திருச்சிற்றம்பலம் விமர்சனம் :  திருச்சிற்றம்பலம் பட்டையைக் கிளப்பும் | ரேட்டிங்: 3.5/5

0
586

திருச்சிற்றம்பலம் விமர்சனம் :  திருச்சிற்றம்பலம் பட்டையைக் கிளப்பும் | ரேட்டிங்: 3.5/5

நடிப்பு – திருச்சிற்றம்பலம் ஜூனியர் தனுஷ் (பழம்), ஷோபனாவாக நித்யா மேனன், பழமின் சிறந்த தோழி, திருச்சிற்றம்பலம் சீனியர் – பழம் தாத்தாவாக பாரதிராஜா, பழத்தின் அப்பா இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, முனீஷ்காந்த் ராமதாஸ், அறந்தாங்கி நிஷா, ஸ்ரீரஞ்சினி, மு.ராமசாமி, ஸ்டண்ட் சில்வா, விஜே பப்பு. பழம் அம்மாவாக ரேவதி, நீலகண்டனின் மனைவி. (கேமியோ தோற்றம்)

ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்

படத்தொகுப்பு – பிரசன்னா

இசை – அனிருத்

தயாரிப்பு – சன் பிக்சர்ஸ் நிறுவனம்

இயக்கம் – மித்ரன் ஆர் ஜவஹர்

மக்கள் தொடர்பு – ரியாஸ் அகமது

சின்ன அலட்சியம் காரணமாக நிகழ்ந்த விபத்தில் அம்மாவையும், தங்கையையும் இழந்த பழம் (திருச்சிற்றம்பலம் ஜூனியராக தனுஷ்) இந்த விபத்துக்கு அப்பாவான இன்ஸ்பெக்டர் நீலகண்டன் (பிரகாஷ்ராஜ்) தான் காரணம் என்று கூறி அப்பா பிரகாஷ்ராஜுடன் பேசாமல் அவ்வப்போது சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் மகன் பழம் (திருச்சிற்றம்பலம் ஜூனியர் தனுஷ்), தாத்தா திருச்சிற்றம்பலம் சீனியருடன் (பாரதிராஜா) அரவணைப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். பள்ளி கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக வேலை செய்யும் தனுஷை நண்பர்கள் பலரும் பழம் பழம் என்று கிண்டல் செய்கின்றனர். வெளியில் எது நடந்தாலும் தனது சிறுவயது தோழியான ஷோபனாவிடம் (நித்யா மேனன்)  பகிர்ந்து கொள்கிறார் பழம். அவர் வாழ்க்கையில் அனுஷா (ராஷி கண்ணா) மற்றும் ரஞ்சனி (ப்ரியா பவானி சங்கர்) ஆகிய இரண்டு பெண்களிடம் அவர் காதல் வயப்படுகிறார்.பழத்தின் காதலுக்கு அவரது தோழியான ஷோபனா உதவுகிறார். இந்நிலையில் திடீரென பிரகாஷ்ராஜ்ஜிற்கு பக்கவாதம் வந்துவிட, அப்பாவுக்கு உற்ற துணைவனாக மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் பழம். தான் காதலித்து இரு பெண்களும் தன்னை காதலிக்கவில்லை என்று புலம்பும் பழத்திடம், அவரது தாத்தா திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா)சிறு வயதில் இருந்து தோழியாக இருக்கும் ஷோபனாவை கை காட்டுகிறார். அதற்கு பின் என்ன நடக்கிறது? தனது காதலை ஷோபனாவிடம் கூறினாரா? அப்பாவுக்கும் – தாத்தா திருச்சிற்றம்பலம் மற்றும் பிள்ளைக்குமான உறவு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிம்பிளான கதையில் அலட்டிக்கொள்ளாத நடிப்பு, தனித்த உடல் மொழி, என பழமாக இளமையான தனுஷை பார்க்க முடிகிறது. நகைச்சுவை, எமோஷனல் என அவரது தாத்தா திருச்சிற்றம்பலத்துடன் (பாரதிராஜா) இருவரும் ஸ்கோர் செய்கிறார்கள்.

படத்தின் ஹைலைட் இயக்குனர் பாரதிராஜா தான். ஹ்யூமர், நக்கல், லொள்ளு என அனைத்திலும் நம்மை ரசிக்க வைத்து கவர்ந்து ஈர்க்கிறார் இயக்குனர் இமயம்.

இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக தனுஷின் தந்தையாகவும் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் அனைவரையும் சிறந்த நடிப்பால் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

தனுஷின் தோழியாக நடித்துள்ள நித்யா மேனனுக்கு முக்கியமான கதாபாத்திரம். படம் முழுவதும் தனுஷ_டன் பயணிக்கிறார். பலமான ஷோபனா கதாபாத்திரத்திற்கு சிறந்த நடிப்பின் மூலம் கூடுதல் பலம் சேர்த்துள்ளார். ஹாட்ஸ்அப் நித்யா மேனன்.

ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் இருவருக்கும் குறைவான காட்சிகள் என்றாலும் மனத்தில் நிற்கிறார்கள். முனீஷ்காந்த் ராமதாஸ், அறந்தாங்கி நிஷா, ஸ்ரீரஞ்சினி, மு.ராமசாமி, ஸ்டண்ட் சில்வா, விஜே பப்பு, பழம் அம்மாவாக ரேவதி, நீலகண்டனின் மனைவி (கேமியோ தோற்றம்) என அனைவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்கள்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு நல்ல உறுதுணையாக உள்ளது.

ஏற்கனவே வந்த கதையாக இருந்தாலும் தேவையில்லாத சஸ்பென்ஸ், பில்டப், பிரம்மாண்டம், ஆபாசம் எதுவுமின்றி ஒரு யதார்த்தக் காதல் பிளஸ் குடும்பக் கதையை அழகாக முன்வைத்து திரைக்கதை அமைத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார் இயக்குநர்  மித்ரன் ஆர் ஜவஹர்.

மொத்தத்தில் திருச்சிற்றம்பலம் பட்டையைக் கிளப்பும்.