தீர்க்கதரிசி திரைவிமர்சனம்: தீர்க்கதரிசி சுவாரஸ்யம் நிறைந்த புலனாய்வு விசாரணையில் வசீகரிக்கிறது | ரேட்டிங்: 3.5/5
ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ் குமார் தயாரிப்பில், பிஜி.மோகன் – எல்ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தீர்க்கதரிசி.
இதில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரன், தேவதர்ஷினி, மோகன் ராம், பூர்ணிமா பாக்யராஜ், மூணாறு ரமேஷ், மதுமிதா நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை- தயாரிப்பாளர் சதீஷ்குமார், இசை-பாலசுப்ரமணியன், ஒளிப்பதிவு-லக்ஷ்மன் பாடல்கள் – விவேக், விவேகா,எடிட்டர்-ரஞ்சித், கலை-ராஜு,சண்டை-ஜான் அசோக்,நடனம்-தினேஷ், மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ்.
சென்னையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் ஒரே சமயத்தில் ஒரு மர்ம மனிதன் குரலில் தொலைபேசி அழைப்பு வருகிறது. அடையாறில் நடக்கவிருக்கும் ஒரு பெண்ணின் மரணத்தை தடுக்குமாறு சொல்லிவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட, முதலில் அந்த அழைப்பை கேலிக்கூத்தாக நிராகரித்தாலும், சில மணி நேரங்களிலேயே அடையாறில் ஒரு பெண் இறக்க அந்தத் தகவலின் நம்பகத்தன்மையை காவல்துறை உணர்கிறது. அடுத்த நாளே அண்ணாசாலையில் ஏற்படக்கூடிய அபாயகரமான விபத்து குறித்து மர்மக்குரல் எச்சரிக்க காவல்துறை உஷாராக இருந்தும் விபத்து நடந்து விடுகிறது. இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், வழக்கை விசாரிக்கவும், மர்மகுரல் மனிதரின் அடையாளத்தை வெளிக்கொணரவும் துணை கமிஷனர் ஆதித்யாவை (அஜ்மல்) காவல் துறை நியமிக்கிறது. அதன் பின் வங்கியில் தவறான பண பரிமாற்றம், அடுக்குமாடி குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடி விபத்து, சிலை கடத்தல் என்று பல சம்பவங்கள் நடக்க சிலது தடுக்கப்பட்டாலும், தொடர்ந்து மர்மக்குரல் சொல்லும் தகவல்கள் உண்மையாக நடக்க அவரை தீர்க்கதரிசி என்று மக்கள் கொண்டாடுகின்றனர். சிலர் தீர்க்கதரிசி என்ற பெயரில் தவறுகள் நடை பெற காரணமாகிறது. காவல்துறையும், கட்டுப்பாடு அறை அதிகாரிகளும் எவ்வளவு முயன்றும் மர்ம குரல் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இறுதியில் அந்த மர்ம குரல் நபர் யார்? ஏன் காவல்துறையை எச்சரிக்கிறார்? இவருக்கும் நடக்கும் சம்பவங்களுக்கும் தொடர்பு என்ன? உண்மையான காரணம் என்ன? என்பதே தீர்க்கதரிசியின் கதைக்களம்.
சத்யராஜ் மர்மக்குரலில் படம் முழுவதும் காவல் கட்டுப்பாட்டு அறையை எச்சரிக்கும் தீர்க்கதரிசியாக வரும் கதாபாத்திரம். இறுதிக்காட்சியில் தான் தன்னுடைய முகத்தை காட்டி, பின்னணி கதையோடு தன் மகனுக்கு நியாயம் கிடைக்க புயலென புறப்பட்ட தந்தையாக தேர்ந்த நடிப்பில் மனதில் பதிகிறார். சிறிது நேரம் தோன்றினாலும், சத்யராஜ் தனது நடிப்பால் ஒரு தாக்கத்தை உருவாக்குகிறார். அவரது உரையாடல்கள் நன்கு வடிவமைக்கப்பட்டு சூழ்நிலைக்கு ஏற்றவையாக உள்ளது ஃப்ளாஷ்பேக் காட்சிகள்.
துணை கமிஷனராக அஜ்மல் குற்றங்கள்; தடுக்க எடுக்கும் நடவடிக்கையும், தன் அதிகாரத்தையும் மீறி நடக்கும் சம்பவங்களால் துவண்டாலும், இறுதியில் ஒரு திருப்பத்துடன் படைக்கப்பட்டிருக்கும் அவருடைய நெகடிவ் கேரக்டரை இறுதி வரை காண்பிக்காமல் நன்றாக பிரதிபலித்திருக்கிறார்.
அஜ்மலுக்கு உதவும் போலீஸ் அதிகாரிகளாக ஜெய்வந்த், துஷ்யந்த், போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரியாக தன் பங்கை சரியாக செய்து தீர்க்கதரிசி எச்சரிக்கும் காரணத்தை கண்டு பிடித்து சரியாக சொல்லும் முக்கியமான ரோலில் ஸ்ரீமன். மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன், தேவதர்ஷினி, மோகன் ராம், பூர்ணிமா பாக்யராஜ், மூணாறு ரமேஷ், மதுமிதா ஆகியோர் கதைக்கேற்ற பின்பலம்.
கட்டுப்பாட்டு அறையின் காட்சிகள் திறமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, சம்பவங்களின் பின்னணியும், நடக்கும் விதங்களும் நம்பகத்தன்மையோடும் லக்ஷ்மனின் ஒளிப்பதிவு நேர்த்தியாகவும் சுவாரசியமாகவும் உள்ளது.
பாலசுப்ரமணியன் பின்னணி இசை கதை முழுவதும் மனநிலையை வெற்றிகரமாக பயணித்து காவல்துறையை பெருமைப்படுத்தும் ஒரு பாடலுடனும் கொடுத்திருப்பது சிறப்பு.
எடிட்டர்-ரஞ்சித், கலை-ராஜு,சண்டை-ஜான் அசோக்,நடனம்-தினேஷ் ஆகியோர் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
எதிர்காலத்தில் நிகழப்போகும் பல்வேறு குற்றங்கள் மற்றும் விபத்துகள் குறித்து அறிய ஒரு அந்நியன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கிறான். அவரது தகவலின் அடிப்படையில் காவல் துறை ஒரு விபத்தை நிறுத்த முடியுமா மற்றும் அவர்களின் மர்மமான தகவல் தெரிவிப்பவர் யார் என்பதைக் கண்டறிய முடியுமா? இந்த கதைக்களத்தை வைத்து நேர்த்தியான திரைக்கதையிலும், விறுவிறுப்பு குறையாமல் எதிர்பாராத சில திருப்பங்களை ஒருங்கிணைத்து சிறந்த புலனாய்வு திரில்லராக பட்ஜெட் கட்டுப்பாட்டுகள் இருந்தாலும் சிறப்பாக தந்திருக்கிறார்கள் இயக்குனர்கள் பிஜி.மோகன் – எல்ஆர்.சுந்தரபாண்டி. கதாநாயகி இல்லாத படம் என்றாலும் கதையையே மையமாக வைத்து அசத்தலுடன் கொடுத்துள்ளனர் இயக்குனர்கள்.
மொத்தத்தில் ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ் குமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தீர்க்கதரிசி சுவாரஸ்யம் நிறைந்த புலனாய்வு விசாரணையில் வசீகரிக்கிறது.