தி ரோட் திரைப்பட விமர்சனம் : ‘தி ரோட்’ சாலை பயணத்தின் அபாயத்தை விவரித்து உஷார் படுத்தும் எச்சரிக்கை மணி | ரேட்டிங்: 3/5

0
305

தி ரோட் திரைப்பட விமர்சனம் : ‘தி ரோட்’ சாலை பயணத்தின் அபாயத்தை விவரித்து உஷார் படுத்தும் எச்சரிக்கை மணி | ரேட்டிங்: 3/5

ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்து வழங்கும் ‘தி ரோட்’ திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் வசீகரன்.

இதில் த்ரிஷா,”டான்சிங் ரோஸ்” ஷபீர்,சந்தோஷ் பிரதாப்,மியா ஜார்ஜ்,விவேக் பிரசன்னா,எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை -சாம் சி.எஸ்,ஒளிப்பதிவு -கே.ஜி.வெங்கடேஷ், படத்தொகுப்பு –ஏ.ஆர்.சிவராஜ், கலை -சிவாயாதவ், சண்டை பயிற்சி -பீனிக்ஸ் பிரபு ,ஸ்டில்ஸ் -அமீர், ஒப்பனை -எஸ். ரவி ,ஆடை வடிவமைப்பு -சைதன்யா ராவ், உடைகள் -நடராஜ்,நிர்வாக தயாரிப்பு – ஏ.ஜெய் சம்பத் மற்றும் சுப்ரமணி தாஸ்,தயாரிப்பு உறுதுணை – இரணியல் கோணம்.ஆ.து. ராஜன், ஏரக செல்வன் மற்றும் கணேஷ் கோபிநாத், மக்கள் தொடர்பு -டைமண்ட் பாபு

ஒரு குறிப்பிட்ட சாலையில் தொடர் விபத்துக்கள் நடக்கிறது. இதன் அடிப்படையில் கதை தொடங்குகிறது. முதல் கதையில் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் காரில் பயணிக்கும் ஒரு ஜோடி சண்டையிட்டு கொண்டு வர எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. அதற்கு காரணம் கவனமாக திட்டமிட்ட விபத்தில் சிக்கி கடுமையான குற்றவாளிகளின் கைகளில் ஒரு கொடூரமான முடிவை சந்திக்கிறது அந்த ஜோடி. அந்த விபத்தை விசாரிக்கும் போலீஸ் சாலை விபத்தாக பதிவு செய்கிறது. அதன் பின் கதைக்களம் த்ரிஷாவின் வாழ்க்கையை காட்சிப்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண் மீரா (த்ரிஷா) தன் கணவர் மற்றும் மகனுடன்  சாலை பயணத்திற்கு செல்ல திட்டமிடுகின்றனர். ஆனால் மீராவின் கர்ப்பத்தால் மருத்துவரின் அறிவுறுத்தல்படி பயணத்தை தவிர்த்து ஆனந்த் (சந்தோஷ் பிரதாப்) மற்றும் மகன் கவின் செல்கின்றனர். கணவனும் மகனும் இந்த திட்டமிட்ட விபத்துகளில் ஒன்றில் பலியாக, மீராவின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி சோகத்தை ஏற்படுத்துகிறது. ஒருபுறம், மீரா தனது இழப்பை சமாளித்து வரும் போது, விபத்து திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து, கான்ஸ்டபிள் சுப்ரமணி (எம்.எஸ்.பாஸ்கர்) மற்றும் அவரது தோழி அனு (மியா ஜார்ஜ்) ஆகியோரின் உதவியுடன் யார் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

இரண்டாவது கதை மதுரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் மாயா (ஷபீர் கல்லாரக்கல்) என்ற கல்லூரிப் பேராசிரியர், ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும் கடின உழைப்புக்கும் பெயர் பெற்றவர். கல்லூரியில் ஒரு மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட வீண் பழி சுமத்தப்பட்டு அவமானப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது வாழ்க்கை இருண்டு போகிறது. அதன் பின் ஆதரவாக இருந்த தந்தையின் இழப்பு பேரடியாக விழ மாயா நண்பர்கள் உதவியுடன் வாழ்க்கை விரக்தியாக பயணிக்கிறார். அதன் பின் நடக்கும் திடீர் சம்பவம் மாயாவை மாற்றிவிடுகிறது. பணம் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்து முன்னேறி வருகிறார். சம்பந்தமேயில்லாத இந்த இரண்டு கதைகளும் ஒன்றாக இணையும் போது பயங்கரமான விபத்துக்களுக்கு பின்னால் நடக்கும் பெரிய நெட்வொர்க் என்ன? மீரா தன் குடும்பத்தை இழந்த விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா? அவர்களை பழி வாங்கினாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

த்ரிஷா மீராவாக குடும்பத்தை இழந்த சோகம், தனி ஆளாக விபத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க புறப்படும் தைரியம், அதன் பின்னணியில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து அதை எதிர்கொள்வது என்று படம் முழுவதும் தன் திறமையான நடிப்பால் தனித்து நிற்கிறார். ஆனால் எந்த ஒரு பக்கபலமும் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கி கொடிய குற்றம் செய்தவர்களை பிடிப்பது நம்பமுடியாததாக உள்ளது.

ஷபீர் கல்லரக்கல் பேராசிரியர் மாயாவாக அழுத்தமான நடிப்பு, தன் மேல் கலங்கம் ஏற்பட்டவுடன் அதனை தாங்கி கொள்ளாமல் துவண்டு விழும் தருணங்களும், தன்னை ஏளனமாக பேசியவர்கள் எதிரில் ஜெயித்து காட்டும் ஆணவமும், அவரிடம் இருக்கும் புதிரான மர்மங்கள் என்ன என்பதை பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுத்தி ஒரு மாறுபட்ட நடிப்பை வழங்கி சைலன்ட் கில்லராக படத்தில் ஜொலிக்கிறார்.

மீராவின் தோழியாக நடித்திருக்கும் மியா ஜார்ஜும் இந்தப் படத்தில் முக்கியமான தருணங்களில் உடன் இருக்கிறார்.சந்தோஷ் பிரதாப், விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோரின் நடிப்பு பாராட்டத்தக்கது.

சாம் சி.எஸ் இசை, கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.சிவராஜ் படத்தொகுப்பு, சிவா யாதவ் கலை மற்றும் ஃபீனிக்ஸ் பிரபு சண்டை பயிற்சி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;களின் பங்களிப்பு பயண கதைக்களத்திற்கு ஏற்றவாறு உத்வேகத்தை வழங்குகின்றனர்.

சாலை விபத்துக்களின் பின்னணியில் பணத்திற்காகவும், நகைக்காகவும் நடக்கும் சூழ்ச்சிகள், மர்மங்களை வித்தியாசமான அணுகுமுறையோடு இரண்டு கதைகளை இணைத்து ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்து சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்துள்ளார் இயக்குனர் அருண் வசீகரன்.இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து கொஞ்சம் கவனமாக செல்லவும், வழியில் தகவல்களை பிறருக்கு தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்வதையும் சூசகமாக சொல்லி ஆபத்தை தவிர்;க்கும் வழியை கையாளுமாறு சொல்லியிருப்பதில் கவனம் பெறுகிறார்.

மொத்தத்தில் ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்து வழங்கும் ‘தி ரோட்’ சாலை பயணத்தின் அபாயத்தை விவரித்து உஷார் படுத்தும் எச்சரிக்கை மணி.