நண்பன் ஒருவன் வந்த பிறகு விமர்சனம் : நண்பன் ஒருவன் வந்த பிறகு வசந்தகாலநட்பின் வாசம் தென்றலாக வீசும் | ரேட்டிங்: 3/5
மசாலா பாப்கார்ன் சார்பில் ஐஸ்வர்யா மற்றும் எம்ஜி. சுதா. ஆர் தயாரித்து வெங்கட் பிரபு வழங்கி அறிமுக இயக்குனர் ஆனந்த ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு.
இந்த படத்தில் மதன் கௌரி, பவானி ஸ்ரீ, பின்னி மதன் பிரபு, பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. அனந்தி, ஆர்.ஜே. விஜய், பாலா, இர்ஃபான் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஏ.ஹெச்.காசிப் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் தமிழ்ச்செல்வன். பாடல்கள் – தனுஷ், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா. படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர், பிஆர்ஒ-டி ஒன் சுரேஷ் சந்திரா.
1992ல் தொடங்கி பல கால கட்டங்களாக இளைஞன் ஆனந்த் வாழ்க்கையை சித்தரிப்பதையே படத்தின் கதை. ஆனந்த் சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் விமானத்தில் உடன் வரும் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் தன் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொள்வதிலிருந்து கதைக்களம் தொடங்குகிறது. சென்னையில் ஆனந்தம் காலனியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சிறுவயதில் குடும்பத்துடன் இடம்பெயர்கிறார் ஆனந்த். அங்கே நண்பர்கள் கிடைக்க பள்ளி வாழ்க்கை இனிதே மகிழ்ச்சியுடன் செல்கிறது. பள்ளி வாழ்க்கை முடிய தனக்கு பிடித்த விஸ்காம் படிப்பை படிக்க முடியாமல் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்கிறார் ஆனந்த். அங்கே பவானி ஸ்ரீ பார்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார். கல்லூரியிலும் நண்பர்கள், எதிரிகள் கிடைக்க கூடவே காதலையும் விடாமல் தொடர்கிறார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் நண்பர்களுடன் சேர்ந்து என்ஒவிபி இவன்ட்ஸ் என்ற ஸ்டர்ட் அப்பை தொடங்கி நடத்த முயற்சி செய்ய பல சிக்கல்கள் ஏற்பட அதை சரி செய்ய முடியாததால் நண்பர்கள் அனைவரும் பிரிந்து தனித்தனியே கிடைத்த வேலையை செய்கின்றனர். ஆனந்த்; சிங்கப்பூரில் மேல் படிப்பு படிக்க சென்று அங்கேயே வேலையையும் தேடிக் கொள்கிறார். சென்னையில் தந்தை தனக்காக வாங்கிய கடன்களை படிப்படியாக அடைத்து வரும் நிலையில் அங்கே தன் காதலி பவானிஸ்ரீக்கு திருமண ஏற்பாடுகளை அவரது தந்தை செய்வதை அறிந்து அதிர்ச்சியாகிறார். இதனால் மனஉளைச்சலில் இருக்கும் ஆனந்த் காதலி பவானி ஸ்ரீயை பார்க்கவும் இந்தியாவிற்கு வர முடியாமலும் தவிக்கிறார். இதனிடையே சிங்கப்பூரில் தனது நீண்ட நாள் கனவான பிகம் எ ஸ்டார் என்ற ஸ்டாட்ர் அப் கம்பெனியின் மென்பொருளை வெற்றிகரமாக நண்பர்கள் உதவியுடன் செய்து முடிக்கிறார். அந்த மென்பொருளுடன் இந்தியாவிற்கு வந்து காலனியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்ய விரும்பும் ஆனந்தின் ஆசை நிறைவேறியதா? காதலியை கரம் பிடித்தாரா? இவரின் வாழ்க்கையில் வரும் நண்பர்களால் மீண்டும் மகிழ்ச்சி ஏற்பட்டதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
புதுமுகமாக தோன்றும் ஆனந்த் ஏற்கனவே சிறு வேடங்களில் ஹிப்ஹாப் ஆதி படங்களில் நடித்தவர். பள்;ளிக்காலம் முதல் கல்லூரி காலம் வரை தன்னுடன் பயணிக்கும் நண்பர்களுடன் பழகிய விதம், அதன் பின் வேலை தேடி வெளிநாட்டிற்கு செல்வதும் வரை பல பரிமாணங்களை ஆனந்த் சிறப்பாக செய்துள்ளார்.
காதலியாக பவானி ஸ்ரீ தனக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அளவான நடிப்பை வழங்கியுள்ளார்.படத்தில் ஆர்.ஜே விஜய், வினோத், குகன் பிரகாஷ், இர்ஃபான், தந்தையாக குமரவேல், தாயாக விசாலினி, பாட்டியாக குலப்புள்ளி லீலா, மதன் கௌரி, பின்னி மதன் பிரபு, பாலா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோருடைய நடிப்பு படத்திற்கு பலம்.
ஏ.ஹெச்.காசிப் இசையில் தனுஷ், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் தலா ஒரு பாடல்கள் பாடி வெற்றியடைய செய்துள்ளனர். படத்திற்கு பின்னணி இசை கூடுதல் பலம்.
வௌ;வேறு காலகட்டங்களுக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவிலும், சென்னை, சிங்கப்பூர் வாழ்வியலை அழகாக படம் பிடித்து அசத்தியுள்ளார் தமிழ்ச்செல்வன்.
படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர் காட்சிகளில் கவனம் செலுத்தி அசத்தியுள்ளார்.
கதையின் நாயகன் மற்றும் இயக்குநர் என இருவிதத்தில் அர்ப்பணிப்பை கொடுத்து 1992 தொடங்கும் பள்ளி பருவம் முதல் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு திரும்பும் வரை ஆனந்த் சந்திக்கும் நட்பு வட்டங்களின் கோர்வையாக ஒரு இளைஞனின் இன்ப துன்ப வாழ்வியலையும், காதலையும், நட்பையும், உணர்ச்சிகள் நிறைந்த காவியமாக அழகாக தொகுத்து மணம் வீசும் மலர் மாலையாக கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் ஆனந்த ராம். படம் சின்ன சின்ன ஆசை முதல் எல்லாம் புகழும் இறைவனுக்கே என்று ஆறு பகுதிகளாக பிரித்து ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை ஆங்கங்கே ஒலிக்க செய்து எமோஷனல் டச்சுடன் இயக்கியுள்ளார் ஆனந்த ராம்.
மொத்தத்தில் மசாலா பாப்கார்ன் சார்பில் ஐஸ்வர்யா மற்றும் எம்ஜி. சுதா.ஆர் தயாரித்து வெங்கட் பிரபு வழங்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு வசந்தகாலநட்பின் வாசம் தென்றலாக வீசும்.