தலைமைச் செயலகம் வெப் தொடர் விமர்சனம் : தலைமைச் செயலகம் விசாரணை வளையத்திற்குள் சிக்கும் பெண்களின் சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் சாம்ராஜ்ஜியத்தின்; ஆடுபுலிஆட்டம்

0
447

தலைமைச் செயலகம் வெப் தொடர் விமர்சனம் : தலைமைச் செயலகம் விசாரணை வளையத்திற்குள் சிக்கும் பெண்களின் சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் சாம்ராஜ்ஜியத்தின்; ஆடுபுலிஆட்டம்

ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் தயாரித்து தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் எழுதி இயக்கியிருக்கும் வெப்தொடர்  ‘தலைமைச் செயலகம்’. தமிழக அரசியல் பின்னணியில், எட்டு எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மே 17-ம் தேதி முதல், ஜீ5 தளத்தில் வெளிவந்துள்ளது.

இதில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி , பரத், ரம்யா நம்பேசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்ஜிஎம், சந்தான பாரதி, கவிதா பாரதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு : வைட் ஆங்கிள் ரவிசங்கர், இசை: ஜிப்ரான், கூடுதல் பின்னணி ஸ்கோர்: சைமன் கே கிங், கலை இயக்குனர்: வி.சசிகுமார்,ஆக்ஷன் : டான் அசோக், படத்தொகுப்பு : ரவிக்குமார் எம், ஒலி வடிவமைப்பு : ராஜேஷ் சசீந்திரன், மிக்சிங் : கவி அருண், தயாரிப்பாளர்கள்- பூஜா சரத்குமார், கிருஷ்ணா சந்தர் இளங்கோ,லைன் புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் – பிரபாஹர் ஜே,மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ்

முதல் தொடர் ஆரம்பிக்கும் போது ஜார்கண்ட்டில் ஒரு இளம் பெண் துர்காவை ஆண்கள் பலர் சித்ரவதை செய்ய அடிபட்டு படுத்திருக்கும் நிலையில் இருக்கும் அந்த மலைகிராமத்துப்பெண் வெகுண்டு எழுந்து அனைவரையும் வெட்டி சாய்த்து அங்கிருந்து தப்பித்து ஒடுவது போல் காட்டப்படுகிறது. பல ஆண்டுகள் கடந்ததால் அந்த படுகொலைகளை செய்த பெண்ணை கண்டுபிடிக்க நீதிமன்றம் விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கிறது. அதன் பின்னர் மற்றோரு கோணத்தில் கதை பயணிக்கிறது.15 ஆண்டுகள் கழித்து தமிழக முதல்வராக இருக்கும் அருணாச்சலம் (கிஷோர்) ஊழல் குற்றச்சாட்டு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்க அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகிறது. முதல்வரை காப்பாற்ற பல முயற்சிகள் செய்தும் பலனில்லாமல் போக முதல்வர் பதவியை கைப்பற்ற கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமாரும் ஆசைப்படுகிறனர். இந்த சூழலில், கிஷோரின் நெருங்கிய தோழியும் கட்சி ஆலோசகருமான முதல்வருக்கு நிழலாக இருக்கும் கொற்றவையும் (ஷ்ரேயா ரெட்டி) முதல்வரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிகள் செய்கிறார். தனக்கு பிறகு ஆட்சியில் யாரை அரசியல் வாரிசாக அமர்த்தலாம் என்கிற சிந்தனையில் முதல்வர் கிஷோர் உள்ள நிலையில், பல குழப்பமான அரசியல் சூழல் ஏற்படுகிறது. இதற்கிடையே சிபிஐ அதிகாரி நவாஸ் கான் (ஆதித்யா மேனன்), இந்த ஜார்க்கண்ட் கொலை வழக்கை ஆராய்கிறார். அதே வேளையில், பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் (பரத்) மற்றும் தர்ஷா குப்தா  இருவரும் தீவிர விசாரணையைத் தொடங்குகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் திடுக்கிடும் வகையில் பல கொலைகளை செய்து வந்த துர்கா யார்? அவருக்கு தமிழக அரசியலில் தொடர்பு உள்ளதா? ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முதல்வருக்கு தண்டனை வழங்கப்பட்டதா? இல்லையா? அடுத்த முதல்வர் யார்? இரண்டு கதைகளும் இணைக்;கும் முக்கிய புள்ளி யார்? போன்ற இடைவிடாத பல கேள்விகளுக்கு ஜீ5 இணையத்தில் 8 எபிசோடுகளாக வெளியாகி இருக்கும் தலைமைச் செயலகம் வலைதளத் தொடர் பதில் சொல்லும்.

தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான, நடை, உடை, பாவனை, வசனம் என்று அழுத்தமான கதையின் முக்கிய முதல்வர் கதாபாத்திரத்தில் கிஷோர் அசத்தியுள்ளார்.

எழுத்தாளர், தன்னார்வலர், முதல்வரின் அபிமானம் பெற்ற கொற்றவை கதாபாத்திரத்தில் ஷ்ரேயா ரெட்டி அரசியல் சாதுர்யம், ஆழ்ந்த புலமை, நெத்தியடி அரசியல் சார்ந்த முடிவுகள், சாமர்த்தியம், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை, எந்த நேரத்தில் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டும் என்ற அரசியல் தந்திரம் தெரிந்த குள்ளநரியாக ஷ்ரேயா ரெட்டி வசனம், தீர்க்கமான பார்வை என்று தன் பாதையில் இடர்பாடுகளை கடந்து செல்லும் திறமையான பெண்ணாக மிரட்டியுள்ளார்.

போலீஸ் அதிகாரியாக நடித்த பரத், சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனன், ரம்யா நம்பேசன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்ஜிஎம், சந்தான பாரதி, கவிதா பாரதி ஆகியோர் கதையோடு ஒன்றி அதற்கான உழைப்பை வழங்கி உள்ளனர்.

ஒளிப்பதிவு வைட் ஆங்கிள் ரவிசங்கர், இசை ஜிப்ரான், கூடுதல் பின்னணி ஸ்கோர் சைமன் கே கிங், கலை இயக்குனர் வி.சசிகுமார், ஆக்ஷன் டான் அசோக், படத்தொகுப்பு ரவிக்குமார் எம், ஒலி வடிவமைப்பு ராஜேஷ் சசீந்திரன், மிக்சிங் கவி அருண் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் அபரிதமான திறமையால் எட்டு வெப் தொடர்களின் நம்பகத்தன்மையை மெருகேற்றியுள்ளனர்.

இரண்டு வௌ;வேறு பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் எப்படி தமிழ்நாட்டின் அரசியல் களப் பின்னணியில் வந்து முடிவடைகிறது என்பதை தீவிரமாக திரைக்கதையமைத்து எழுதி இயக்கியுள்ளார் வசந்தபாலன். அரசியல் களத்தில் முதல்வர் பதவிக்கு வர எத்தகைய சூழ்ச்சி, தந்திரங்கள் செய்து கைப்பற்ற முயல்கிறார்கள் என்பதை அக்குவேறு ஆணி வேறாக அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள்,  அழுத்தமான உரையாடல்களுடன் திரைக்கதை அமைத்து ஆர்ப்பாட்டம் நிறைந்த விசாரணைகளுடன் எட்டு எபிசோடுகளாக பரபரப்புடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

மொத்தத்தில் ராடான் மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் ராதிகா சரத்குமார், ஆர்.சரத்குமார் தயாரித்து எட்டு எபிசோடுகளாக ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கும் தலைமைச் செயலகம் விசாரணை வளையத்திற்குள் சிக்கும் பெண்களின் சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் சாம்ராஜ்ஜியத்தின்; ஆடுபுலிஆட்டம்.