தக்ஸ் விமர்சனம் : ரசிக்கக்கூடிய வித்தியாசமான அனுபவத்தை தரும் சிறையிலிருந்து தப்பிக்கும் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
438

தக்ஸ் விமர்சனம் : ரசிக்கக்கூடிய வித்தியாசமான அனுபவத்தை தரும் சிறையிலிருந்து தப்பிக்கும் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபூ ஜியோ ஸ்டூடியோஸ் சார்பில் மும்தாஜ்.எம் இணைந்து தயாரித்து வழங்கும், தக்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நடன இயக்குனர் பிருந்தா.
இதில் ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், அப்பனி சரத், முனிஷ்காந்த், அனஸ்வரா ராஜன், பி.எல்.தேனப்பன், அருண் மற்றும் அரவிந்த் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசாமி, இசை : சாம். சி. எஸ்,எடிட்டிங் : பிரவீன் ஆண்டனி, நடன இயக்குனர் – பிருந்தா, உடை- மாலினி  கார்த்திகேயன், தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஜோசப் நெல்லிக்கல், மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், சிவா (ஏய்ம்)

பட்டதாரியான சேது (ஹிருது ஹாரூன்)  தன் தந்தை இறந்தவுடன் அவர் வேலை பார்த்த பிரபல ரவுடி அண்ணாச்சியிடம் (தேனப்பன்) அக்கவுண்டன்ட்டாக வேலையில் சேர்கிறான். அனாதை இல்லத்தில் உள்ள ஊமைப் பெண்ணான அனஸ்வர ராஜனை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். ஆனால் அண்ணாச்சியிடம் வேலை செய்யும் ரவுடி ஒருவன் அனஸ்வர ராஜனை தொல்லை கொடுக்க அதனால் கொதிப்படையும் சேது  ரவுடியை கொலை செய்து விட்டு வரும் வழியில் தன் நண்பனின் வற்புறுத்தலால் அண்ணாச்சியில் பணம், சொத்து பத்திரங்களை எடுத்துக் கொண்டு நண்பனிடம் ஒப்படைத்து விட்டு அனஸ்வர ராஜனுடன் கேரளாவிற்கு தப்பித்துச் செல்கிறான். அங்கே காதலர்களை தேடி அண்ணாச்சி அடியாட்களை அனுப்ப  சேதுவை பிடித்து வருகின்றனர்.சேதுவிடம் சிக்கிக்கொண்ட பணத்தையும், பத்திரத்தையும் மீட்க கொலை வழக்கை போட்டு பத்து ஆண்டுகள் சிறைவாசத்துடன் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்படுகிறான்.  அந்த சமயத்தில், சரியானதொரு தருணத்திற்காக காத்திருக்கும் சிறைவாசிகள் சிலர் காவல்துறையை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயலும் போது, குறுக்கே சேது நுழைந்து அவர்களின் திட்டத்தை முறியடிக்கிறான். நாகர்கோவில் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக இருக்கும் துரையின் (பாபி சிம்ஹா) சிறை அறையில் அடைக்கப்படுகிறான்; சேது. அதே அறைக்கு சில்லறைத் திருடர் மருதுவும் (முனீஸ்காந்த்) இன்னும் சில கைதிகளும் வந்து சேர்கின்றனர்.ஒருபுறம் ஜெயிலர் ஆரோக்கிய தாஸ்ஸின் (ஆர்.கே.சுரேஷ்) நன்மதிப்பும், மறுபுறம் சிறைவாசிகளின் கோபமும் பரிசாக கிடைக்க, சிறைவாசத்தில் நாட்கள் கழிகின்றன.சிறையிலுள்ள தனது அறை நண்பர் துரை (பாபி சிம்ஹா)வின் பிரச்சனையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டும், தன் மீது காவல் துறையினரின் வைத்துள்ள நல்ல அபிப்பிராயத்தை பயன்படுத்திக்கொண்டு, மருது (முனிஷ்காந்த்) மற்றும் பலர் சிறையிலிருந்து தப்பிக்க ஒரு திட்டம் தீட்டுகிறான் சேது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து சேது தீட்டிய திட்டத்திற்கு உடன்பட்டார்களா? பல தடங்கல்களை தாண்டி சேது தன் சக சிறைவாசிகளுடன் தப்பித்தாரா? சேதுவை கொல்ல திட்டம் தீட்டும் அண்ணாச்சியிடமிருந்து தப்பித்தாரா? தன் காதலி அனஸ்வரா ராஜனிடம் சேர்த்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

புதுமுக அறிமுக இளம் நாயகன் ஹிருது ஹாரூன் ஆக்ஷன், நடனம், காதல், மோதல், கொலை, திருட்டு, சதிவேலை, சாமார்த்தியம் என்று தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து, முழு திறனுடன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனுபவ நடிகர் போல் தெரியும் அளவிற்கு தேர்ந்த நடிப்பால் மனதில் நிற்கிறார். படம் முடியும் போது ஆக்ரோஷமாக பாடலுக்கு ஆடும் நடனம் அற்புதம்.
பாபி சிம்ஹா எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காத அமைதியான கைதியாக, முறைப்பும், அதட்டலும் செய்து தன் காரியத்தை சாதிக்கும் சில காட்சிகள் வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார்.

கண்டிப்பு மிகுந்த ஜெயிலராக ஆர்.கே.சுரேஷ் பார்த்தவுடன் பயமும், பவ்யமும் சிறைக்கைதிகளுக்கு ஏற்படும் வண்ணம் தன் முரட்டு பார்வை, உடல் மொழியால் மிரட்டலுடன் சிறை ழுழுவதும் வலம் வருகிறார்.

புதுமுக நாயகி அனஸ்வர ராஜன் வாய் பேச முடியாத ஊமை கேரக்டர் என்பதால் அதிக வசனம் பேச வாய்ப்பு இல்லை தன் முகபாவத்தால் அப்பாவி பெண் போல் திறம்பட செய்திருக்கிறார்.

முனிஷ்காந்த் காமெடி டைமிங் படத்திற்கு ப்ளஸ். மற்ற நடிகர்கள் சரத் அப்பானி, அருண் மற்றும் அரவிந்த் மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோர் அளவோடு, ஆரவாரவில்லாமல் வந்து போகிறார்கள்.

ஆக்ஷன் காட்சிகள் அவற்றின் நடன அமைப்பு மிகவும் யதார்த்தமாக உள்ளன.
சிறைச் சாலைச் சுற்றியே படம் முழுவதும் நகர்வதால் சிறைஅறைகள், சமையற் கூடம், சிறை காவலர்களின் அறை, பதுங்கி குழி தோண்டும் இடம், இவை அனைத்தும் பகல், இரவு போன்று ஒளிப்பதிவு செய்து தன்; முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார் பிரியேஷ் குருசாமி.

சாம் சி.எஸ்ஸின் பாடல்கள், இசை, பின்னணி இசை கதையை பாதிக்காத வண்ணம் கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் கிரிஸ்பாக கொடுத்து இறுதிக் காட்சியில் பரபரவென்று ஷார்ப்பாக கொடுத்திருக்கிறார் எடிட்டர் பிரவீன் ஆண்டனி.

ஸ்டண்ட் மாஸ்டர்களான ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் ராஜசேகர் ஆகியோர் தத்ரூபமாக ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். கலைத் துறை மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களின் சிறந்த பணியைப் பாராட்ட வேண்டும
மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்திரியில் படத்தின் தழுவலாக தமிழில் பிருந்தா இயக்கியிருக்கும் இரண்டாவது படம். சந்தர்ப்ப வசத்தால் சிறைக்கு செல்லும் இளம் கைதி, சிறைக்குள் சென்ற பிறகு அங்கிருக்கும் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு சிறைக்கண்காணிப்பாளர் நன்மதிப்பைப் பெற்று, பெரிய சதித்திட்டத்தை தீட்டி நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து தப்பிப்பதை காதல், மோதல், ஆக்ஷன் களத்துடன் விறுவிறுப்பு குறையாமல் வித்தியாசமாகவும், சாமார்த்தியமாகவும் திறம்பட இயக்கியிருக்கிறார் பிருந்தா. ஆக்ஷன் படங்களையும் தன்னால் கையாள முடியும் என்பதை நிரூபித்த இயக்குனர் பிருந்தாவை பாராட்ட வேண்டும். இயக்குநராக இது அவருக்கு இரண்டாவது படம் என்றாலும், அதை அவர் சிறப்பாக இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபூ ஜியோ ஸ்டூடியோஸ் சார்பில் மும்தாஜ்.எம் இணைந்து தயாரித்து வழங்கும், தக்ஸ் சிறந்த கதாபாத்திரங்களின் தேர்வு, திறமையான தொழில்நுட்பத்தால் உருவான ரசிக்கக்கூடிய வித்தியாசமான அனுபவத்தை தரும் சிறையிலிருந்து தப்பிக்கும் க்ரைம் த்ரில்லர்.