார். அதற்குள் மஹிமா கிராமத்தில் தங்கியிருக்கும் போது சில உயிர்களைக் காப்பாற்றுகிறார், அதைத் தொடர்ந்து கிராம மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பார்க்கிறார்கள். மஹிமாவை இடமாற்றம் செய்வதைத் தடுக்க கிராம மக்கள் திட்டம் தீட்டுகிறார்கள்.மஹிமா விரும்பிய இடமாற்றம் கிடைத்ததா, கிராம மக்கள் என்ன செய்தார்கள்? இறுதியில் டாக்டர் மஹிமா எடுத்த முடிவு என்ன? கிராம மக்கள் ஆசை நிரசையானதா? என்பதே மீதிக்கதை.

மலை கிராமத்து இளைஞனாக தர்ஷன் தன் முழு பங்களிப்பை நயம்பட கொடுத்து நடை, உடை, பாவனை, பேச்சு என்று அக்மார்க் முத்திரை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் தங்கை, தந்தை, சித்தப்பா இறக்கும் போது தன்னால் அழக்கூட முடியாமல் கிராமத்தின் நலனுக்காக எடுக்கும் முடிவும், டாக்டரின் தேவையறிந்து பார்த்து பார்த்து அனைத்தையும் செய்வது, தன் சோகக்கதையை சொல்லும் இடத்திலும், ஒற்றை ஆளாக நின்று இறுதி வரை போராடும் குணத்துடன் அசத்தலான இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார் தர்ஷன். எந்த ஒரு டூயட் பாடலும் காதலும் இல்லாத தர்ஷன் கதாபாத்திரம் கச்சிதம்.

வசதி படைத்த மருத்துவராக மஹிமா நம்பியார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் முடிந்தவரை கிராமத்து மக்களுக்கு பேருதவி செய்து, பல சந்தர்ப்பங்களில் கிராம மக்களை காப்பாற்றுவதும், மக்களின் அன்பில் உருகும் கடைசி காட்சியில் நெகிழ்ச்சியான தருணத்தை சிறப்பாக செய்துள்ளார்.

இரட்டை வேடங்களில் ஆர் எஸ் சிவாஜி தர்ஷனின் அப்பாவாகவும், சித்தப்பாகவும், கிராமத் தலைவராக சிங்கம் புலியும், கலெக்டராக வரும் அருள்தாஸ{ம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மலைக்கிராமத்து மக்களின் இசையும், ஆட்டம் கொண்டாட்டத்தை திறம்பட கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சி.சத்யா.

வளைந்து நெளிந்து செல்லும் மலைக்கிராமத்தின் சாலைகள், எழில் கொஞ்சும் இயற்கை சூழ்நிலையையும், மருத்துவமனை, கிராமத்து வீடுகள், டாக்டர் தங்கும் இடம் என்று காட்சிக்கோணங்களில் தனி முத்திரை பதித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல்.

கலை. : லால்குடி. என்.இளையராஜா, எடிட்டர் பி.கே ஆகியோர் கனச்கச்சிதமாக மெச்சும்படி கொடுத்துள்ளனர்.

எளிய கிராமத்தில் மருத்துவரை வரவழைக்கவும், அவரை இருக்கச் செய்வதற்கும் ஒரு கிராமத்து இளைஞன் எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறான் என்பதை யதார்த்தமாக சொல்லி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எம் சரவணன்.ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்ட விதத்தில்தான் படத்தின் வெற்றி இருக்கிறது. மலை கிராமத்து மக்களின் முக்கிய பிரச்சனையை கையிலெடுத்து அதில் அனிதா தற்கொலை, நீட் தேர்வு   போன்ற பார்வையாளர்களுடன் எளிதில் இணையும் சில சமகால சிக்கல்களையும் அவர் தொட்டுள்ளார். டாக்டரை மகிழ்ச்சிப்படுத்த திருமண ஏற்பாடு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், மலை உச்சியில் டீ டே கடை, கேட்டவுடன் படிக்க புத்தகம், பிடித்த உணவுகளை சமைக்க கற்றும் கொள்ளும் கிராமத்து பெண், திருமண சீர்வரிசை என்று தடபுடலாக கேட்காமலேயே செய்யும் மக்களின் வெகுளித்தனமாக அன்பை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் எம்.சரவணன்.  இறுதியில் குழந்தைக்கு பெயர் வைத்துவிட்டு ஒரு டாக்டரை தன் கிராமத்து மக்களிடையே உருவாக்கியே தீருவோம் என்ற தன்னம்பிக்கை மிக்க கிராமத்து மக்களின் வெளிப்பாட்டை நிலைநிறுத்தியிருக்கும் விதம் அற்புதம்.

ஸ்ரீஆர்ச் மீடியா அண்ட் எண்டர்டெயிண்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் சக்ரா மற்றும் ராஜ் தயாரித்திருக்கும் நாடு வித்தியாசமான அணுகுமுறையோடு முயற்சியை கைவிடாத அசத்திடும் நிலைப்பாடு.