தலைநகரம் 2 சினிமா விமர்சனம் : தலைநகரம் 2 ஆக்ஷன் பிரியர்களுக்கான ரைட் சாய்ஸ் | ரேட்டிங்: 2.5/5
ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் எஸ்.எம்.பிரபாகரன், துரை வி இசட் தயாரித்திருக்கும் தலைநகரம் 2 படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் துரை வி.இசட்.
இதில் சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: இணை தயாரிப்பாளர்: மதுராஜ், ஒளிப்பதிவு: இ.கிருஷ்ணசாமி,இசை: ஜிப்ரான், எடிட்டிங்: ஆர்.சுதர்சன், கலை: ஏ.கே.முத்து, ஸ்டண்ட்: டான் அசோக்,உரையாடல்: மணிஜி, ஒலி வடிவமைப்பு: விஜய் ரத்தினம், ஒலிக்கலப்பு: ஏ.எம்.ரஹ்மத்துல்லா, ஒலி பொறியாளர்: கே.ஜெகன், மக்கள் தொடர்பு: சதீஷ் (எய்ம்).
தென் சென்னை நஞ்சுண்டா, மத்திய சென்னை வம்சி, வட சென்னை மாறன் ஆகிய பகுதிகள் மூன்று பெரிய ரவுடிகள் வசம் இருக்க பகையும் கூடவே இருக்கிறது. நஞ்சுண்டா அடிஆட்கள் வம்சியின் ஆளான நடிகை சித்தாராவை (பாலக் லால்வானி) கடத்தி வர மயக்க நிலையில் நடிகையை நஞ்சுண்டா பாலியல் வன்கொடுமை செய்து அனுப்பி விடுகிறான். இதனால் கொதிப்படையும் நடிகை சித்தாரா வம்சியிடம் நஞ்சுண்டாவை பழி வாங்குமாறு நச்சரிக்கிறாள். ஆனால் வம்சியால் தகுந்த சாட்சியில்லாமல் நஞ்சுண்டாவை பழி வாங்க முடியாமல் தடுமாறுகிறான். நஞ்சுண்டாவோ இந்த சம்பவத்தை திசை திருப்ப மாறனையும் வம்சியையும் குழப்பி பழைய ரவுடி ரைட்டை சிக்க வைத்து விடுகிறான். அடிதடியிலிருந்து கொஞ்ச காலம் விலகி இருக்கும் ரைட் இந்த மூன்று ரவுடிகளால் பல விதங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக நெருங்கிய நண்பராக மாணிக் பாய் (தம்பி ராமையா) மற்றும் அவரது மகளையும் துன்புறுத்துகின்றனர். இதில் மாணிக் பாய் இ;றக்க கோபத்தில் இந்த மூவரையும் எதிர்க்க மீண்டும் பழைய ரைட்டாக களம் இறங்குகிறார். இந்த பழி வாங்குதலில் ரைட் வெற்றி பெற்றாரா? ரைட்டுக்கு நடிகை சித்தாரா ஏன் உதவி செய்கிறார்? சித்தாராவின் பழி வாங்க நினைக்கும் எதிரிகள் அழிந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சுந்தர்.சியின் தலைநகரம் முதல் பாகத்தில் வட சென்னை ரவுடியாக அனைவரையும் தன்னுடைய ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விடுவார். இந்த தலைநகரம் இரண்டாம் பாகத்தில் மூன்று ரவுடிகளை பந்தாடும் இறுக்கமான கவலை தோய்ந்த முகத்தோடு கம்பீரமான நடையுடன் பழைய ரைட்டாக வலம் வர முயற்சித்துள்ளார். சண்டைக்காட்சிகளிலும், சென்டிமெண்ட் காட்சிகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.
பல்லக் லால்வானி திரையில் கவர்ச்சியாகவும் அழகாகவும் நடிகை சித்தாராவாக தோன்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை பழி வாங்க துடிக்கும் ஆக்ரோஷமான பெண்மணியாக நடிப்பின் மூலம் கவனிக்க வைக்கிறார்.
நடிகர் தம்பி ராமையா, தம்பிராமையாவின் மகளாக வரும் ஆயிரா, வில்லன்கள் ‘பாகுபலி’ பிரபாகரன், ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ், என அனைவரும் படத்தின் பரபரப்பான காட்களுக்கு இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
சண்டை டான் அசோக் தான் கதையின் நாயகன் என்று சொல்லலாம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நீடிக்கும் சண்டை காட்சிகள் அதற்கு உத்திரவாதம். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி ஆக்ஷன் படத்திற்கேற்ற காட்சிக் கோணங்களில் மிளிர்கிறார்.அத்துடன் ஜிப்ரானின் பின்னணி இசையும் ஒன்று சேர்ந்து கேங்ஸ்டர் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.
சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடித்து 2006-ல் வெளியான தலைநகரம் திரைப்படத்தின் தொடர்ச்சி. தலைநகரம் 2 வழக்கமான கேங்ஸ்டர் கதையில் பழைய ரவுடி புதிய ரவுடிகளை போட்டுத்தள்ளி மீண்டும் புதிய கேங்ஸ்டராக உருவெடுப்பதை திரைக்கதையாக வைத்து வி இசட் துரை இயக்கியுள்ளார். திரைக்கதையில் மூன்று வித ரவுடிகளை விதவிதமாக காட்டி வன்முறை காட்சிகளுடன் அதிக ஆக்ஷன் காட்சிகளை கலந்து செண்டிமெண்ட் காட்சிகள் கொஞ்சம் இடம்பெற்று நகைச்சுவை கலக்காமல் முழுக்க முழுக்க ஒரு ரவுடிசம் கதையை ரத்தம் தெரிக்க கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் வி.இசட் துரை.
மொத்தத்தில் ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் எஸ்.எம்.பிரபாகரன், துரை வி இசட் தயாரித்திருக்கும் தலைநகரம் 2 ஆக்ஷன் பிரியர்களுக்கான ரைட் சாய்ஸ்.