ஜோதி விமர்சனம் : ஜோதி தாய்மையின் அனுபவத்தை மனம் மகிழ உணர செய்வதற்குள் ஏற்படும் ஒரு பூகம்பத்தை அப்பட்டமாக தோலூரித்து ஜீவனுடன் காட்டும் படம் |மதிப்பீடு: 3.5/5
எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரிப்பில் ஜோதி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஏவி.கிருஷ்ண பரமாத்மா.
இதில் வெற்றி, ஷீலா ராஜ்குமார்,கிரிஷா குரூப்,இளங்கோ குமரவேல்,மைம் கோபி,நான் சரவணன்,சாய் பிரியங்கா ருத்,ராஜா சேதுபதி,பூஜிதா தேவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: செசி ஜெயா,இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத்தொகுப்பு: சத்ய மூர்த்தி, பாடல்கள்:கார்த்திக் நேத்தா, பாடகர்கள்: கே. ஜே ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், ஆர்த்தி கோவிந்த், நடனம்: சுவிகுமார், சண்டை: சக்தி சரவணன்,மக்கள் தொடர்பு: வின்சன் சி. எம்.
டாக்டர் சரவணன் அவருடைய நிறை மாத கர்ப்பிணி மனைவி ஷீலா ராஜ்குமார். எதிர் வீட்டில் குடியிருக்கும் குழந்தையில்லா தம்பதியர் சப் இன்ஸ்பெக்டர் வெற்றி -கிருஷா குரூப். ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்க்கும் கிருஷா அங்கே மயக்க நிலையில் ஷீலா இருக்க, வயிற்றை அறுத்து குழந்தையை யாரோ எடுத்து சென்று விட்டதை அறிந்து அதிர்ச்சியாகிறார். ஷீலாவை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் கிருஷா குரூப். இன்ஸ்பெக்டர் வெற்றி இந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட புகாரை விசாரிக்க தொடங்குகிறார். பல கோணங்களில் வெற்றி போலீஸ்காரர் குமராவேலுடன் தீவரமாக குற்றவாளியை தேடுகின்றார். இறுதியில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்தார்களா? தாயிடம் ஒப்படைத்தார்களா? எதற்காக இந்த கடத்தல் நடந்தது? உண்மையான பின்னணி என்ன? என்பதே படத்தின் எதிர்பாராத க்ளைமேக்ஸ்.
சப் இன்ஸ்பெக்டர் சக்தி சிவபாலனாக வெற்றி படம் முழுவதும் மும்முரமாக கடத்தல்காரனை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் அமைதியாக ஆனால் உறுதியாக தன் பணியை செவ்வென செய்து முடித்து அசத்தியுள்ளார். சில இடங்களில் வெறித்த பார்வையோடு முகபாவனையில் மாற்றங்களை கொண்டு வராமல் நடித்தது போல் உள்ளது.
அருள் ஜோதியாக ஷீலா ராஜ்குமார் கதையின் நாயகியாக, ஒரு தாய்மையின் பூரிப்பையும், மற்றவர்களின் இழப்பை கேள்விப்பட்டு தாங்க முடியாமல் அதன் சோகத்தையும், வேதனையையும் உணர்ந்து நயம்பட பிரதிபலித்து அதை நடனத்தால் அந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதம் அருமை. அனாதையான தன்னை தன் சொந்த குழந்தைபோல் வளர்த்த தந்தையின் அன்பை நினைத்து பூரிக்கும் இடத்தில் மனதை தொடுகிறார்.குழந்தையில்லாத வேதனையை தன் கணவர் உணரச் செய்ய அவர் எடுக்கும் முயற்சி அதிர்ச்சியளித்தாலும், அதனால் பல குடும்பங்களை காப்பாற்றிய மனதிருப்தியோடு குழந்தையை தானாமாக கொடுத்து விட்டுச் செல்லும் இடத்தில் தனித்து நின்று கை தட்டல் பெறுகிறார்.
வெற்றியின் மனைவி ஜானகியாக கிரிஷா குரூப், போலீஸ்காரர் முத்து குமாரசுவாமியாக இளங்கோ குமரவேல்,தந்தை தமிழரசுவாக மைம் கோபி,டாக்டர் அஸ்வினாக சரவணன்,சாந்தியாக சாய் பிரியங்கா ருத், ரங்காவாக ராஜா சேதுபதி, காமினியாக பூஜிதா தேவராஜ் ஆகியோர் சரியான தேர்வு படத்தின் வெற்றிக்கு பெரிதும் உழைத்துள்ளனர்.
பச்சிளம் குழந்தை கடத்தலில் தொடங்கும் படம், மருத்துவமனை, பரிசோதனை நிலையம், போலீஸ் விசாரணை என்று படம் முழுவதும் பரபரப்பாகவே செயல்பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செசி ஜெயா.
கார்த்திக் நேத்தா பாடல் வரிகளில் கே.ஜேஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், ஆர்த்தி கோவிந்த் ஆகியோர் பாடிய பாடல்களின் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையும், பின்னணி இசையும் கேட்கும் ரகம்.
சத்ய மூர்த்தி இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக படத்தொகுப்பை செய்துள்ளார்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிறந்த பச்சிளம் குழந்தையை கடத்தும் கும்பலைப் பற்றிய திடுக்கிடும் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களை திறம்பட கொடுத்து, அப்பா-மகள் சென்டிமென்ட், குழந்தையில்லா தம்பதியின் மனவேதனை, குழந்தை பிறக்கும் போது கடத்தப்படும் கொடுமை, அதை மறைக்கும் மருத்துவமனை, அதற்கு உடந்தையாக இருந்து செயல்படும் பணமோசடி கும்பல், தலசீமியா இரத்த குறைபாடு நோய் என்று முக்கிய விவாதங்களில் பேசும்பொருளாக இந்த படத்தை தந்துள்ளார் இயக்குனர் ஏவி.கிருஷ்ண பரமாத்மா.இதில் முக்கியமாக திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து, மர்ம முடிச்சுக்களை பல வித திருப்பத்துடன் சொல்லி இணைப்பு பாலமாக செயல்பட்டிருக்கிறார். இந்தியாவில் நாள்தோறும் 173 குழந்தைகள் காணாமல் போகிறது. வருடத்திற்கு 40000 குழந்தைகள் என்ற விகிதத்தில் இருக்க, அதில் 11000 குழந்தைகள் கண்டுபிடிக்க முடியாமல் போகிறதை புள்ளிவிவரங்களுடனும், உண்மையாக தன்னுடைய கிராமத்தில் நடந்த சோக நிகழ்ச்சியையும் மையப்படுத்தி, தீவர தேடுதல் வேட்டையில் இரண்டு மணி நேரத்தில் காணாமல் போன குழந்தையை மீட்ட இன்ஸ்பெக்டரின் சாதுர்யம்,சாமர்த்தியத்தை எடுத்துரைத்து அதை தன்னுடைய கற்பனை திறனையும் கலந்து திரைக்கதையமைத்து சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஏவி.கிருஷ்ண பரமாத்மா. பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை மற்றும் உஷாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இதற்கான தீர்வும், முயற்சியும், நடவடிக்கையும் அரசின் கையில் தான் உள்ளது என்பதை அறிவுறுத்தியுள்ளார். பாராட்டுக்கள்.
மொத்தத்தில் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரிப்பில் ஜோதி தாய்மையின் அனுபவத்தை மனம் மகிழ உணர செய்வதற்குள் ஏற்படும் ஒரு பூகம்பத்தை அப்பட்டமாக தோலூரித்து ஜீவனுடன் காட்டும் படம்.