தீராக்காதல் திரைவிமர்சனம் : தீராக் காதல் என்றுமே புகைந்து கொண்டிருக்கும் காவியக்காதல். | ரேட்டிங்: 3.5/5
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் தீராக் காதல் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரோகின் வெங்கடேசன்.
இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- கதை மற்றும் திரைக்கதை- இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் ஜி.ஆர். சுரேந்தர்நாத், ஒளிப்பதிவு – ரவிவர்மன் நீலமேகம், இசை – சித்து குமார், கலை இயக்கம்- தங்கராஜ் , படத்தொகுப்பு- பிரசன்னா ஜி.கே, வசனம் -ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஒலி வடிவமைப்பு- உதயக்குமார், நிர்வாகத் தயாரிப்பாளர் – சுப்ரமணியன் நாராயணன், தலைமைப் பொறுப்பு- ஜி.கே.என்.தமிழ்குமரன், மக்கள் தொடர்பு யுவராஜ்.
கௌதம் (ஜெய்) மனைவி வந்தனா (ஷிவதா), மகள் ஆர்த்தியுடன் (வ்ரிதி விஷால்) சென்னையில் வசிக்கிறார். வேலை விஷயமாக ரயிலில் மங்க@ர் செல்லும் போது தன் முன்னாள் காதலி ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) சந்திக்கிறார் கௌதம்.இருவரும் தங்கள் பழைய நினைவுகள், காதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சந்தோஷமாக இருக்கின்றனர். இருவரும் சென்னைக்கு திரும்பும் போது சந்திக்க கூடாது என்ற முடிவுடன் தங்கள் வீட்டிற்கு திரும்புகின்றனர். கௌதம் வேலையில் பிஸியாக இருக்கும் மனைவி வந்தனாவிற்கு உதவிகள் செய்து மகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை போக்குகிறார். ஆனால் ஆரண்யாவின் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கிறது.ஆரண்யாவின் கொடுமைக்கார கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் பிரிந்து விடுகின்றனர். அதன் பின் ஆரண்யா கௌதமை தொடர்பு கொண்டு மன ஆறுதல் பெற முயற்சிக்கிறார். முதலில் ஆதரவாக இருக்கும் கௌதம் தன்னுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும் என்றெண்ணி ஆரண்யாவுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்கிறார். இதனால் கோபமாகும் ஆரண்யா கௌதமிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். இறுதியில் கௌதம் ஆரண்யாவின் வற்புறுத்தலுக்கு இணங்கினாரா? கௌதம் குடும்பத்துடன் மீண்டும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கௌதமாக ஜெய் பொறுப்புள்ள குடும்ப தலைவனாகவும், அன்புள்ள அப்பாவாகவும், பாசமுள்ள கணவனாகவும், காதலிக்கு தோல் கொடுக்கும் தோழனாகவும் சிறப்பாக தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். தன் இனிமையான நினைவுகள், நிகழ்காலத்தில் மாறுபடும் வாழ்க்கையை நினைத்து தடுமாறினாலும், பின்னர் தன் குடும்பம் தான் முக்கியம் என்பதையுணர்ந்து, காதலியிடம் விலகும் நேரத்திலும் பொறுமையும், நிதானமும் மிக்க சிறந்த மனிதனாக கண் முன்னே தெரிகிறார்.
ஆரண்யாவாக ஐஸ்வர்யா ராஜேஷ், குடும்ப வன்முறையில் சிக்குண்டு தவிக்கும் மனைவியாக, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதும், தன் முன்னாள் காதலனை கண்டவுடன் புது தெம்பும், தைரியமும் வந்து தன் கணவனை விட்டு பிரிவதும், காதலனின் வாழ்க்கையில் குறுக்கிடும் போது ஏற்படும் சிக்கல்களை இறுதியில் புரிந்து கொண்டு விலகுவதும், காதலி இறுதி வரை காதலியாகத்தான் இருப்பாள் என்பதை நிரூபிக்கும் வகையில் தத்ரூபமான ஆழமான நடிப்பால் கவர்கிறார்.
கொடுமைக்கார கணவன் பிரகாஷாக அம்ஜத் கான் சில காட்சிகள் வந்தாலும் அதட்டல், உருட்டல் பேச்சும், அடி, உதை என்று மனைவியை கொடுமைப்படுத்தும் காட்சிகளில் பயமுறுத்துகிறார். இந்த கதாபாத்திரத்தில் யதார்த்தமாக அனைவரும் வெறுக்கும் வகையில் நடிப்பை வழங்கியுள்ளார்.
ஜெய்யின் மனைவியாக ஷிவதா அன்பான, அக்கறையுள்ள அழகான மனைவியாக மிக இயல்பாக நடித்து வந்தனா கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து இருக்கிறார்.
மேலும் க்ளைமாக்ஸில் முக்கிய பங்களிப்பை வழங்கி சுட்டிக் குழந்தை ஆர்த்தியாக வ்ரிதி விஷால் கவர்கிறார்.
ஜெய்யின் நண்பராக வரும் அப்துல் லீ நல்ல அறிவுரையும் தடம் மாறும், தடுமாறும் நண்பனுக்கு வழிகாட்டியாக கூடவே காமெடியையும் வழங்கியுள்ளார்.
மனதிற்கு இனிமையான இளமையான காட்சிகள் காதல் கதைக்கு தேவையானவற்றை ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில் வழங்கியுள்ளார். சுவாரஸ்யத்துடன் ரசிக்க வைக்கும் சுரேந்திரநாத்தின் வசனங்களும், சித்துகுமாரின் மனதை மயக்கும் பின்னணி இசையும் கதையை நகர்த்த உதவுகின்றன.
பிரிந்த முன்னாள் காதலர்கள் திடீரென்று சந்தித்து கொண்டால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், தடுமாற்றங்கள், சிக்கல்கள் ஆகியவற்றை சமாளிக்க முடியாமல் திணறும் போது எடுக்கும் முடிவுகள் கம்பி மேல் நடப்பதற்கு சமம் என்பதை சிறப்பான காட்சிகள் மூலம் தடம் மாறாமல் திணறாமல் குழந்தையின் வசனம் மூலம் கச்சிதமாக முடித்துள்ளார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன்.
மொத்தத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் தீராக் காதல் என்றுமே புகைந்து கொண்டிருக்கும் காவியக்காதல்.