துரிதம் சினிமா விமர்சனம் : துரிதம் கைக்கு எட்டாத தூரத்தில் செல்லும் அவசர காதல் பயணம் | ரேட்டிங்: 2.5/5
திருவருள் ஜெகநாதன் தயாரிப்பில் துரிதம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சீனிவாசன்.
இதல் ‘சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன் , பூ ராமு , ராமச்சந்திரன் (ராம்ஸ்), வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – நரேஷ், ஒளிப்பதிவு – வாசன், அன்பு டென்னிஸ்,படத்தொகுப்பு – நாகூரான், சரவணன்,ஆக்சன் – மணி, மக்கள் தொடர்பு – கேஎஸ்கே செல்வா
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஈடனும் அவளுடைய மூன்று தோழிகளும் தினமும் ஜெகனின் வாடகை காரில் தங்கள் அலுவலகத்திற்குப் பயணம் செய்கிறார்கள். ஜெகன் ஈடனை ஒரு தலையாக காதலிக்கிறான், அவன் தன் காதலை ஈடனிடம் சொல்ல தைரியம் வருவதற்குள், ஈடன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் சொந்த ஊருக்கு செல்ல தயாராகிறாள். வேலையை விட காரணம் ஈடனின் தந்தை மிகவும் சந்தேக குணம் கொண்ட கண்டிப்பு மிகுந்தவர் என்பதால் வேறு வழியில்லாமல் ரயிலில் செல்ல தயாராகிறாள். செல்வதற்கு முன் தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு அசதியில் தூங்கி விட ரயிலை தவற விடுகிறாள். அதே சமயம் விரக்தியில் இருக்கும் ஜெகனும் தன் டிரைவர் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு தன் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார். இதனை கேள்விப்படும் ஈடனின் தோழிகள், ஜெகனிடம் தன் தோழி ஈடனை மதுரையில் பைக்கில் அழைத்துச் சென்று விட்டுவிடுமாறு சொல்கின்றனர். இதனை ஏற்கும் ஜெகன் ஈடனும் பைக்கில் பயணம் மேற்கொள்ள, தன் காதலையும் அவளிடம் சொல்லி விடலாம் என்ற நப்பாசையுடன் பயணிக்கிறார் ஜெகன். இந்நிலையில் பைக் நடுவழியில் பழுது ஏற்பட இருவரும் வழியில் காரில் வரும் ராம்ஸிடம் லிப்ட் கேட்கின்றனர். ராம்ஸ் சம்மதிக்க ஜெகன் காரில் ஏறுவதற்குள் ஈடனை கடத்துகிறார். அடுத்து என்ன நடந்தது? ஈடனை ஜெகனால் கண்டுபிடிக்க முடிந்ததா? ஜெகனின் காதல் வெற்றியடைந்ததா என்பது கதையின் மீதி.
ஓட்டுனர் மாரிமுத்துவாக கார் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டிய காட்சிகளில் சண்டியர் ஜெகன் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெகன் பக்கத்து வீட்டு பையன் போல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி காதல் பகுதிகளில் ஜொலித்து, கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை உணர வைக்கிறார். ஈடனின் காதலுக்காக ஏங்குவதும், காதல் தோல்வியடையும் போது உடைவதும், ஈடன் கடத்தப்பட்ட பிறகு ஏற்படும் பதற்றம் என அவர் ஸ்கோர் செய்கிறார்.
ஐடியில் வேலை செய்யும் பட்டதாரி வானதியாக ஈடன் தன் கதாபாத்திரத்திற்கு மிகவும் தேவையான தாக்கத்தை உருவாக்கி படம் முழுவதும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். தன் தந்தை, தாயிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதிலும், தோழிகள் மூலம் சமாளிப்பதிலும், ஜெகனிடம் முதலில் முறைப்பதும், பின்னர் கடத்தப்படும் போது தப்பிக்க எடுக்கும் முயற்சிகள், ஜெகனின் நல்லெண்ணத்தை புரிந்து கொள்ளும் விதத்திலும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார்.
பால சரவணன் காமெடியில் சில இடங்களில் கவனிக்க வைக்கிறார். கண்டிப்பான அப்பாவாக வெங்கடேஷ் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
வைஷாலி, ஸ்ரீ நிகிலா, ஐஸ்வர்யா ஆகிய தோழிகளின் பதற்றமான ஆனால் அக்கறையாக நடிப்பு படத்திற்கு பலம் சேர்கிறது. மற்றும் பூ ராமு உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.
நரேஷின் இசை படத்தின் கருவுடன் நன்றாக காட்சிகளை திறம்பட உயர்த்துகிறது.
வாசன் மற்றும் அன்பு ஆகியோரின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் பயணத்தையும் உணர்ச்சிகளையும் நேர்த்தியாக படம்பிடித்து சுவாரஸ்யம் ஏற்படுத்தியுள்ளது.
படத்தொகுப்பு – நாகூரான், சரவணன்,சண்டை – மணி படத்திற்கேற்ற பங்களிப்பு கச்சிதம்.
ஆரம்பக் காட்சிகள் மெதுவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் படம் வேகமெடுக்கிறது.இயக்குனர் சீனிவாசன் சாதி பிரச்சனையை அடிப்படையாக வைத்து காதல் கதையை நம்பகத்தன்மையுடன் கொடுத்துள்ளார். படத்தில் வசனமும் திரைக்கதையும் நன்றாக அமைந்துள்ளது.படத்தில் நடித்தவர்களிடம் இருந்து இயக்குனர் நல்ல நடிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார். கதாபாத்திரம் கடந்து செல்லும் பல்வேறு உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
மொத்தத்தில் திருவருள் ஜெகநாதன் தயாரித்துள்ள துரிதம் கைக்கு எட்டாத தூரத்தில் செல்லும் அவசர காதல் பயணம்.